ர்நாடகாவில் ஹலால் செய்யப்பட்ட இறைச்சி என்பது ஒரு “பொருளாதார ஜிகாத்” என்றும் அதனால் முஸ்லீம் கடைகளிலிருந்து இந்துக்கள் இறைச்சியை வாங்கக் கூடாது என்றுகூறி முஸ்லீம்கள்மீது காவி கும்பல் தனது அடுத்தக்கட்ட தாக்குதலை தொடங்கியுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் ஹலால் இறைச்சியை இந்துக்களின் புத்தாண்டான உகாதிக்குப் பின்னர் வாங்குவதை இந்துக்கள் அனைவரும் நிறுத்துமாறு செய்திகள் பரவி வருகிறது. இந்த இழிவானப் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க., பஜ்ரங் தள், இந்து ஜன ஜாக்ரிதி சமிதி போன்ற இந்துத்துவ அமைப்புகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன.
படிக்க :
இந்தியாவில் இறைச்சி உணவு உண்பவர்கள் 70 சதவிதம் பேர் !
குஜராத் : தெருவோர இறைச்சி உணவுக் கடைகளுக்குத் தடை !
இந்த நிலையில் மார்ச் 28 அன்று இந்து ஜன ஜாக்ரிதி சமிதி என்ற இந்துத்துவ அமைப்பு, ஹலால் இறைச்சி இஸ்லாமிய மத அடிப்படையின்கீழ் வெட்டப்படுகிறது. இந்த இறைச்சியை இந்துக் கடவுள்களுக்கு படைக்க முடியாது. அதனால் ஹலால் இறைச்சியை இந்துக்கள் வாங்க கூடாது என்ற ஒரு பிரச்சாரத்தைத் நடத்துகிறோம் என்று கூறியுள்ளது.
கர்நாடக மாநில எம்.எல்.ஏ.வுமான சி.டி. ரவி
இந்த வெறுப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளரும், கர்நாடக மாநில எம்.எல்.ஏ.வுமான சி.டி. ரவி, ஹலால் இறைச்சி என்பது முஸ்லீம் சமூகத்தால் இந்துக்களின்மீது தொடுக்கப்பட்ட “பொருளாதார ஜிகாத்தின்” ஒரு பகுதி என்று கூறியுள்ளார். மேலும், இந்துக்கள் கடைகளில் இஸ்லாமியர்கள் இறைச்சி வாங்க கூடாது என்பதற்காகவே இந்த ஹலால் என்ற முறை கொண்டு வரப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக சட்டங்களும் வெறுப்பு பிரச்சாரமும் உச்ச நிலையை தொட்டுள்ளது. முத்தலாக் தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடை சட்டம், போன்ற சட்டங்களாலும் கொரோனா ஜிகாத், லவ் ஜிகாத், எச்சில் ஜிகாத் போன்ற பல்வேறு வெறுப்பு பிரச்சாரத்தாலும் முஸ்லீம் மக்களை அடக்கி இரண்டாம் தர குடிகாளாக்கி வருகிறது காவிக் கும்பல்.
சமீபத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என இந்துத்துவ அமைப்புகளால் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அம்மாநில அரசும், கர்நாடக உயர்நீதிமன்றமும் காவிகளின் கட்டளைக்கு கட்டுபட்டு அவர்களின் முடிவை தனது முடிவாக அறிவித்தன.
முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தில் முழு வெற்றியை பெற்றுவிட்ட இந்த காவிக் கும்பல் தற்போது ஹலால் பிரச்சினையை கையிலெடுத்துள்ளது. இந்த வெறுப்பு பிரச்சாரத்தால் முஸ்லீம் கடைகளில் இந்துக்களை இறைச்சி வாங்கவிடாமல் தடுத்து அவர்களின்மீது மிகப்பெரிய பொருளாதார தாக்குதலை தொடுக்க காவி பாசிஸ்டுகள் எத்தனிக்கின்றனர்.
படிக்க :
கர்நாடகா : கோயில் திருவிழாக்களில் முஸ்லீம் வணிகர்கள் வியாபாரம் செய்யத்தடை!
சத்தீஸ்கர் : உள்ளூர் மோதலை முஸ்லீம் வெறுப்பாக மாற்றும் காவிக் குண்டர்கள் !
ஹாலால் செய்யப்பட்ட உணவை கட்டாயம் இந்துக்கள் வாங்க வேண்டும் என்று முஸ்லீம் வியாபாரிகள் எங்கும் கட்டாயப்படுத்தவில்லை. இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் ஹலால் இறைச்சி வழங்குகின்றனர். இந்துக்களுக்கு ஹலால் செய்யப்படாத இறைச்சிதான் பெரும்பாலும் இஸ்லாமிய வியாபாரிகள் வழங்குகின்றனர். இந்த முறையில் இந்துக்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ இந்தவித முரண்பாடோ, முட்டல் மோதலோ நடந்தது இல்லை. ஆனால் ஹலால் என்ற பிரச்சினையை கிளப்பி காவிக் கும்பல் தன் இந்துத்துவ சித்தாந்தத்தை பரப்பி இஸ்லாமியர்கள் மீது தாக்குதலை நடத்த ஆயத்தமாகி வருகிறது.
முஸ்லீம் மக்களின்மீது கலாச்சார, பண்பாடு, பொருளாதார ரீதியான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர் இந்துத்துவவாதிகள். முஸ்லீம்கள், கிறித்துவர்கள், தலித்தகள் மற்றும் உழைக்கும் மக்கள்மீது தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் செய்து கலவரத்தை தூண்டும் இந்த காவிப் பாசிஸ்டுகளை வீழ்த்த களத்தில் இறங்குவதை தவிர, நாம் வேறு என்ன செய்ய முடியும்.

வினோதன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க