கோயில் வளாகங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்துக்கள் அல்லாதவர்கள் வியாபாரம் செய்யக் கூடாது என்று கர்நாடக அரசு மார்ச் 23-ம் தேதி மாநிலங்கள் அவையில் அறிவித்ததைத் தொடர்ந்து, காவி குண்டர்களால் கோயிலை சுற்றியுள்ள பகுதியிலிருந்து முஸ்லீம் வணிகர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தட்சிணா கன்னடா மாவட்டத்தில் முழ்கி நகருக்கு அருகில் உள்ள பாப்பாநாடு துர்காபரமேஸ்வரி கோயிலில் மார்ச் 24 அன்று காவி அமைப்பான பஜ்ரங் தள் உறுப்பினர்கள் முஸ்லீம் வணிகர்களை கோயில் வளாகத்தைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். நுழைவாயிலில் முஸ்லீம் வணிகர்களின் பெயர்கள் கேட்கப்பட்டன. அவர்கள் முஸ்லீம்கள் என்பதால் உடனடியாக வெளியேறும்படி வலியுறுத்தப்பட்டனர்.
கர்நாடகாவில் உள்ள பல கோயில்கள் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் தங்கள் ஜாத்ரேக்களை (கோவில் கட்டணங்கள்) நடத்துகின்றனர். அதில் முஸ்லீம் வர்த்தகர்கள் வழக்கமாக பங்கேற்கிறார்கள். கடைகளைத் திறந்து தங்கள் பொருட்களை விற்பார்கள். இருப்பினும் இந்த ஆண்டு உடுப்பி மற்றும் தட்சிணா கன்னடாவின் பிறப் பகுதிகளிலும் முஸ்லீம்களை ஒதுக்கிவைப்பதை அறிவிக்கும் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் காணப்பட்டன.
படிக்க :
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
‘கல்வியை காவிமயமாக்குதலில் என்ன தவறு’ : நவீன குலக்கல்விக்கு எத்தனிக்கும் காவிக்கும்பல் !
அதேபோல், பாப்பாநாடு கோயிலில் திருவிழாவுக்கு முந்தைய நாட்களில் முழ்கி நகரைச் சுற்றிலும் முஸ்லீம் வியாபாரிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பதாகைகளில் வெளிப்படையாக ‘முஸ்லீம்கள்’ என்று குறிப்பிடாமல் “நாம் வணங்கும் பசுக்களை கொல்பவர்கள்” என்றும், “இந்த நாட்டின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்குபவர்கள்” என்றும் எழுதப்பட்டிருந்தது.
மார்ச் 23 அன்று மாநில சட்டசபையில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இந்துக்கள் அல்லாதவர்களை ஒதுக்குவது மற்றும் இந்த போஸ்டர்கள் குறித்து பிரச்சினையை எழுப்பினர். மாநில சட்ட அமைச்சர் ஜே.சி. மதுசுவாமி, இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை (HCRE) சட்டம், 2002-ம் பிரிவு 31(12)ஐ மேற்கோள்காட்டி இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தினார். இது முஸ்லீம்கள் கோயில்களில் வியாபாரம் செய்வதைத் தடுக்கிறது.
மேலும், சட்டம் அமலுக்கு வந்த 2002-ல் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்ததாக மதுசாமி குறிப்பிட்டார். எனினும் முஸ்லீம் வர்த்தகர்களை விலக்கி வைக்கும் சட்டத்தின் விதிகள் அமுல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முதல்வர் பசவராஜ் பொம்மையும், மாநிலத்தில் உள்ள பாஜக அரசை இப்பிரச்சினையிலிருந்து விலக்கி வைத்தார். கோயில் திருவிழாக்களுக்கான கடைகள் குத்தகைக்கு விடுவது என்பது முற்றிலும் குத்தகைதாரர்களின் வணிக முடிவு என்றும் இதனால் அரசாங்கம் தலையிட முடியாது என்றார். போஸ்டர்கள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
பாப்பாநாடு கோயில் நீண்ட காலமாக இப்பகுதியில் ஒற்றுமையின் அடையாளமாக உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான பாப்பாநாடு கோயில், கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் வணிகர் பாப்பா பேரியால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இந்துக்கள் அல்லாதவர்களுக்கு பிரசாதம் வழங்கும் கோயில்களில் ஒன்றாகும். கோயிலில் உள்ள ஒரு பலகை அதை “இக நல்லிணக்கத்திற்கான நவீன கால சாட்சியம்” என்று அழைக்கிறது.
சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கக் கூடாது என்பதை ஒப்புக்கொண்ட கோயில் அதிகாரிகள், கோயில் வளாகத்துக்கு வெளியே ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு பொறுப்பேற்க முடியாது என்றும், முஸ்லீம்களுக்கு கடைகளை ஒதுக்கியதாகவும், ஆனால் இந்த முஸ்லீம் வியாபாரிகள் கடைகளை திறக்க விரும்பவில்லை என்று அவர்களே அதிகாரிகளிடம் கூறினர் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இருப்பினும், செய்தி நிறுவனத்திடம் பேசிய வணிகர்கள், முஸ்லீம்களை அனுமதிக்கக் கூடாது என்று காவி குண்டர்கள் அழுத்தம் குறித்து கோயில் அதிகாரிகள் தங்களுக்குத் தெரிவித்ததாகவும், கடைகளுக்கான வைப்புத் தொகையைத் திருப்பித் தந்ததாகவும் கூறுகின்றனர். மோதலுக்கு பயந்து, பல முஸ்லீம் வர்த்தகர்கள் கடைகளைத் திறக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
படிக்க :
சத்தீஸ்கர் : உள்ளூர் மோதலை முஸ்லீம் வெறுப்பாக மாற்றும் காவிக் குண்டர்கள் !
தீபாவளி அன்று முஸ்லீம் அசைவக் கடைகளை மூடச்சொல்லிய காவி குண்டர்கள்!
மார்ச் 23 அன்று முடிவடைந்த உடுப்பியில் உள்ள ஹோஸ் மாரிகுடி சன்னதி திருவிழாவில் இதேபோன்ற ஒரு சம்பவத்திற்குப் பிறகு பாப்பாநாடு கோயிலில் முஸ்லீம்கள் கடைகளை ஏலம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை.
ஷிமோகாவில் உள்ள கோட்டே மாரிகாம்பா கோவிலிலும், மார்ச் 22 அன்று திருவிழா தொடங்கியது, மற்றும் தட்சிண கன்னடத்தில் உள்ள மகாலிங்கேஸ்வரா கோவிலில், ஏப்ரல் 20 அன்று திருவிழாவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றிலும் முஸ்லீம் வணிகர்களின் கடைகளை தடை செய்ய காவி பாசிசக் கும்பல் எத்தனிக்கும்.
நேரடியாகவும் வெளிப்படையாகவும் முஸ்லீம் வணிகர்களை கோயில் திருவிழாக்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்காத கரநாடக அரசும், அங்கிருக்கும் பஜரங் தள் போன்ற காவி குண்டர் படையும் உத்தரப்பிரதேசத்தை போன்று கர்நாடகாவை மாற்ற திவிரமாக முனைந்து வருகிறது என்பதை தான் இச்சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது. முஸ்லீம் மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் கலவரத்தை தூண்டும் பாசிச சக்திகளை உழைக்கும் மக்களை ஒன்றினைத்து வீழ்த்துவதே நம் முதன்மை கடமை.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க