அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் மற்றும் மெக்சிகோ வளைகுடாத் துறைமுகங்களில் பணி புரியும் துறைமுகத் தொழிலாளர்களின் ஆறாண்டுக் கால ஊதிய ஒப்பந்தம் செப்டம்பர் 30 இரவுடன் முடிந்துவிட்டது.
சர்வதேச துறைமுகத் தொழிலாளர்கள் சங்கம் (International Longshoremen’s Association, ILA.) 45 ஆயிரம் துறைமுகத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. கண்டெய்னர் கப்பல் கம்பெனி முதலாளிகளின் ஐக்கிய அமெரிக்க கடலோரக் கூட்டமைப்புடன் (United States Maritime Alliance USMX) ஒருமாத காலமாக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆயினும் செப்டம்பர் 30 (திங்கட்கிழமை) இரவு வரையிலும் எவ்வித ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. எனவே அக்டோபர்1 (செவ்வாய்) அன்று அதிகாலை 12.01 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் என்று அறிவித்து விட்டது ஐ.எல்.ஏ. தொழிற்சங்க தலைமை.
இந்த வேலை நிறுத்தம் கிழக்குக் கடற்கரையின் வடக்கே மைனேவிலிருந்து தெற்கில் டெக்ஸாஸ் வரையிலும் (Maine to Texas) உள்ள 36 துறைமுகங்களிலும் ஒருசேர நடைபெறுகிறது. வேலைகள் அனைத்தும் அப்படி அப்படியே நிறுத்தப்பட்டு விட்டன. அனைத்து தொழிலாளர்களும் வேலையிலிருந்து வெளியேறி விட்டனர். தொழிற்சங்கத்தின் அறிவிப்பை மீறி ஒரு துரும்பும் அசையவில்லை. தொழிலாளர்களிடத்தில் அத்தகைய இறுக்கமான வர்க்க ஒற்றுமை கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களும் தங்களின் ஒற்றுமை மட்டுமே தமது பலம் என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். இதற்கு முன்னர் 1977 ஆம் ஆண்டு தான் துறைமுகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்திருக்கிறது என்பது கவனத்திற்குரியதாகும்.
பேச்சுவார்த்தை முடிவுக்குப் பின் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய ஐ.எல்.ஏ. தொழிற்சங்கத்தின் தலைவர் ஹரால்டு டேகெட் (Harald Dagget), “நிர்வாகத்தின் கூட்டமைப்பு முன் வைக்கும் ஒப்பந்தம் தொழிலாளர்களின் கோரிக்கைகளிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. உண்மையில் அது தொழிலாளர்களை இழிவு படுத்துவதாக உள்ளது” என்று கண்டனம் தெரிவித்தார்.
“தேவைப்படும் காலம் வரை வேலை நிறுத்தத்தை நீட்டிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் ஊதிய உயர்வு கோரிக்கை ஏற்கப்படுவதுடன் தானியங்கி மயமாக்கும் அவர்களின் திட்டத்தைக் கைவிடும் வரையிலும் எங்களது வேலை நிறுத்தம் தொடரும்” என்று ஆணித்தரமாக அறிவித்திருக்கிறார். மேலும் “இந்த வேலை நிறுத்தத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் அவர்களே” என்றும் “வேலைநிறுத்தம் முடிவுக்கு வர வேண்டும் என்றால் எங்கள் கோரிக்கைகள் இரண்டும் ஏற்கப்பட வேண்டும்” என்றும் அறுதியிட்டுக் கூறியுள்ளார். முதலாளிகளின் யூ.எஸ்.எம்.எக்ஸ். கூட்டமைப்பிலிருந்து இன்னும் உரிய பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தொழிலாளர்களின் கோரிக்கைகள்:
துறைமுகத் தொழிலாளர்களுக்கு இப்பொழுது இருக்கும் ஊதியம் ஒரு மணி நேர வேலைக்கு 39 டாலர் என்பதாகும். இதிலிருந்து ஒரு ஆண்டுக்கு 5 டாலர் என்ற விகிதத்தில் ஆறு ஆண்டுகளுக்கு 30 டாலர் கூடுதலாகக் கேட்கின்றனர்.
அதாவது ஆறாம் ஆண்டு இறுதியில் ஒரு மணி நேர வேலைக்கு 69 டாலராக இருக்கும். மேலும் அது இப்போது உள்ள ஊதியத்திலிருந்து 77% உயர்வாக அமையும்.
அடுத்தது, துறைமுகப் பணிகளைத் தானியங்கி மயமாக்கும் முதலாளிகளின் திட்டத்தை முற்றாகக் கைவிட வேண்டும்.
இந்த இரண்டு கோரிக்கைகளை முன் வைத்துத் தான் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஊதிய உயர்வு மட்டும் அல்லாமல் தங்கள் வேலைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தொழிலாளர்கள் உறுதியுடன் உள்ளனர்.
ஆனால் நிர்வாகம் இறுதியாகக் கொடுக்க முன் வந்திருக்கும் உயர்வு அதே ஆறு ஆண்டுகளுக்கு 59 சதவீதம் ஆகும். மேலும் தானியங்கி மயமாக்குவதில் பகுதி அளவில் மட்டுமே செய்ய இருப்பதாகவும் அதைத் தவிர்க்க முடியாது என்றும் கூறியுள்ளது. இதை ஏற்க முடியாது என்று சங்கத் தலைமை கறாராக மறுத்துவிட்டது.
போராட்டத்தின் முக்கியத்துவமும் விளைவுகளும்:
அமெரிக்காவின் மைய மற்றும் கிழக்கில் உள்ள எல்லா பிராந்தியங்களுக்கும் தேவையான பல்வகை உணவுப் பொருட்கள், வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகள் மற்றும் பழச்சாறுகள், ஆடைகள் முதல் பல வகையான வீட்டு உபயோகப் பொருட்களும் கிழக்கு துறைமுகங்களிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இன்னும் பல வகை இயந்திரங்களுக்கான உதிரிப்பாகங்கள், சமையலுக்கான இயற்கை எரிவாயு, நவீன கார்கள் உள்ளிட்ட பல ரக வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான பெட்ரோல் என்று பலவும் இந்த துறைமுகங்களில் தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அதுபோலவே ராணுவத் தளவாடங்கள் உள்ளிட்டு பல வகையான கனரக இயந்திரங்களும் இயந்திரப் பொருட்களும் இந்த துறைமுகங்களிலிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
படிக்க: அமெரிக்காவில் போயிங் விமானத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
இது போலவே அமெரிக்காவின் மைய மற்றும் மேற்கு பிராந்தியங்களுக்கு மேற்குக் கடற்கரை துறைமுகங்களிலிருந்து தான் பெரும் கண்டெய்னர் கப்பல்கள் மூலம் இறக்குமதியும் ஏற்றுமதியும் நடந்து வருகிறது. அதேசமயம் மேற்குக் கடற்கரை துறைமுகங்கள் சென்ற ஆண்டு புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டன. அங்கும் 42 ஆயிரம் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேச துறைமுக மற்றும் சேமிப்புக் கிடங்கு தொழிலாளர்கள் சங்கம் (International Longshore and Warehouse Union – ILWU) தனியே இயங்கி வருகிறது.
மேற்குக் கடற்கரையில் உள்ள 32 துறைமுகங்களும் தற்போதும் இயங்குகின்றன என்றாலும் கிழக்கு துறைமுகங்களுக்குப் பதிலாக மேற்கு துறைமுகங்களைப் பயன்படுத்தி இறக்குமதியோ ஏற்றுமதியோ செய்து விட முடியாது. கிழக்கிலிருந்து மேற்குக் கடற்கரை துறைமுகத்திற்கு தெற்கில் உள்ள பனாமா கால்வாய் வழியாகத்தான் செல்ல முடியும் என்பதால் 8000 கடல் மைல்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
தரை வழியாகக் குறுக்கே செல்வதானால் 4000 கிலோ மீட்டர் அளவு சாலைப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இவ்விரண்டு முயற்சிகளுமே ஏராளமான செலவு பிடிக்கக் கூடியன ஆகும் எனவே அமெரிக்காவின் ஏற்றுமதி இறக்குமதிகளுக்குக் கிழக்கு மேற்கு இரு கடற்கரைகளில் உள்ள துறைமுகங்களும் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக கிழக்கு கடற்கரை துறைமுகங்கள் தான் ஐந்தில் மூன்று பங்கு சரக்குகளைக் கையாளுகின்றன.
அதனால் தான் இந்த வேலை நிறுத்தத்தில் சில விலக்குகளை அறிவித்திருக்கிறது தொழிற்சங்கத் தலைமை.
பயணிகள் கப்பல்கள், சுற்றுலாக் கப்பல்கள் போன்றவற்றுக்கான சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை.
பழச்சாறுகள் போன்ற விரைவில் கெட்டுப் போகும் உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் டேங்கர் கப்பல்கள் போன்றவற்றுக்கான பணிகள் தொடரும்.
அதேபோன்று ராணுவத் தளவாட ஏற்றுமதிகள் தடையின்றி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
எனினும் பல தரப்பு கார்ப்பரேட் தொழில் முதலாளிகளும் இந்த துறைமுகத் தொழிலாளர் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்று முனைப்புக் காட்டுகின்றனர். அமெரிக்க அரசின் தலைமை ஆய்வாளர் (chief analyst) பீட்டர் ஸான்ட் (Peter Sand) இந்த வேலை நிறுத்தத்தின் தொடர் விளைவுகள் அமெரிக்காவைக் கடந்து ஆசியா ஐரோப்பாவையும் பாதிக்கும் என்றும், எனவே இவ்வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், அதற்கு ஜனாதிபதியின் தலையீடு அவசியம் என்றும் கூறியுள்ளார்.
அடுத்து 200க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் முதலாளிகள் ஒன்று சேர்ந்து இந்த வேலை நிறுத்தத்தைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று அமெரிக்காவின் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் (The United States Chamber of Commerce) தலைவர் சுசானே கிளார்க் (Suzanne P. Clark) பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது பற்றிய விவகாரங்களை அப்படியே அதன் வழியில் அனுமதித்து விடுவது மனச்சான்றுக்கு ஏற்புடையதல்ல என்று ஜனாதிபதிக்கு மிகப் பணிவுடன் பக்குவமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படிக்க: சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 600 பேர் கைது!
மேலும் இந்த வேலை நிறுத்தத்தினால் நேரடியாகவும் உடனடியாகவும் ஏற்படக்கூடிய விளைவுகளை விட தொடர் விளைவுகள் மிகவும் பாரதூரமானவை என்று பல பொருளாதார வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நியூயார்க்கின் கவர்னர் கத்தி ஹோச்சல் (Kathy Hochul) உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட் சேவைக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என்றாலும் வேலை நிறுத்தம் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பதைப் பொறுத்து பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது கண்டெய்னர் கப்பல் முதலாளிகள் மட்டுமல்ல, நாட்டின் பிற தொழில் முதலாளிகளும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தையும் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் தொழிற்சங்க தலைமையையும் கண்டு அஞ்சுகிறார்கள் என்பதும் யூ.எஸ்.எம்.எக்ஸ் (USMX) முதலாளிகளை ஒப்பந்தம் ஏற்படுத்தாதற்காகச் சாடுகிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அதே சமயம் ஜனாதிபதியின் சிறப்பு அதிகாரத்தைக் கொண்டு தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்கிவிட வேண்டும் என்கிற வேட்கையையும் வெளியிட்டிருக்கின்றனர். முதலாளிகளுக்கிடையே நிலவும் இந்த முரண்பாடுகள் தொழிலாளர்களுக்குச் சாதகமான சூழ்நிலையே.
ஆனால் இந்தத் தொழிலில் தங்களுக்கு ஏற்படுகின்ற சங்கடங்களைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறது யூ.எஸ்.எம்.எக்ஸ் கூட்டமைப்பு.
அதாவது கோடைக் காலங்களில் ஏற்படும் கடும் வறட்சி காரணமாக பனாமா கால்வாய் பயன்படுத்த முடியாமல் போவதாகவும் அதனால் தென் அமெரிக்காவைச் சுற்றிக்கொண்டு செல்ல நேர்வதாகவும் கூறுகின்றது. அதேபோன்று ஹௌத்தி அமைப்பினரின் தடைகள் காரணமாக சூயஸ் கால்வாயையும் செங்கடலையும் பயன்படுத்த முடியாமல் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு செல்ல நேருவதாகவும் இப்படி செலவுகள் மிகுவதால் தொழிலாளர்கள் கேட்கும் ஊதிய உயர்வைத் தர இயலாத நிலைமை இருப்பதாகவும் கூறுகின்றது.
ஆனாலும் ஜனாதிபதி ஜோ பை டன் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை இருப்பதால் தனது சிறப்பு அதிகாரத்தை (Taft – Hartley Act 1947) பயன்படுத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் இந்தப் பிரச்சனைகளைக் கூட்டுப் பேர முறையின் மூலமே இரு தரப்பிலும் பேசி தீர்க்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
உடனடி நிலைமைகள் பாரதூரமானதாக உள்ளன:
பல நாடுகளிலிருந்து வருகின்ற கப்பல்கள் பலவும் நடக்க இருக்கும் வேலை நிறுத்தத்தை முன் அனுமானித்து செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வந்து சேர்ந்து விட வேண்டும் என்று ஏராளமாக வந்து குவிந்து விட்டன. அவற்றில் பல துறைமுகங்களுக்குள்ளே நுழையவே முடியாமல் நடுக்கடலிலேயே காத்துக் கிடக்கின்றன. மேலும் “நியூயார்க் நகரத் துறைமுக எல்லையில் மட்டுமே ஒரு லட்சம் கண்டெய்னர்கள் இறங்கக் காத்திருக்கின்றன. இன்னும் ஒரு வாரத்தில் வந்து சேரும் வகையில் 35 கப்பல்கள் நடுக்கடலில் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கப்பலும் பல ஆயிரம் கண்டெனர்களை கொண்டிருக்கும்” என்று பதட்டத்துடன் கூறுகிறார் நியூயார்க் துறைமுகத் தலைமை அதிகாரியான ரிக் காட்டன் (Rick Cotton).
இந்த நெருக்கடியைத் துறைமுகத் தொழிலாளர்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற நிலைமை இருக்கிறது.
எனவே துறைமுகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்குக் கப்பல் கம்பெனி முதலாளிகள் நிச்சயமாகப் பணிந்தாக வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை என்று நிச்சயம் கூற முடியும்.
அமெரிக்கத் தொழிலாளர்கள் நாட்டின் முக்கிய துறைகளில் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை இறுக்கமாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். இதுவே கூட்டுப் பேர உரிமையில் அவர்களுக்கு உயர்ந்த இடத்தை வழங்குகிறது.
ஆனால் புதிய வகை ஒப்பந்த கூலிகளாகவும், வால்மார்ட் போன்ற நிறுவனங்களில் கடைச்சிப்பந்திகளாகவும், வேலையற்றோராகவும் இருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கு (அவர்களும் அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் தான் என்றாலும்) எந்த பலமும் இல்லை. அவர்கள் கடுமையாக நிர்க்கதியாக்க வைத்துச் சுரண்டப்படுகிறார்கள்.
அதாவது அமெரிக்காவில் தொழிலாளி வர்க்கத்தின் மேல் தட்டு பிரிவு தனித்து தங்கள் நலனை முன்னிறுத்திப் போராடி வெற்றியும் பெறுகிறது. அதேசமயம் கீழ்நிலை தொழிலாளர்கள் கடும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள் என்கிற எதார்த்தத்தை அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் உணர வேண்டும். எனவே தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் கீழ்த்தட்டு மேல் தட்டு என்று இல்லாமல் உடல் உழைப்பு மூளை உழைப்பு என்று வேறுபாடு பாராமல் உழைக்கும் வர்க்கம் என்கிற ஒற்றுமையே இன்றைய தேவையாகும். அந்த வர்க்க ஒற்றுமையைச் சாத்தியப்படுத்த வல்லது பாட்டாளி வர்க்க அரசியல் தான் என்பதைத் தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ள வேண்டிய காலமிது.
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram