ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்:
அரசு ஊழியர்களின் சேமிப்பான ரூ.10 இலட்சம் கோடியை
களவாடும் மோசடி
ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கென்று கடந்த ஆகஸ்டு மாதத்தில் புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme – UPS) ஒன்றை அறிவித்துள்ளது. ஏற்கெனவே, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் என்றும், தேசிய ஓய்வூதியத் திட்டம் என்றும் இரண்டு ஓய்வூதியத் திட்டங்கள் நடைமுறையிலுள்ள நிலையில், மூன்றாவது ஓய்வூதியத் திட்டம் ஒன்றை மோடிக் கும்பல் கொண்டுவந்துள்ளது. எதற்காக இந்த மூன்றாவது ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது? இது யாருடைய நலனுக்கானது? என்பதை அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, அரசின் திட்டம் என்கிற வகையில் உழைக்கும் மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம்
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme – OPS) என்பது காலனிய காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வந்ததாகும். 1947-க்கு பிறகும் அப்படியே தொடர்ந்து வருகிறது. அது, வரையறை செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Defined Benefit Pension Scheme) என்கிற வகையை சேர்ந்ததாகும்.
அதனடிப்படையில், அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் பெற்ற கடைசி மாத ஊதியத்தின் 50 சதவிகிதத் தொகை, அதற்கு அடுத்த மாதத்திலிருந்து அவருக்கு ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். அவரது இறப்பிற்குப் பின் அவர் 67 வயது அடையும் வரை இதே அளவு ஓய்வூதியமும், அதன் பின்னர், அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 50 சதவிகிதம் அவரது இணையருக்கு வழங்கப்படும்.
மேலும், ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் (அடிப்படை சம்பளம் + பஞ்சப்படி (DA)) 10 சதவிகிதத் தொகை பொது சேமநலத் திட்டத்திற்காக (General Provident Fund – GPF) பிடித்தம் செய்யப்படும். இந்த சேமநல நிதி அதற்கென தனியே இயங்கும் ஊழியர்களுக்கான சேமநல நிதி நிறுவனத்தின் (Employees Provident Fund Organisation – EPFO) மூலம் வங்கிகள் மற்ற பிற அரசு தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். இறுதியில் ஊழியர் ஓய்வு பெறும் நாள் வரையிலான வட்டியுடன் சேர்த்து கணிசமானதொரு தொகை வழங்கப்படும்.
இது தவிர, ஓர் அரசு ஊழியரின் பணி ஓய்வுக்கு பின் அவரது பணிச்சேவைக்கு சன்மானம் என்கிற வகையில், ஓர் ஆண்டு பணிக்கு அரை மாதச் சம்பளம் என்கிற முறையில் கணக்கிடப்பட்டு (அதாவது 30 ஆண்டு பணி சேவைக்கு 15 மாத ஊதியம்) ஊழியர் ஓய்வு பெறும் நாளில் கருணைத்தொகையாக (Gratuity) வழங்கப்படும்.
அந்தக் கருணைத் தொகைக்கான உச்ச வரம்பு, 2016-ஆம் ஆண்டு வரையிலும் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாயாக இருந்தது. பின்னர், 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஒன்றிய அரசு 20 லட்சம் ரூபாயாக அதனை உயர்த்தியது. தற்போது, கடந்த செப்டம்பர் மாதத்தில் அதனை 25 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
இந்த ஓய்வூதியத் திட்டத்தின் முழு பலனைப் பெறுவதற்கு ஓர் அரசு ஊழியர் 20 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். பணியாண்டுகள் குறைவதற்கு ஏற்ப இந்த பலன்களும் அதற்குரிய விகிதத்தில் குறையும். அதேசமயம் அதன் குறைந்தபட்ச பலனை பெற குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் எனப்படுவது இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
இதில் ஊழியர்களிடமிருந்து மாதாந்திரமாக பிடித்தம் செய்யப்பட்ட 10 சதவிகித சேமநல நிதிக்கு மட்டுமே “இ.பி.எஃப்.ஓ.” பொறுப்பேற்கும். மற்றபடி கருணைத்தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான நிதிப் பொறுப்பை அரசே முழுமையாக ஏற்கும்.
இந்தப் பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வாழ்வை உத்தரவாதப்படுத்தும் விதமாக இருந்தது. இந்தப் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் உட்கூறுகளை சரியானபடி உள்வாங்கிக் கொள்வது அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டிருக்கும் ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களின் சாதக பாதகங்களை புரிந்துக் கொள்ள உதவியாக அமையும்.
தேசிய ஓய்வூதிய திட்டம்
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த இப்பழைய ஓய்வூதியத் திட்டமானது, 01.01.2004 அன்று இதே பாசிச பா.ஜ.க-வின் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. “ஒரு கோடிக்கும் கூடுதலான ஒன்றிய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் என்பது ஒரு கட்டத்தில் பட்ஜெட்டில் கணிசமான தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஏனெனில், இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் கூடிக் கொண்டே செல்கிறது. 20 ஆண்டுகள் அரசுப் பணி செய்த ஒருவருக்கு அடுத்துவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியம் வழங்க வேண்டியிருக்கும். இது நாட்டு மக்களின் மீது ஏற்றப்படும் சுமையாகும். எனவே, கண்டிப்பாக இவ்வொய்வூதியத் திட்டத்திற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்” என்று இதற்கு விளக்கம் கூறப்பட்டது.
அந்த வகையில், அரசு ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் ஒரு தொகையைப் பிடித்தம் செய்து, அப்படிச் சேர்ந்த தொகையை கொண்டு தொகுப்பூதியம் போன்ற ஒன்றை ஓய்வூதியமாக வழங்கலாம் என்று உலக வங்கி மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் அரசியல் பொருளாதார ஆலோசகர்கள், வல்லுநர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதனை உள்ளடக்கி, தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme – NPS) என்ற பெயரில் புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில், பழைய திட்டத்தில் இருந்த, ஓய்வு பெறும் ஊழியருக்கு இறுதியாக அவர் பணியிலிருந்தபோது பெற்ற மாதச் சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியம் என்ற முறை ரத்து செய்யப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கென்று இரு வேறு ஓய்வூதியத் திட்டங்கள் இருக்க முடியாது என்றும் அவ்வாறு இருப்பது அநீதி என்றும் முன்னெப்போதையும் விட தீவிரமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு மாற்றாக, மாதந்தோறும் ஊழியர்களின் ஊதியத்திலிருந்து சேமநலநிதி என்று 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும் தொகையுடன் அரசு தன் சார்பில் 10 சதவிகிதம் (இந்தத் தொகையை 2019-ஆம் ஆண்டு 14 சதவிகிதம் என்று உயர்த்தியது) தொகையை ஊழியர் கணக்கில் சேர்க்கும்.
ஊழியர் ஓய்வு பெறும் போது, அவரது கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும் மொத்த தொகையில் 60 சதவிகிதம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு விடும். மீதமிருக்கும் 40 சதவிகிதத் தொகையை அந்தந்த ஊழியர் விருப்பம் தெரிவிக்கும் அரசு அங்கீகரித்திருக்கும் சில அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் (எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., யூ.டி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ…) அல்லது பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.
அவ்வாறு முதலீடு செய்யப்படும் தொகைக்கு அந்த நிறுவனம் வழங்கும் வட்டி தொகையானது அந்த ஊழியருக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த ஓய்வூதியத் தொகை என்பது மிகவும் சொற்பமான அளவில் அதாவது பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான அளவிலேயே இருக்கும். மற்றபடி கருணைத்தொகையானது பழைய முறையிலேயே தொடரும். இதுவே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் சாரமாகும். இது ஊழியர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (Contributary Pension Scheme- CPS) என்றும் அழைக்கப்படுகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டம்: வாஜ்பாயி அரசின் சூழ்ச்சி
நமது சமூகத்தில், சாதாரண மக்களைப் பொறுத்தவரை அரசுப்பணி என்பதுதான் வாழ்க்கை உத்தரவாதத்திற்கான ஒரே வழியாகவும், ஓய்வூதியம் என்பது ஒருவருக்கு மரணம் வரை கண்ணியமான வாழ்வை உத்தரவாதம் செய்வதாகவும் கருதப்படுகிறது.
எனவே, ஓய்வூதியம் ரத்து செய்யப்படுமானால் அதை அரசு ஊழியர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாதென்று அரசு நன்கு உணர்ந்திருந்தது. ஆகையினால் பாசிச பா.ஜ.க-வின் வாஜ்பாய் அரசு அன்றைக்கு ஒரு சூழ்ச்சியை மேற்கொண்டது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுகின்ற அன்று ( 01-01-2004) வரையிலும் அரசுப் பணியில் உள்ள ஊழியருக்கு இந்த புதிய அறிவிப்பு பொருந்தாது என்றும் அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேரும் புதிய ஊழியர்களுக்கு மட்டுமே இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என்று அரசு ஊழியர்களை பிரித்தாலும் சூழ்ச்சியோடு தனது திட்டத்தை அறிவித்தது.
அன்று, அரசு ஊழியர் சங்கங்கள் அனைத்தும் சந்தர்ப்பவாத நிலை எடுத்து அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக அரசை நிர்பந்திக்கும் வகையில் எதிர்ப்போ போராட்டமோ இல்லாமல் கமுக்கமாக இருந்து விட்டன. அதன் மூலம் அன்றைய சங்கத் தலைமைகள் எதிர்கால ஊழியர்களின் நலனை அரசிடம் அடகு வைத்தன.
நெருக்கடியும் அதனை எதிர்கொள்ளும் கார்ப்பரேட் சதித்தனமும்
இன்றைக்கு, 2004-க்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் ஓய்வு வயதை எட்டவில்லை. இதுவரை ஓய்வு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு. ஏறக்குறைய அனைவரும் இனிவரும் உடனடி ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளனர். இந்நிலையில்தான் ஓய்வூதிய திட்டம் குறித்தான கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கென்று இரு வேறு ஓய்வூதியத் திட்டங்கள் இருக்க முடியாது என்றும் அவ்வாறு இருப்பது அநீதி என்றும் முன்னெப்போதையும் விட தீவிரமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் எனும் கோரிக்கையும் பழைய ஓய்வூதியமே தம் வாழ்வை உத்தரவாதப்படுத்தும் என்ற கருத்தும் அரசு ஊழியர்கள் அனைவரின் உணர்வுபூர்வமான நிலைப்பாடாக மாறி நிற்கிறது.
இதனால்தான், “இந்தியா” கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது ஐந்து மாநிலங்களில் (ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகியன) புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தன. மேற்கு வங்க மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னமும் அப்படியே நடைமுறையில் இருந்து வருகிறது. கேரளாவும் தமிழ்நாடும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவதற்காக அரசு ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியோ தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து வருகிறார்.
இச்சூழலில்தான், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை பா.ஜ.க. அரசிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பொருட்டு, ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கும் டி.வி.சோமநாதனால் வகுத்துக் கொடுக்கப்பட்ட திட்டம்தான் புதிதாக, வந்திருக்கும் மோசடியான “ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமாகும்”.
தற்போது நான்கு மாநில சட்டமன்றத் தேர்தலில், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் பாசிசக் கும்பல் தன்னுடைய பிம்பத்தை தூக்கிநிறுத்த இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்கள் கோரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் காட்டிலும் சிறந்தது என்றும், இதனால் அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் நன்மை கிடைக்கும் என்றும் கதையளக்கிறது.
அதோடு, அரசு ஊழியர்களின் கவனத்தைக் கவர்ந்திடும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் சில அம்சங்களை மட்டும் எடுத்துக்காட்டுகிறது. சான்றாக, கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவிகிதம் ஊதியம் வாழ்நாள் முடிய ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறிப்பிடுவதாக கூறுகிறது.
ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாமல் கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை நுட்பமாக பார்க்கும் போதுதான் பாசிச பா.ஜ.க. அரசின் கேடான உள்நோக்கங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
தற்போது நான்கு மாநில சட்டமன்றத் தேர்தலில், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் பாசிசக் கும்பல் தன்னுடைய பிம்பத்தை தூக்கிநிறுத்த இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏனெனில், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கணக்கிடப்படும் மாதச் சம்பளம் எனப்படுவது பஞ்சப்படியை உள்ளடக்கியதாகும். ஆனால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் அடிப்படைச் சம்பளத்தில் (பஞ்சப்படி இல்லாமல்) மட்டும் 50 சதவிகிதம் வழங்கப்படுகிறது. ஆகையால் இது குறைக்கப்பட்ட ஓய்வூதியம் ஆகும்.
மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் கடைசி மாதம் பெற்ற சம்பளத்தில் 50 சதவிகிதம் என்று இருந்ததை இப்பொழுது கடைசி ஆண்டு சம்பள சராசரியில் 50 சதவிகிதம் என்றும் திருத்தப்பட்டுள்ளது. இதுவும் ஓய்வூதியப் பலனை குறைக்கிறது.
மொத்தத்தில், இது மிகப்பெரும் அளவில் ஓய்வூதியத்தை குறைத்து விடுகிறது. ஆனால், சில்லறையான சில அம்சங்களை மிகைப்படுத்திக் காட்டி இந்த ஓய்வூதியத் திட்டம் அனைத்து வகைகளும் சிறப்பாக இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது பாசிச மோடி கும்பல்.
மூன்று ஓய்வூதியத் திட்டங்களை ஒப்பிட்டும் பிற வகைகளிலும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் இந்த ஓய்வூதியக் குறைப்பை மறைத்து, மோடி அரசுக்கு துணை சேவை செய்கின்றன.
மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென அரசு ஊழியர் சங்கங்கள் கேட்டுவரும் பொழுது, மூன்றாவது ஒன்றை கொண்டு வருவதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி எந்த ஊடகங்களும் வாய் திறப்பதில்லை.
அதே வேளையில், அரசு ஊழியர் சங்கங்கள் எவையும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் சதித்தனத்தை அம்பலப்படுத்தாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன.
அப்பட்டமான கார்ப்பரேட் பகற்கொள்ளை
ஒருங்கிணைந்த ஓய்வூதியத்தின் சதிப் பின்னணியானது, நமது கற்பனைக்கு எட்டாததாகும்.
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் வருகின்ற நிதியாண்டில் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றது. அதன்படி, அதற்கு முந்திய நாள் வரையிலும் ஓய்வு பெற தகுதி பெறுகின்ற எல்லோரும் இந்த புதிய திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் அதாவது 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி பணிக்கு சேர்ந்தவர்கள் உட்பட தற்போதுள்ள அனைவரும் இந்தத் திட்டத்தில் சேர்ந்துக் கொள்ளலாம் என்று அரசு ஊழியர்களுக்கு வாய்ப்பளிப்பதாகக் கூறுகிறது.
அதேசமயம், புதிய திட்டத்திற்கு ஒருவர் மாறி கொண்டு விட்டால் மீண்டும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு உறுதியாக திரும்ப முடியாது என்று மறுத்துவிடுகிறது. நேர்பொருளில் கூறவேண்டுமென்றால், ஓர் அரசு ஊழியருக்கு அவரும் அரசும் சேர்ந்து சேமித்து வைத்திருக்கின்ற மொத்த தொகை வேண்டுமா அல்லது அவரது வாழ்நாள் முழுவதும் அரை மாத சம்பளம் ஓய்வூதியமாக வேண்டுமா என்பதை கறாராக முடிவு செய்துவிட வேண்டும். ஒருவர் இந்த இரண்டில் ஏதோ ஒரு திட்டத்தின்படியான பலனை மட்டுமே பெற முடியும் என்று வரையறை செய்கிறது.
20 ஆண்டு காலமாக மாதச் சம்பளத்தில் 24 சதவிகிதம் ஒவ்வொரு ஊழியருக்கும் சேமிப்பாக சேர்ந்து இருக்கின்ற தொகை பல லட்சங்களாகும். சான்றாக, சராசரியாக ரூ.50,000 மாத ஊதியம் பெறுகின்ற ஓர் அரசு ஊழியருக்கு இந்த சேமிப்புத் தொகையின் மதிப்பானது 35 முதல் 40 லட்சம் ரூபாய் வரையில் இருக்கும். ஓய்வு பெறும் போது, இதில் 60 சதவிகிதம் மொத்தத் தொகையாக கைக்கு வரும். ஆனால், 50 சதவிகித மாத சம்பளம் ஓய்வூதியமாக கிடைக்காது. இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுமாறு, பாசிச பா.ஜ.க. அரசு அரசு ஊழியர்களை மிரட்டுகிறது. வெளிப்படையாக பகற்கொள்ளையடிக்கிறது.
இப்போதைய நிலையில் 23 லட்சம் அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் 30 லட்சம், 40 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேல் என்று சேமித்து வைத்திருக்கும் மொத்த தொகை சற்றேறக்குறைய 6.5 லட்சம் கோடி ரூபாயாகும். இன்னும் சில மாநில அரசு ஊழியர்களையும் சேர்த்து தற்போது அரசின் கைவசம் உள்ள மொத்த சேமிப்புத் தொகை 10.6 லட்சம் கோடி ரூபாயாகும். இந்தியாவின் அரையாண்டு பட்ஜெட்டுக்கான இந்தப் பெரும் தொகை தான் பாசிச பா.ஜ.க. அரசின் கண்களை தற்போது உறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த கையிருப்பு சேமிப்புத் தொகையை கபளீகரம் செய்து தங்களின் எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு படையலிடும் நோக்கத்திலிருந்து தான் பாசிச பா.ஜ.க. அரசு இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. மற்றபடி அரசு ஊழியர்களின் எதிர்காலம் என்பதை பற்றி எல்லாம் பாசிச பா.ஜ.க. அரசுக்கு எந்த அக்கறையும் கிடையாது.
அப்படியெனில், இப்பொழுது 2024 செப்டம்பர் மாதத்தில் ஊழியர் பங்களிப்பான 10 சதவிகிதத்துடன் அரசின் பங்களிப்பை 14 சதவிகிதத்திலிருந்து 18.5 சதவிகிதமாக உயர்த்தியிருப்பது ஏன் என்று கேள்வி எழலாம். இதுவும், அரசு ஊழியர்களின் விரல்களை வெட்டி அவர்களுக்கே சூப்பு வைக்கும் அயோக்கியத்தனம்தான்.
அதாவது, இனிமேல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையான 50 சதவிகிதத்தை மாதாந்திரம் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டியிருக்கும். இருப்பில் இருக்கும் சேமிப்புத் தொகையை கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கி கொடுத்து விட்ட பிறகு, ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக அரசின் கையில் இருக்கும் சேமிப்பை அதிகரித்துக் கொள்ளும் நோக்கத்தில் இந்த தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது. எனவே, 14 சதவிகிதத்தை 18.5 சதவிகிதம் என்றோ அல்லது 38.5 சதவிகிதம் என்றோ உயர்த்துவதால் ஊழியர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.
அரசு ஊழியர்களின் சேமிப்பைக் கொள்ளையடிப்பதிலும் பா.ஜ.க-விற்கு வாஜ்பாய் தான் முன்னோடி. 1998 மே மாதத்தில், நிதிநிலை நெருக்கடியை காரணங்காட்டி அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 60 ஆக உயர்த்தியது அன்றைய வாஜ்பாய் அரசு. இதனால், அந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற இருந்த அரசு ஊழியர்களின் கருணைத்தொகை உள்ளிட்ட மொத்த ஓய்வூதியப் பணப்பலன்களையும் சேர்த்தால் அன்றைய நிலையில் சில ஆயிரம் கோடிகள் சேரும். இந்த சில ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஊழியர்களின் பணத்தை எடுத்து தமது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி இறைத்தது.
கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுத்த அரசு ஊழியர் சங்கங்களின் பொருளாதாரவாதம்
இப்படி அப்பட்டமான பகற்கொள்ளை நடக்கும் போது, இதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தாமல், “பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்து” என்று ஒற்றை வரியில் முழக்கங்களை வைத்து, பாசிச மோடி அரசுக்கு அரசு ஊழியர் சங்கங்களே துணை போவதற்கு காரணம் என்ன? இதுதான், அரசியலற்ற பொருளாதாரவாதத்தின் விளைவாகும்.
இந்திய தொழிற்சங்கங்களில் கோலோச்சிய பொருளாதாரவாதம் 1990-களில் தாராளமயம்-தனியார்மயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை அரங்கேறியதற்கு பின்னால், தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டன. ஒப்பந்த தொழிலாளர் முறை புகுத்தப்பட்டது. நிரந்தர வேலை என்பது எல்லா துறைகளிலும் கேள்விக்குறியானது. ஆனால், பலமான தொழிற்சங்கங்களாக இருந்தும், தனியார்மயத்திற்கு எதிரான உறுதியான போராட்டங்களைக் கட்டியமைக்கவில்லை. தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படும் போது அடையாள எதிர்ப்புகளுடன் வரம்பிட்டுக்கொண்டன. பல தொழிற்சங்கத் தலைவர்கள் காண்ட்ராக்ட்மயத்தின் அங்கமாகினர்; மேல்மட்டத் தலைமைகளோ, பிழைப்புவாதத்தில் மூழ்கிப் போயின. இவ்வாறான தொழிற்சங்கத் தலைமைகளின் துரோகம், அரசு ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்திய நுகர்வுக் கலாச்சாரம் போன்றவை அவற்றை பிராய்லர் கோழிகளாக மாற்றிவிட்டன.
தற்போது அரசு ஊழியர்கள் அனைவரின் உணர்வுபூர்வமான நிலைப்பாடாக பழைய ஓய்வூதியத் திட்டம் மாறிவருகிற சூழலில் கூட இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமானது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட மிகவும் நயவஞ்சகமானது, சதித்தனமானது என்ற உண்மையை அம்பலப்படுத்தாமல், துரோகமிழைக்கின்றன.
ஆனால், அரசு ஊழியர்களின் சேமிப்பைக் கொள்ளையடிப்பது ஏதோ அரசு ஊழியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. மக்களின் வரிப்பணம்தான் அரசு ஊழியர்களின் சேமிப்பாகும் என்ற உண்மையை விளக்கி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது தற்போது உடனடி தேவையாக உள்ளது. ஏனெனில், 10 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான மக்கள் பணத்தைக் கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கு மோடி-அமித்ஷா கும்பல் பாதை வகுத்துக் கொடுக்கும் சதித் திட்டம்தான், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்.
எனவே, அம்பானி-அதானிகளை மேலும் கொழுக்க வைக்க மக்களை ஒட்டச் சுரண்டும் இந்த பாசிச மோடி அரசுக்கெதிராக, உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவது காலத்தின் கட்டாயம்.
ஆதி
(புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram