பீகார்: கடனை அடைக்க பெற்ற குழந்தையை விற்ற அவலம்

ஹரூன்- ரெஹானா தம்பதியினரைப் போல, வறிய நிலையில் உள்ள மக்களிடமும் கடன் தொல்லையால் அவதிப்படும் மக்களிடமும் பணத்திற்கு குழந்தையை விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நெருக்கடி கொடுத்து குழந்தைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மாபியா கும்பல்கள் போலீசு துணையில்லாமல் பீகார் உட்பட எந்த மாநிலத்திலும் இயங்க முடியாது.

பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தில் உள்ள பச்சிரா கிராமத்தில் வசித்துவரும் முகமது ஹரூன்- ரெஹானா கட்டூன் என்கிற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள் என எட்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தங்களின் வறுமை காரணமாகத் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.50,000 கடன் வாங்கியுள்ளனர். கடனுக்கான தவணையைச் செலுத்தக்கூறி நிதி நிறுவன அதிகாரிகள் இவர்களுக்குத் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். எனவே பணத்திற்கு வேறுவழியின்றி மிகுந்த மனவேதனையுடன் தங்களுடைய ஒன்றரை வயதான குர்பான் என்ற பச்சிளம் குழந்தையை இவர்கள் விற்றுள்ளனர்.

குழந்தையை விற்ற சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ரெஹானா, “தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனின் தவணை கடந்த மூன்று மாதங்களாக நிலுவையிலிருந்ததால் மிகுந்த மன அழுத்தத்திலிருந்தேன். தவணையைச் செலுத்தக்கூறி நிறுவனத்தின் முகவர்கள் எங்களைத் துன்புறுத்தினார்கள். கடனைத் திருப்பி செலுத்தாததால் எங்கள் மீது வழக்குத் தொடரப்போவதாகக் கூறினர். இதன் பின்னர், கடனை திருப்பிச் செலுத்துவதற்காகக் குழந்தையை விற்கும்படி என் சகோதரர் தன்வீர் கூறியதால் நான் குழந்தையை விற்க முடிவு செய்தேன்” என்று கூறுகிறார்.

கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி, ஹரூன் – ரெஹனா தங்களுடைய குழந்தையை தன்வீரிடம் விற்கக் கூறி ஒப்படைத்துள்ளனர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவருக்கு ரூ.9,000-க்கு குழந்தையை விற்றுள்ளார். ஆனால், குழந்தை ரூ.45,000-க்கு விற்கப்பட்டதாக ஆரிபின் உறவினர் கூறுகிறார். தன்வீர் ஆரிபிடம் குழந்தையை எவ்வளவு ரூபாய்க்கு விற்றார் என்பது எனக்குத் தெரியாது என ரெஹானா போலீசிடம் கூறியுள்ளார். மேலும், தன்வீர் குழந்தையை விற்கத் தன்னைக் கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

ஆரிப் குழந்தையை இரண்டு லட்ச ரூபாய்க்கு பெங்களூருவில் உள்ள ஒருவருக்கு விலை பேசியுள்ளார். ஆரிப் குழந்தையை அவருக்கு விற்பதற்கு முன்னதாகவே ஹரூன் – ரெஹானா தம்பதியினர் ரூ.9,000 குழந்தையை விற்ற செய்தி மக்கள் மத்தியில் பரவி பேசுபொருளானதால் போலீசு ஆரிபிடம் இருந்து குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. குழந்தைகள் பெற்றோர்கள் இருவரையும் காவலில் வைத்துள்ளது.


படிக்க: இருபதாயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்கும் அவல நிலையில் உ.பி மக்கள்!


ஹரூன்- ரெஹானா தம்பதியினரைப் போல, வறிய நிலையில் உள்ள மக்களிடமும் கடன் தொல்லையால் அவதிப்படும் மக்களிடமும் பணத்திற்கு குழந்தையை விற்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நெருக்கடி கொடுத்து குழந்தைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மாபியா கும்பல்கள் போலீசு துணையில்லாமல் பீகார் உட்பட எந்த மாநிலத்திலும் இயங்க முடியாது. குழந்தைகளை விற்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் பேசு பொருளாகும் போதே வேறுவழியின்றி அரிதாக குழந்தைகளை மாபியா கும்பல்களிடம் இருந்து மீட்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

மற்றபடி, பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க / பா.ஜ.க கூட்டணி ஆளும் வட இந்திய மாநிலங்களில் உள்ள உழைக்கும் மக்கள் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் குழந்தைகளைக் கடத்தும் மாபியா கும்பல்களின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். சான்றாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் நுண்கடன் நிறுவனங்களின் பிடியில் சிக்கித்தவித்த ஹரேஸ்-லட்சுமினா தம்பதியினர் மருத்துவச் செலவுக்காக இருபதாயிரம் ரூபாய்க்கு தங்களுடைய குழந்தையை விற்றுள்ளனர்.

ஆகவே இந்நிகழ்வுகள் மூலம் பா.ஜ.க. கும்பல் தாங்கள் ஆளும் மாநிலங்கள் வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவது அப்பட்டமான பொய் என்பது மீண்டும் அம்பலப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வறிய நிலையில் வாழ்ந்து வருவது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க