ந்திர மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஏ.எம்.புரம் கிராமத்தின் யானாடி காலனி பகுதியில், 22 வயதுடைய சுஷாந்த் என்ற காமவெறிபிடித்த மிருகம், நான்கு வயது சிறுமியைக் கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்து கழுத்தை நெரித்து படுகொலை செய்த சம்பவம் ஆந்திர மாநில மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

சிறுமியின் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான சுஷாந்த், நவம்பர் 1-ஆம் தேதியன்று மாலை வேளையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட்டுகள் மூலம் ஆசைக்காட்டி அப்பகுதியில் உள்ள பள்ளியின் பின்புற வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு அக்குழந்தையை ஈவிரக்கமற்ற முறையில் பாலியல் வல்லுறவு செய்து கொன்று உடலைப் புதைத்துள்ளான்.

மாலை வெகு நேரமாகியும் சிறுமி வீட்டுக்கு வராததால், அச்சிறுமியின் பெற்றோர்கள் வடமலைப்பேட்டை போலீசிடம் புகார் அளித்துள்ளனர். சுஷாந்துடன் தனது மகளைக் கடைசியாகப் பார்த்ததாகவும் அவர் வழக்கமாக தங்கள் இல்லத்திற்கு வருவார் என்றும் சிறுமியின் தாயார் போலீசிடம் தெரிவித்துள்ளார். இதனால் நவம்பர் 2-ஆம் தேதி காலை சுஷாந்தை காவலில் எடுத்து போலீசு விசாரணை நடத்தியுள்ளது.

இந்த விசாரணையில் சுஷாந்த் பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எல்.சுப்பாராயுடு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும், சுஷாந்த் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டப்பிரிவுகளின் கீழ் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இச்சம்பவம் ஆந்திர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இச்சம்பவம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. மேலும் அவை சமீபகாலமாக அதிகரித்தும் வருகின்றன. அவற்றில் சில மட்டுமே செய்திகளாக உலகத்தின் வெளிச்சத்திற்கு வருகின்றன.


படிக்க: பீகார்: கடனை அடைக்க பெற்ற குழந்தையை விற்ற அவலம்


இத்தகைய பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து அவை சமூகத்தில் விவாதப்பொருளாகும் போது, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலமே பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்ற குரல்கள் எழுகின்றன. இந்த அரசுக்கட்டமைப்பின் மூலம் உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், மனிதர்களை ஆபாசவெறி பிடித்தவர்களாக மாற்றுவதற்கான அடிப்படைகளை ஒழித்துக்கட்டாமல் கடுமையான சட்டங்கள் மூலம் மட்டும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்துநிறுத்த முடியாது.

ஏனென்றால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக அணுகக்கூடிய வகையில் உள்ள ஆபாச இணையதளங்களே மனிதர்களை ஆபாசவெறிபிடித்த மிருகங்களாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆபாச பத்திரிகைகள், திரைப்படங்களில் வரும் ஆபாசக் காட்சிகள் ஆபாச சிந்தனைகளிலேயே மனிதர்களை வைத்திருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதும் இந்த ஆபாச இணையதளங்களின் தாக்கத்தினாலே ஆகும்.

இதனை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நன்கறிந்தும் ஆபாச இணையதளங்களைத் தடை செய்வதற்கான அதிகாரம் தங்களிடம் உள்ள போதிலும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ஆபாசவெறிக்குத் திட்டமிட்டு மக்களைப் பலியாக்குகின்றன. ஆகவே மக்களிடம் ஆபாசவெறி புகுத்தப்படுவதற்கான அடிப்படைகளை ஒழித்துக்கட்டாமல் பாலியல் வன்கொடுமைகளை ஒழித்துக்கட்ட முடியாது. அதற்கான போராட்டங்களைக் கட்டியமைப்பதே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த விழைபவர்களின் பிரதானக் கடமையாகும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க