த்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான ஆளும் பாஜக அரசானது அக்டோபர் 15 ஆம் தேதியன்று உணவில் எச்சில் துப்பும் சம்பவங்களைத் தடுக்கப் போவதாகக் கூறி அதற்கான சட்டத்தை நிறைவேற்றி வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. முஸ்லீம்களை வதைக்கும் நோக்கத்துடன், சங்கிகளால் பொய்யாகப் பரப்புரை செய்யப்படும் “தூக் (துப்புதல்) ஜிஹாத்” (thook jihad) எனப்படுவதைத் தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என்று அம்மாநில முதல்வர் கூறியுள்ளார்.

இஸ்லாமியர்கள் தங்களது கடைகளில் தங்களின் மத நம்பிக்கையின்படி உணவு தயாரித்த பின்னர் துவா ஓதி வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் உணவில் எச்சில் துப்பிக் கொடுக்கிறார்கள் என்கிற பொய் பிரச்சாரத்தைக் காவி கும்பல் மாநிலம் முழுவதும் உள்ள மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பழச்சாறு டம்ளர்களை வழங்குவதற்கு முன்பு அதில் எச்சில் துப்பியதாக இரண்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், டெஹ்ராடூனில் இருந்து ஒரு வைரல் வீடியோ, ரொட்டிகளுக்கு மாவு தயாரிக்கும் போது ஒரு சமையல்காரர் துப்புவதைக் காட்டியது. இந்த ஒடுக்குமுறையை மக்கள் ஏற்றுக்கொள்வதற்காக மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் பயன்படுத்தப்பட்டன.

டெக்ராடூன் மற்றும் முசோரியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தாபாக்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் எச்சில் கலந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பது போன்ற காணொளி வெளியானதையடுத்து முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் சுகாதாரத்துறை, போலீஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

வழிகாட்டுதலின்படி உணவுப் பொருட்களில் கலப்படம் செய்தால் ₹25,000 முதல் ₹1 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: ‘ஹலால் ஜிகாத்’ : முஸ்லீம்களின் மீதான காவிகளின் அடுத்தக்கட்ட தாக்குதல் !


மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் சிங் ராவத் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தூய்மைக்கே அரசாங்கம் முதன்மையான முன்னுரிமை கொடுக்கும் என்றும் அதில் எந்தவிதமான தூய்மைக் கேடு அல்லது சமூக விரோதச் செயல்களும் அனுமதிக்கப்படாது என்று கூறி இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையிலான செயல்களைப் பொய் பரப்புரை மூலம் சமூக விரோத செயல்கள் போலச் சித்தரித்தார்.

ஹோட்டல் மற்றும் தாபாக்கள் போன்ற வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஆட்கள் சமைக்கும் உணவினை 100 சதவிகிதம் சோதனை செய்வதோடு வணிக நிறுவன மேலாளர்கள் தங்கள் நிறுவனங்களிலுள்ள சமையலறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று போலீஸ் இயக்குநர் அபினவ் குமார் மாவட்ட போலீசாருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி உணவு மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் செய்தால் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 274இன் படி வழக்குப் பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

ஹோட்டல் மற்றும் தள்ளுவண்டி போன்ற திறந்தவெளி கடைகளில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு உள்ளூர் புலனாய்வுக் குழுவின் உதவியோடு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று என்று வழிகாட்டுதலில் கொடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று (அக்டோபர் 15) அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் யோகி தலைமையிலான பாஜக அரசானது மனித எச்சிலை உணவில் துப்புவதைத் தடுப்பதற்கும் குற்றவாளியைத் தண்டிப்பதற்கும் ஜாமினில் வெளியே வர முடியாத அளவிற்கு இரண்டு அவசர சட்டங்களைக் கொண்டு வரப்போவதாகத் தெரிவித்தது. ஆனால், உதத்ரகாண்ட் அரசு முதலில் நடைமுறைப்படுத்தியுள்ளது.

காவி கும்பலானது ‘புல்டோசர் நீதி’, முஸ்லீம் விரோத சட்டங்களான பொது சிவில் சட்டம் போன்றவற்றை உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்தே தொடங்கிய நிலையில் அதன் தொடர்ச்சியாக ‘தூக் ஜிகாத்’ சட்டத்தையும் கொண்டுவந்துள்ளது.

பாசிச மோடி ஆட்சிக்கு வந்தது முதல் முஸ்லீம் மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவதற்கு ‘லவ் ஜிகாத்’, மதமாற்றத் தடைச் சட்டம் போன்ற பயங்கரவாத சட்டங்களைக் கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது மேலும் அவர்களைப் பொருளாதார ரீதியாகவும் தாக்குவதற்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் ‘தூக் ஜிகாத்’ சட்டம் மூலம் மற்றொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க