இந்திய புரட்சிப் பயணத்தில் 40-வது ஆண்டில் புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் மட்டுமே பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றை முன்வைக்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வை பாசிச எதிர்ப்புடன் பிணைக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1985-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் ரசியப் புரட்சி தினத்தன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புதிய ஜனநாயகம் முதல் இதழ் வெளியானது. 40 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புரட்சிகர அரசியலை உயர்த்திப் பிடித்து வெளிவரும் ஒரே அரசியல் இதழ் புதிய ஜனநாயகம் ஆகும். பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து அரசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் இன்றளவும் தொடர்ச்சியாக புதிய ஜனநாயகம் உழைக்கும் மக்களின் போர்வாளாக திகழ்ந்து வருகிறது.

புதிய ஜனநாயகத்தின் வெற்றிகரமான பயணத்திற்கு உறுதுணையாக இருந்துவரும், வாசகர்களுக்கும், முகவர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடதுசாரி இயக்கங்களும் வார, மாத, தினசரி இதழ்களை கொண்டுவருகின்ற போதிலும் அவை அனைத்தும் அந்தந்த அமைப்பு சார்ந்த அணிகளுக்கு அமைப்பின் நிலைப்பாடுகள் அரசியல் போக்குகள் குறித்த சில விமர்சனங்கள் மற்றும் அமைப்புச் செய்திகளைத் தெரிவிப்பதற்கானவையாகவே இருந்து வருகின்றன.

ஆனால், புதிய ஜனநாயகமானது வெகுஜன மக்களிடம் புரட்சிகர அரசியலைக் கொண்டு சேர்க்கும் வகையில் வெளிவரும் ஒரே மார்க்சிய-லெனினிய பத்திரிகையாகும்.

மேலும், புதிய ஜனநாயகம் தேசிய, சர்வதேசிய அரசியல் போக்குகள், சமூக பொருளாதார நிலைமைகள், மக்களின் வாழ்வாதார சிக்கல்கள் மற்றும் அவர்களின் போராட்டங்களை அலசி ஆராய்ந்து சமூகத்தின் பார்வைக்கு வைப்பதுடன் நின்று கொள்வதில்லை. அவற்றின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை மாற்றி அமைப்பதற்கான மாற்று அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் முன்வைக்கிறது. அவற்றுக்கான சமூக அரசியல் பொருளாதார மாற்றுக் கட்டமைப்பை முன்மொழிகிறது என்பதே புதிய ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்பதை வாசகர்கள் அறிவர்.

புதிய ஜனநாயகம் ஏடு தனித்த சில அறிவுஜீவிகளால் மட்டும் நடத்தப்படுகின்ற இதழாக இல்லாமல் தன்னை ஒரு அமைப்பின் அரசியல் சார்ந்து ஒழுங்கமைத்துக் கொண்டிருப்பது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

புதிய ஜனநாயகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் ஜனநாயக சக்திகள் மற்றும் பாசிச எதிர்ப்புப் போராளிகளின் அரசியல் கண்ணோட்டத்தை கூர்மைப்படுத்தியதுடன் அரசியல் உணர்வையும் வளர்த்தெடுத்தது.

இந்த 40 ஆண்டு கால வரலாற்றில் அவற்றில் முக்கியமான சிலவற்றையாவது குறிப்பாக எடுத்துக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.

1967 நக்சல்பாரி எழுச்சி அன்றைய வலது, இடது போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சமரச சந்தர்ப்பவாதத்திற்கு பலத்த அடியை கொடுத்தது. நக்சல்பாரி புரட்சியைத் தொடர்ந்து உருவான மார்க்சிய-லெனினியக் கட்சித்தலைமை மார்க்சிய-லெனினிய தத்துவத்தை உட்கிரகித்துக் கொண்டு அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறாமல் இடது தீவிரவாத சாகசப்பாதையில் சரிந்தது.

சித்தாந்த ரீதியில் அவர்களது இயக்க மறுப்பியல் வகைப்பட்ட ஒருதலைப்பட்சக் கண்ணோட்டம் அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தியது. கட்சித் தலைமையின் கீழ் மக்களை அணிதிரட்டும் ஆற்றலை இழக்கச் செய்தது. அந்த முக்கிய வரலாற்றுக்கட்டத்தில் இந்திய புரட்சிக்கான புதிய பாதையை, மக்கள் திரள் பாதையை வரையறுத்து முன்வைத்தது புதிய ஜனநாயகத்தின் அரசியல் தலைமை. இந்தியப் புரட்சியின் வரலாற்றில் அது ஒரு மைல் கல்லாகும்.

1990-களில் காங்கிரஸ் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில், அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டையே திறந்துவிடும் உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் என்ற கொள்கைகளை இந்தியாவின் முன்னேற்றத்துக்கானது என்று பார்ப்பன-கார்ப்பரேட் ஊடகங்கள் பரப்புரை செய்து வந்த நேரத்தில், அதனை தோலுரிக்கும் வகையில், அது நாட்டை அடகு வைக்கும் திட்டம் என்றும் காட் ஒப்பந்தம் என்பது மறுகாலனியாக்க ஒப்பந்தம் என்றும் முதன் முதலில் உரத்துச் சொன்னது புதிய ஜனநாயகம்தான். அதற்காக காட்டாட்சி என்ற ஒரு தனி வெளியீட்டை கொண்டு வந்தது.

அயோத்தியில் பாபர் மசூதிக்குள் திருட்டுத்தனமாக குழந்தை ராமன் சிலை வைக்கப்பட்டதை தொடர்ந்து, பூட்டப்பட்டு கிடந்த மசூதியில் ராஜீவ் காந்தி ராமனை வழிபட இந்துக்களுக்கு கதவை திறந்து விட்டதை மதவெறி கலவரங்களுக்கு முதற்கொள்ளி என்று விமர்சித்தது புதிய ஜனநாயகம்.

அதைத்தொடர்ந்து அயோத்தி மசூதியை இடித்து தகர்த்த இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக துரும்பையும் அசைக்காத நரசிம்மராவின் காங்கிரஸ் ஆட்சியையும் அந்த வழக்குகளில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவக் கும்பலுக்கு சாதகமாக அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளையும் ஜனநாயகத்தின் சார்பாக நின்று அழுத்தமான பதிவுகளை எழுதியது புதிய ஜனநாயகம். இஸ்லாமிய மக்கள் அன்றும் இன்றும் புதிய ஜனநாயகத்தின் நேர்மையை பாராட்டுகின்றனர்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அதுவரையிலும் ஈழப் போராட்டத்தை ஆதரித்து போராளி குழுக்களுக்கு எல்லா வகையிலும் உதவிக் கொண்டிருந்த தமிழ்நாட்டின் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்டு நீக்கமற தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்லா அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒரு பிரதமரின் படுகொலையை எப்படி நியாயப்படுத்த முடியும்? என்று நிலைதடுமாறி அமைப்பு ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முடங்கிப் போயினர். அப்பொழுது ராஜீவ் காந்தியின் படுகொலை “பழிக்குப் பழி” என்று அட்டைப்படம் போட்டு கட்டுரை வெளியிட்டது புதிய ஜனநாயகம். அதன் பிறகுதான் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினர்.

ராஜீவ் காந்தியின் படுகொலைக்கு தி.மு.க-வின் மீது பயங்கரவாதப் பழி சுமத்தி மக்களை ஏய்த்து ஆட்சியைப் பிடித்தது பாசிச ஜெயா கும்பல். ஜெயாவின் ஆட்சிக் காலத்தை தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்றும் அ.தி.மு.க. கட்சி என்பது ஒரு பிழைப்புவாத பொறுக்கி கும்பல் என்றும் அடையாளப்படுத்தியது. பாசிச ஜெயா கொண்டு வந்த மதம் மாறும் தடைச் சட்டம், கிடா வெட்டும் தடைச் சட்டம் போன்ற அனைத்தையும் மக்கள் போராட்டங்களால் முறியடிக்க வேண்டும், எதிர்க்கட்சிகளின் வருகைக்காக காத்திருக்க முடியாது என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தது புதிய ஜனநாயகம்.

தமிழ்நாடு மற்றும் இந்திய பார்ப்பன ஊடகங்கள் அனைத்தும் ஜெயாவின் சட்டவிரோத மக்கள் விரோத நடவடிக்கைகளையும் கூட துணிச்சலானவை என்றும் ஜெயா தீரமும் தைரியமும் மிகுந்தவர் என்றும் புகழ்ந்து கொண்டிருந்த நிலையிலும் ஜெயலலிதா தமிழ்நாட்டின் மீதும் உழைக்கும் மக்களின் மீதும் வெறுப்புணர்வு கொண்ட பாசிஸ்ட் என்பதை புதிய ஜனநாயகம் துணிவுடன் எழுதியது. பாசிச ஜெயா தமிழ்நாட்டைப் பிடித்த நோய்; தமிழ்நாட்டை உருக்குலைக்க வந்த சதிகாரி என்றெல்லாம் அட்டைப்படம் போட்டு எழுதியது.

பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் வைத்துக்கொண்டு காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் படங்களை போட்டுக் கொண்டு முற்போக்கு பேசி தி.மு.க., அ.தி.மு.க. என்று மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு சாதி வெறியூட்டி வன்னியர் மக்களை திரட்டி வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த பா.ம.க. ராமதாஸ் ஒரு பச்சோந்தி என்று அட்டைப்படம் போட்டதை ஜனநாயகவாதிகள் பலரும் வரவேற்றனர் (பா.ம.க-வினர் வடமாவட்டங்களில் பல ஊர்களில் கடைகளில் இருந்த இதழ்களை பணம் கொடுத்து வாங்கி கிழித்தெறிந்தனர்).

அதேபோல், தமிழீழ மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் தனி ஈழக் கோரிக்கையை, ஆயுதப் போராட்டத்தை தமிழ்நாட்டின் பல்வேறு தமிழ் இனவாத அமைப்புகளும் தனிநபர்களும் இங்கு தத்தமது நோக்கங்களுக்கேற்ப தேர்தல் வாக்கு அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர்.

அந்நிலையில் சிங்கள இனவெறி பாசிஸ்டுகளை வீழ்த்த இலங்கையில் வர்க்க ஒற்றுமையின் தேவையை உணர்த்தியவாரே “ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆதரிப்போம்” என்று வர்க்க கண்ணோட்டத்துடன் சரியான முழக்கத்தை முன்வைத்து ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரிக்க மக்களுக்கு அறைகூவல் விடுத்தது.

புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடுகள் மிகச் சரியானவை என்பதை 2009-ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலின் முடிவுகள் அழுத்தமாகப் பதிவு செய்தன. உலகம் முழுவதும் இருக்கும் தமிழின விடுதலையை விரும்பும் ஜனநாயகவாதிகள் பலரும் அவற்றை உணர்ந்து ஏற்றனர். இறுதியாக பாசிச ராஜபக்சேவை நாட்டைவிட்டே விரட்டியடித்து உலகின் முகத்தை தம்பக்கம் திருப்பிய சிங்கள, தமிழ் மக்களின் எழுச்சி புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை கல்வெட்டில் செதுக்கின என்றால் மிகை இல்லை.

இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஆளும்வர்க்கப் பத்திரிகைகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வருகையில் புதிய ஜனநாயகம் உழைக்கும் வர்க்கத்தின் சார்பாக நின்று ஒவ்வொரு போராட்டங்களின் அனுபவங்களையும் தொகுத்து மக்கள் முன்னால் எடுத்து வைத்துள்ளது.

1990-களில் நடந்த அமெரிக்க-ஈராக் வளைகுடா போரில் தொடங்கி, செக்கஸ்லோவேக்கியா, யுகோஸ்லோவியா ஆகிய மறைந்து போன நாடுகளில் அமெரிக்கா நிகழ்த்திய உள்நாட்டுப் போர்களைப் பற்றியும் எரித்திரியாவின் தேச விடுதலைப் போராட்டத்தை பற்றியும் இன்று நடந்து வருகின்ற ரஷ்ய-உக்ரைன் போர், இஸ்ரேல் காசா மீது நடத்தி வருகின்ற போர்வெறி தாக்குதல் வரையிலும் எல்லா தேசிய சர்வதேசிய அரசியல் பொருளாதாரப் பிரச்சினைகளில் மார்க்சிய லெனினியக்  கண்ணோட்டத்தில் இருந்து பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாட்டினை முன்வைத்திருக்கிறது.

எகிப்திலும் துனிசியாவிலும் நடந்த மக்கள் எழுச்சிகள் யாவும் பாசிச சர்வாதிகார ஆட்சிகளை பணியவைத்தன என்றாலும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் கட்சியும் அதன் தலைமையிலான ஒரு ஐக்கிய முன்னணியும் இல்லாத நிலையில் அப்போராட்டங்கள் ஒரு போதும் அதன் நோக்கத்தை அடைய முடியாது என்பதை புதிய ஜனநாயகம் மீண்டும் மீண்டும் தெளிவாக எடுத்துவைத்தது.

எல்லா காலக்கட்டத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்று கூறிக்கொள்வோர், இந்திய இடதுசாரி பிரிவினர் எனப்படுவோர் பலரிடமும் நிலவிய பின்நவீனத்துவம் உள்ளிட்ட பலவகையான ஏகாதிபத்திய சித்தாந்தங்களையும் மற்றும்  வர்க்க சமரச சந்தர்ப்பவாதக் கண்ணோட்டங்களையும் எதிர்த்து தொடர்ந்தும் சித்தாந்த போராட்டம் நடத்தி ஏகாதிபத்திய சித்தாந்தங்களை தோலுரித்திருக்கிறது புதிய ஜனநாயகம்.

ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவின் பாசிச சர்வாதிகாரம் மேலேறித் தாக்கும் இன்றைய காலத்தில் உழைக்கும் மக்களைச் சகோதர யுத்தங்களில் ஈடுபடுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுகிறது பாசிசக் கும்பல். இந்த அயோக்கியத்தனங்களுக்கு எதிராக எல்லா நிலைகளிலும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது புதிய ஜனநாயகம்.

ஆட்சியாளர்களான பாசிசக் கும்பல், உழைக்கும் மக்களின் பண்பாட்டுத்தளங்களில் இயல்பாக வெளிப்படும் சின்னஞ்சிறிய வேற்றுமைகளை எல்லாம் பெருக்கிக்காட்டி, உழைக்கும் மக்களை பலவகைப் பிரிவுகளாய், சிறு சிறு குழுக்களாய் உடைத்துப் பிரித்து மோதிக்கொள்ளச் செய்கின்றது. மக்களின் முதன்மையான வர்க்க அடையாளத்தை பின்னுக்குத் தள்ளி மறைத்து, சாதி, மத, இன, மொழி அடையாளங்களை கூர்தீட்டி அடையாள அரசியலாக முன்னுக்குத் தள்ளுகின்றன என்றபோதிலும் அவையெல்லாம் மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள் எவற்றையும் தடுத்து நிறுத்தி விடுவதில்லை. உழைக்கும் மக்களின் அத்தகைய எல்லா போராட்டங்களுக்கும் புதிய ஜனநாயகம் தன் ஆதரவுகரங்களை நீட்டி இருக்கிறது, வழிகாட்டியிருக்கிறது.

அத்துடன், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அதானி – அம்பானி பாசிசக் கும்பல் இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் எல்லா தாக்குதல்களையும் செய்யும் எல்லா அட்டூழியங்களையும் அவற்றின் காரண காரியங்களை எடுத்துக்காட்டுவதுடன் அனைத்துத் தருணங்களிலும் அவற்றை எதிர்த்துச் செயலாற்றி இருக்கிறது.

மேலும், இன்று பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் கூட நடைமுறையில் பாசிசத்தைப் பற்றிய அச்சத்தையும் அதன் ஆபத்தையும் பிரச்சாரம் செய்வதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். இது தவிர்க்கவியலாமல் மக்களை மேலும், குழப்பத்தில் ஆழ்த்துகிறது.  புதிய ஜனநாயகம் மட்டுமே பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றை முன்வைக்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வை பாசிச எதிர்ப்புடன் பிணைக்கிறது.

இனியும் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அதானி – அம்பானி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் கருத்தியல் தளத்தில் முன்னணி பாத்திரத்தை செவ்வனே ஆற்ற உறுதியேற்கிறோம். அனைவருக்கும் நவம்பர் 7 ரசியப் புரட்சி நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்!


ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



2 மறுமொழிகள்

  1. புதிய ஜனநாயகம் இதழின் 40 ஆண்டு கால சமூகப் பங்களிப்பு என்பது பாராட்டத்தக்கது என்பது மட்டுமல்ல… பல்வேறு தடைகளைத் தாண்டி தமிழ்நாட்டில் அறிவுத்துறையினர் மத்தியில் புரட்சிகர மரபை வளர்த்தெடுத்ததில் அதன் பங்கு மிக மிக முக்கியமானது…

    புதிய ஜனநாயகத்தின் வளர்ச்சியில் பங்களித்த அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்!

  2. “இன்று பாசிசத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் கூட நடைமுறையில் பாசிசத்தைப் பற்றிய அச்சத்தையும் அதன் ஆபத்தையும் பிரச்சாரம் செய்வதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். இது தவிர்க்கவியலாமல் மக்களை மேலும், குழப்பத்தில் ஆழ்த்துகிறது. புதிய ஜனநாயகம் மட்டுமே பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு எனும் மாற்றை முன்வைக்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்கான உடனடி தீர்வை பாசிச எதிர்ப்புடன் பிணைக்கிறது”

    கட்டுரையின் மேற்கண்ட பத்தி விவாதத் தளத்திற்கு பரவலாக கொண்டு செல்ல வேண்டிய விசயத்தை சுட்டிக் காட்டுவதாக உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க