ஒன்றிய மோடி அரசின் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR – National Commission for Protection of Child Right) தலைவர் பிரியங்க் கனூங்கோ, மதரசாக்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிதியினை நிறுத்தி, மதரசாக்களை மூட வேண்டும் என்று அக்டோபர் 11 அன்று மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையக் குழுவின் அதிகாரிகள் “நம்பிக்கையின் பாதுகாவலர்கள் அல்லது உரிமைகளை ஒடுக்குபவர்கள் மற்றும் குழந்தைகளின் அரசியலமைப்பு உரிமைகள் Vs மதரசாக்கள்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டிருந்த அறிக்கை மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
அவ்வறிக்கையில், சிறுபான்மையினரின் கலாச்சாரங்களைப் பாதுகாக்கும் வகையில் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் கல்விநிறுவனத்திற்குத் தேவையான நிதியினை அரசு வழங்குவதற்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 29 மற்றும் 30 பிரிவுகள் உரிமைகளை வழங்குகின்றன; ஆனால், மதரசாக்களில் (இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள்) மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் மதிய உணவுத் திட்டம் போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன; மேலும், மதரசாக்களில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள், அதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததால் மற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 1.2 கோடி இஸ்லாமிய குழந்தைகள் முறையான கல்வியைப் பெறவில்லை என்று 2021-22 தரவுகள் தெரிவிப்பதாக ஒரு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும், கட்டாயக் கல்வி (RTE: Right of Children to Free and Compulsory Education Act 2009) சட்டம் 2009-இன்படி மதரசாக்கள் மாணவர்களுக்குத் தேவையான கட்டாயக் கல்வியினை வழங்காமல் சட்டத்தை மீறியுள்ளது; அதோடு மதரசாக்களின் முதன்மைக் கவனம் மதம் சார்ந்த கல்வியைக் கற்றுக்கொடுப்பதிலே இருக்கிறது; எனவே முஸ்லீம் மத நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் நிதி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: மோடியின் ஆட்சியில் தொடர் நிகழ்வாகிவரும் இரயில் விபத்துகள்!
அதோடு மதரசாக்களில் படிக்கும் குழந்தைகள் மேல் அவர்களின் பெற்றோர்கள் அனுமதியின்றி மத போதனைகள் திணிக்கப்படுவது அரசியலமைப்பு பிரிவு 28(3)-ஐ மீறுவதாக உள்ளது. எனவே அங்கே உள்ள இஸ்லாமிய அல்லாத குழந்தைகளை உடனடியாக நீக்கி மற்ற பள்ளிகளில் சேர்ந்த பிறகு மதரசாக்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளதன் மூலம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் காவி கும்பலுக்கு கரசேவை செய்யத் துடிக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், செய்தியாளர் சந்திப்பின்போது, “இந்த நாடு அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் சொந்தமானது. ஆனால், பா.ஜ.க. அதனை மாற்ற விரும்புகிறது. சாதி மதங்களுக்கு இடையே மோதல்களை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் அரசியலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் முகமது பஷிர், அக்டோபர் 13 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “மதரசாக்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும் என்றும் மதரசா வாரியத்தைக் கலைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் உள்ள கருத்துக்கள் ஆழ்ந்த கவலை அளிக்கின்றன. இது இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் பரந்த திட்டம்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, “மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் குறைபாடுகள் உள்ளது. அதற்காகப் பள்ளிகளை மூடிவிட்டு நிதியை நிறுத்திவிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் மாணவர்களிடையே போதை பழக்கங்களும் அதிகரித்துள்ள நிலையில் அவற்றையெல்லாம் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தற்போது மதரசாக்களை மூட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதன் மூலம் பா.ஜ.க. கும்பலின் இஸ்லாமியர்கள் மீதான மத வெறுப்பு கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அமைப்பாக வெளிப்படையாக அறிவித்துக் கொண்டுள்ளது. பாசிச கும்பலானது இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றும் நோக்கில் பல்வேறு சட்டதிட்டங்களைக் கொண்டு வந்துள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாகவே தற்போது மதரசாக்களை மூடுவதற்கான வேலையில் இறங்கியுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram