நிகோபாரை அழிக்க படையெடுக்கும் காவி-கார்ப்பரேட் வெட்டுக்கிளிகள்!

இத்திட்டத்திற்காக 8 இலட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளன. நிக்கோபார் தீவுகளில் வெட்டப்படும் மரங்களுக்கு ஹரியானாவிலும் மத்திய பிரதேசத்திலும் மரம் நடப் போகிறார்களாம்!

0

’வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் அழிக்கப்படும் நிகோபார் தீவுகள்!

மோடி அரசாங்கம் கிரேட் நிகோபார் தீவுகளில் ₹ 72,000 கோடி செலவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாகக் கூறியிருக்கிறது. இத்திட்டத்திற்காக 8 இலட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டில் துவங்க உள்ளன.

‘அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள கிரேட் நிகோபார் தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ (Holistic Development of Great Nicobar Island in Andaman & Nicobar Islands) என்று இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது நான்கு இணை திட்டங்களைக் கொண்டுள்ளது:

  • 1.42 கோடி 20 அடி கொள்கலன்களை (Twenty-foot Equivalent Unit – TEU) கையாளும் அளவிலான சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் (International Container Transhipment Terminal – ICTT) அமைப்பதற்கான திட்டம்
  • போகும் வழி வரும் வழி என இரு வழிகளிலும் தலா 4,000 பயணிகளை கையாளும் வகையிலான பசுமை விமான நிலையம்
  • ஒரு புதிய நகரம்
  • 16,610 ஹெக்டேர் பரப்பளவில் 450 மெகாவாட் (MVA) எரிவாயு மற்றும் சூரிய மின் நிலையம்

கடந்த நவம்பர் மாதத்தில் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் (MoEFCC) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தற்போது 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன. 2 தேசிய பூங்காக்களும், 1 உயிர்க்கோளக் காப்பகமும் (biosphere reserve) பாதிக்கப்படும். 910 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கிரேட் நிகோபார் தீவுகளில் 161 சதுர கிலோமீட்டர் இத்திட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும்; இதில் 130 சதுர கிலோமீட்டர் முதன்மை வனப்பகுதியாகும்.


படிக்க: மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!


வன பாதுகாப்பு சட்டம் 1980-யின் படி, வளர்ச்சி திட்டம் என்று கூறப்படும் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டால், எவ்வளவு பரப்பளவு காடுகள் அழிக்கப்படுகிறதோ அதே அளவிளான ஈடுசெய் காடு வளர்ப்பை (compensatory afforestation) காடுகள் அல்லாத பகுதிகளில் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், 2019 ஆம் ஆண்டில், மோடி அரசு இச்சட்டத்தின் விதிகளை 75 சதவிகிதத்திற்கு மேல் வனப் பரப்பளவு கொண்ட மாநிலங்கள் ஈடுசெய் காடு வளர்ப்பை வேறு மாநிலங்களில் மேற்கொள்ள வழிவகை செய்துகொள்ளலாம் என்று திருத்தி விட்டது.

அந்தமான் நிகோபார் தீவுகள் 80 சதவிகிதம் வனப் பரப்பளவு கொண்டுள்ளதால், (திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி) அங்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மத்திய பிரதேசம் ஹரியானா ஆகிய மாநிலங்களில் மரம்நடப் போகிறார்களாம். இந்தியாவிலேயே ஹரியானா மாநிலம் தான் வனப் பரப்பளவு மிகவும் குறைவாக உள்ள மாநிலம் (3.63 சதவிகிதம்) என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால், டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஹரியானா மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கதை அளக்கிறார்கள்.

நவம்பர் 11 அன்று சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அனுமதியில் மெகாபோட் பறவை (megapode), கடலாமைகள் மற்றும் பிற உயிரினங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இவ்வாறு சுற்றுச்சூழல் அனுமதி அளித்துவிட்டு ஆய்வு நடத்துவதானது பாசிச மோடி அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

கிரேட் நிகோபார் தீவானது 648 தாவர இனங்களுக்கும் 330 விலங்கு இனங்களுக்கும் புகலிடமாகும். இத்திட்டத்தால் கடல் ஆமைகள் முட்டையிடும் தளங்களும், அழிவாய்ப்பு இனமான (vulnerable species) நிகோபார் மெகாபோட் பறவை முட்டையிடும் தளங்களில் குறைந்தது 30 தளங்களும் பாதிக்கப்படும். எந்த இடத்தில் எவ்வளவு மரங்கள் நடப்பட்டாலும் அவை மழைக்காடுகள் மற்றும் சதுப்பு நில காடுகளுக்கு ஒருபோதும் ஈடாகாது.


படிக்க: அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!


இயற்கை அழிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் கிரேட் நிகோபார் தீவுகளின் பூர்வக் குடிகள் ஒழித்துக் கட்டப்படுகிறார்கள்‌. 1960-களில் ஷோம்பென் (Shompen) மற்றும் நிகோபாரி (Nicobarese) மக்களுக்குச் சொந்தமானதாக இத்தீவு இருந்தது. பின்னர் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து மக்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். அத்தீவின் மக்கள் தொகை தற்போது 8,067; சுமார் 200 ஷோம்பென் மக்களும், 1000 நிகோபாரி மக்களும் உள்ளனர். இத்திட்டத்தை நிறைவேற்றிய பின்னர், அடுத்த 30 ஆண்டுகளில் சுமார் 3.5 இலட்சம் பேர் கிரேட் நிகோபார் தீவில் குடியேறப் போகிறார்கள். இது பூர்வக் குடிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.

ஷோம்பென் பழங்குடியின பெண்மணி

விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காக ‘வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதற்கு சட்ட விதிகள் தடையாக இருந்தால் அவை மாற்றப்படுகின்றன; 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன; நிலச்சூழல் மண்டலங்களும் (terrestrial ecosystems)கடல் சூழல் மண்டலங்களும் (marine ecosystems) அழிக்கப்படுகின்றன; பூர்வக்குடி மக்களும் அடையாளம் சிதைக்கப்பட்டு தமது சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கப் படுகின்றனர். காவி-கார்ப்பரேட் பாசிசம் கோரத்தாண்டவம் ஆடுகிறது.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க