அக்டோபர் 30 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் உள்ள சம்பூரணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் (Sampurnanand Sanskrit University) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதியநாத் 6 கோடி மதிப்பில் சமஸ்கிருத கல்வி உதவித் தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “பழமையான சமஸ்கிருத மொழியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற இத்திட்டத்தின் நோக்கம் மூலம் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைவார்கள். கூடுதலாக இத்திட்டத்தின் மூலம் 69.195 மாணவர்களுக்கு ₹5.86 கோடி கல்வி உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
சமஸ்கிருத மொழி தெய்வ மொழியாகவும் அறிவியல் மொழியாகவும் கருதப்படுகிறது என்றும் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன துறைகளிலும் இதைப் பயன்படுத்த முடியும் என்கிற அறிவியலுக்குத் தொடர்பில்லாத பொய்யான கருத்துக்களையும் மாணவர்களிடம் ஆற்றிய உரையில் அவர் கூறினார்.
உத்தரப்பிரதேசம் முழுவதும் குருகுல கல்வி முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
படிக்க: உ. பி: இஸ்லாமிய உணவகங்கள் மீது வன்முறைக்கு வழிவகுக்கும் யோகி அரசு!
“சமஸ்கிருத கல்வி உதவித் தொகை திட்டத்தின் மூலம் பாரம்பரிய கல்வி முறைக்குப் புத்துயிர் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தொடங்கப்படும் உறைவிடப் பள்ளிகளினால் நாட்டின் கலாச்சாரமும் பாரம்பரிய கல்வியும் வலுவடையும்” என்று அவர் மேலும் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் கட்டியமைக்கும் இந்துராஷ்டிரத்தில் அறிவியல் பூர்வமான கல்வி என்பது ஒழித்துக்கட்டப்பட்டு குருகுலக் கல்வி முறை மட்டுமே நிலைநிறுத்தப்படும் என்பதைத் தான் யோகியின் நடவடிக்கை உணர்த்துகிறது. அதற்காகத்தான் மாநிலம் முழுவதும் சமஸ்கிருதப் பள்ளிகளைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
யோகி கூறும் ‘பாரம்பரிய’ குருகுல கல்வி முறையில் பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர். பார்ப்பனர் அல்லாதோருக்குக் கல்வி மறுக்கப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு கல்வி முறையை மீண்டும் உருவாக்கி பார்ப்பன மேலாண்மையை நிலைநிறுத்தவே யோகி ஆதித்யநாத் அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram