அக்டோபர் 24 அன்று வெளியிடப்பட்ட 180 நாடுகளுக்கான உலகளாவிய “இயற்கைப் பாதுகாப்புக் குறியீடு” (Nature Conservation Index – NCI) தரவரிசைப் பட்டியலில் 100க்கு 45.5 மதிப்பெண்களுடன் இந்தியா 176வது இடத்தை (அதாவது கடைசியிலிருந்து 5-வது இடத்தை) பிடித்துள்ளது.
இந்த குறியீட்டை இஸ்ரேலில் உள்ள பென்-குரியன் பல்கலைக்கழகத்தின் கோல்ட்மேன் சோனென்ஃபெல்ட் ஸ்கூல் ஆஃப் சஸ்டெய்னபிலிட்டி அண்ட் க்ளைமேட் சேஞ்ச் (Goldman Sonnenfeldt School of Sustainability) மற்றும் பயோடிபி (BioDB) என்ற வலைத்தளம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நில மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள், நாட்டின் திறன், ஆளுமை மற்றும் எதிர்கால போக்குகள் போன்ற 25 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
என்.சி.ஐ அறிக்கையானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature – IUCN) வெளியிட்டுள்ள சிவப்புப் பட்டியலை (Red list) மேற்கோள் காட்டி சில தகவல்களை வெளியிட்டுள்ளது. 15.9 சதவிகித கடல் இனங்கள், 13.5 சதவிகித நிலவாழ் உயிரினங்கள் ஆபத்தில் உள்ளன என்றும், முக்கியமாக 2001 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 23.300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதோடு தொடர்ந்து காடுகள் அழிக்கப்பாட்டும் வருவதால் இயற்கை வளங்கள் ஒரு ஆபத்தான போக்கை எதிர் கொண்டுள்ளதாக இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் (EEZ) 34.5 சதவிகித மீன்பிடி தளங்கள் அதிகமாகச் சுரண்டப்படுவதால், நிலையான மீன்பிடி நடைமுறைகள் அவசியம் என்பதையும் இந்த என்.சி.ஐ அறிக்கை வலியுறுத்துகிறது.
அதேபோல், இயற்கை வளங்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க நிர்வகிக்க மாற்று நிலைநிறுத்த இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் செயல்திறனை அளவிடும் பட்டியலில் இந்தியா 122வது இடத்தில் உள்ளதையும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
படிக்க: நிகோபாரை அழிக்க படையெடுக்கும் காவி-கார்ப்பரேட் வெட்டுக்கிளிகள்!
குறிப்பாக 2023 ஆம் ஆண்டு பாசிச கும்பலால் கொண்டுவரப்பட்ட வனப்பாதுகாப்பு திருத்தச் சட்டம் (FCAA) 2023 மூலம் வணிக ரீதியாக அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் காடுகளில் உள்ள கனிம வளங்களைச் சுரண்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஆய்விலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு (Environmental Performance Index – EPI) மதிப்பெண் பத்தாண்டுகளில் குறைந்துள்ளது.இது மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் அவசரத் தேவையினை வலியுறுத்துவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
புவி வெப்பமயமாதலைத் தணிக்க அத்தியாவசிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த இந்தியா தவறியுள்ளதையும் என்.சி.ஐ அறிக்கை குறிப்பிடுகிறது.
கிரேட் நிகோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் (Great Nicobar Island Development Project) மூலமாக 96 வனவிலங்கு சரணாலயங்கள், 9 தேசிய பூங்காக்கள் மற்றும் ஒரு உயிர்க்கோளம் ஆகியவற்றைக் கொண்டுள்ள தீவின் தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாசிச மோடி அரசானது அதானி அம்பானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பல்களின் நலன்களுக்காகக் காடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி காடுகளிலிருந்து விரட்டியடிப்பது, கார்ப்பரேட் நிறுவனங்கள் காடுகளின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு வனப்பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துவது போன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்காகப் போராடும் சமூக ஆர்வலர்களும், இயற்கை பாதுகாவலர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கனிம வளக்கொள்ளைக்கு எதிராகவும் போராட வேண்டும். அதன் மூலமே எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களையாவது நம்மால் காப்பாற்ற முடியும்.
செய்தி மூலம்: https://biodb.com/nci/
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram