உத்தரப் பிரதேசத்தில் செப்டம்பர் 4 ஆம் தேதி பிறந்த குழந்தையின் மருத்துவச் செலவிற்கான பணத்தைக் கட்டமுடியாத நிலையில், இடைத்தரகர் மூலம் 20,000 ரூபாய்க்கு தனது மற்றொரு குழந்தையை விற்று பணத்தைக் கட்டியுள்ளார் ஹரேஸ்.
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் தஷாவா கிராமத்தில் உள்ள பெதிஹாரி தோலாவில் ஹரேஸ், அவரது மனைவி லட்சுமினா இருவரும் குழந்தைகளுடன் வயல்வெளியில் ஒரு ஓலைக் குடிசையில் வசித்து வருகின்றனர். வீட்டில் சிறிய மின்விசிறி, கேஸ் அடுப்பு சில துணிகளைத் தவிர அவர்களிடம் வேறு எதுவும் இல்லை. 40 வயது கூலித் தொழிலாளியான ஹரேஷ் குரேப்ஸ்தானில் உள்ள செங்கல்சூளையில் தினமும் ஆயிரம் செங்கற்களை ஏற்றினால் 160 ரூபாய் சம்பளம் கிடைக்கும் வேலையைப் பார்த்து வந்தார். இந்நிலையில், அந்த வேலையினையும் இழந்ததால் வேலை கிடைப்பது சிரமமானது. இருப்பினும் வேறு வேலைகளுக்குச் செல்வதன் மூலம் 300 முதல் 400 ரூபாய் வரை ஈட்டி வந்தார்; மாதம் 10 – 15 நாட்களுக்கு மட்டுமே வேலை இருக்கும்.
குடும்பத் தேவையினை சமாளிக்க முடியாத நிலையில் உள்ளூர் மக்களிடம் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்வதற்காக 10 கட்டா நிலத்தைக் குத்தகைக்கு ஹரேஷ் வாங்கினார். அந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்காக நெல், விதைகள் வாங்குவதற்கு மீண்டும் உள்ளூர் மக்களிடம் கடன் வாங்கினார். ஆனால் மழை இல்லாததால் விவசாயம் அவரை மேலும் மேலும் கடனாளியாக்கியது. இதனால் விவசாயத்தை விட்டுவிட்டு மீண்டும் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவருடைய 400 ரூபாய் சம்பளம் குடும்ப செலவுகளுக்கே போதாத நிலையில் கடனை எவ்வாறு கட்ட முடியும். இந்த சமயத்தில் லட்சுமினாவிற்கு பழக்கமான பெண்கள் சிறு நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதன் மூலம் உங்களுடைய கடனையெல்லாம் அடைத்து விடலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர். அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் ஐந்து மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடன்களை வாங்கியுள்ளனர்.
உத்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி கடந்தாண்டு நவம்பர் 18 அன்று லட்சுமினாவுக்கு 30,000 ரூபாய் கடன் வழங்கியது. அதில் நிறுவனமானது செயலாக்கக் கட்டணம் 354 ரூபாய் மற்றும் காப்பீட்டுக் கட்டணமாக 754 ரூபாயினை எடுத்துக்கொண்டு 28.892 ரூபாயினை கையில் கொடுத்தது. இதுமட்டுமல்லாமல் 15 நாட்களுக்கு ஒரு முறை 740 ரூபாயைத் தவணையாக செழுத்த வேண்டும். 24 மாதங்களுக்கு வட்டியாக 3892 ரூபாய் செலுத்த வேண்டும். 2024 ஏப்ரல் மாதத்திற்கு மேல் அவர்களால் கடனுக்கான வட்டியினை செலுத்த முடியவில்லை.
படிக்க: உத்தரப்பிரதேசம்: மரத்தில் சடலங்களாகத் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட தலித் சிறுமிகள்
இதேபோன்று பஹல் ஃபைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடட் என்கிற நிறுவனம் 46,200 ரூபாய் கடன் வழங்கியது. அதற்கான வட்டியினையும் கட்டமுடியவில்லை. கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ஸ்பந்தனா ஸ்பூர்த்தி பைனான்சியல் நிறுவனம் 42,200 ரூபாய் கடன் வழங்கியது. அதற்கான வட்டியையும் தொடர்ந்து கட்டமுடியவில்லை.
மேலும் ஃபியுஷன் பைனான்சியல் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபர் 19 ஆம் தேதி கால்நடைகள் வாங்குவதற்காக 45,000 ரூபாய் கடன் வழங்கியது அதற்கான வட்டியையும் தொடர்ந்து கட்ட முடியவில்லை. IIFL என்கிற நிறுவனம் 42,000 ரூபாய் லக்ஷ்மமினாவுக்கு கடன் கொடுத்துள்ளது. அதற்கான வட்டி தொகையினையும் தொடர்ந்து கட்டமுடியவில்லை.
நுண்கடன் நிறுவனங்கள் கடன் கொடுத்து அவர்களுடைய வறுமையை மேலும் அதிகப்படுத்தின. ஒரு கட்டத்திற்கு மேல் கடன் தொகையினை கட்டமுடியாத நிலையில் நுண் கடன் நிறுவனங்கள் அவர்களுக்கு மனதளவில் அழுத்தத்தை ஏற்படுத்தின. கடந்தாண்டு டிசம்பரில் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள செவர்ஹி பகுதியின் மிஸ்ரெளலி கிராமத்தில் நுண்கடன் வலையில் சிக்கிய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அவர்களை மேலும் மனதளவில் பாதித்தது.
இப்படி வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் சூழலில் செப்டம்பர் 3 ஆம் தேதி லட்சுமினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன் அவர்களிடம் மருத்துவச் செலவிற்குக் கூட ஒரு ரூபாய் பணமில்லாத சூழலில் ஹரேஷ் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே பசி எடுக்கும் போதெல்லாம் அவரும் அவருடைய மூன்று குழந்தைகளும் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துள்ளனர். 4 ஆம் தேதி லக்சுமினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை வீட்டிற்குக் கூட்டிச் செல்ல 4,000 ரூபாயினை மருத்துவமனையை நடத்தும் பெண் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். “4,000 ரூபாயினைக் கட்டிய பிறகு குழந்தையினை கொண்டுப் போ” என அப்பெண் தெரிவித்த நிலையில் செய்வதறியாது நின்றுள்ளார்.
மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே தன்னுடைய இரண்டு வயது குழந்தையினை விற்பது குறித்து இடைத்தரகர் ஒருவரிடம் பேசியிருந்த நிலையில், மருத்துவமனையில் உள்ளவர்களும் பணம் கேட்டு அவரை வற்புறுத்தவே, வேறு வழியில்லாமல் இடைத்ரகாருக்கு போன் செய்தார். உடனே ஐந்து பேருடன் வந்த இடைத்தரகர் தத்தெடுக்கும் பத்திரத்தின் மூலம் ஹரேஸிடம் கட்டை விரல் ரேகையினை வாங்கிக் கொண்டு ரூபாய் 20,000 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளனர். அதில் 4,000 ரூபாயினை மருத்துவமனையில் கட்டிவிட்டு தன் குழந்தை மற்றும் மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
படிக்க: உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்
அடுத்த நாளே அவரின் வீட்டிற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் ஹரேஷை போலீஸ் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று விசாரணை நடத்தி அவரிடம் குழந்தையைத் தத்தெடுத்தவரின் நம்பரைக் கேட்டுள்ளனர். அவரிடம் நம்பர் இல்லத்தால் இடைத்தரகரின் நம்பரைப் போலிசிடம் கொடுத்துள்ளார். பிறகு இடைத்தரகர் வீட்டிற்குச் சென்ற போலீஸ் அவரையும் தத்து எடுத்தவர்களையும், மருத்துவமனை பெண்ணையும் கைது செய்து அவர்களின் மேல் கிரிமினல் சதி, ஏமாற்றுதல் பணயக்கைதிகள், ஆள் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் சட்டவிரோத முறையில் செயல்பட்ட மருத்துவமனைக்கு சீல் வைத்த பின்னர் இரண்டு வயது குழந்தை ராஜாவை ஹரேஷிடம் ஒப்படைத்தனர்.
குழந்தையினை பெற்றுக்கொண்ட ஹரேஷ் கூறுகையில் “நேற்றிலிருந்து நாங்கள் யாரும் சாப்பிடவில்லை. மீண்டும் எங்கள் குழந்தை எங்களுக்குக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இல்லாமல் இருந்தோம். இதுவரை குத்தகைக்கு நிலமோ, ரேஷன் அட்டையோ பெற முடியவில்லை ரேஷன் அட்டை கேட்டு பலமுறை பிரதான் ஜியிடம் (பஞ்சாயத்து தலைவர்) கோரிக்கை வைத்தேன். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “இதயம் நொறுங்குகிறது. நாட்டில் உயிர்வாழ மனிதர்களை விற்பது இப்போது வழக்கமாகிவிடுமோ..” என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியதோடு “லக்சுமினா மற்றும் ஹரேஷ் குடும்பம் பசியில் போராடும் போது அவர்களுக்கு ரேஷன் அட்டை ஏன் வழங்கப்படவில்லை? இலவச சிகிச்சையுடன் கூடிய ஆயுஸ்மான் பாரத் அட்டை ஏன் அவர்களுக்கு வழங்கப்படவில்லை? ஹரேஷ்குக்கு ஏன் வேலை இல்லை? ஏன் அவரிடம் MNREGS (நூறு நாள்) வேலை அட்டை இல்லை? லட்சுமினாவின் குழந்தைகள் ஏன் அங்கன்வாடிகளுக்கோ பள்ளிகளுக்கோ செல்லவில்லை? ஏழை மக்கள் ஏன் அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். இது விழிப்புணர்வின்மையா அல்லது அரசின் தோல்வியா? ஒரு குடும்பம் இரண்டு வேலை உணவுக்காகப் போராடும் போது பசியால் குழந்தைகள் கதறி அழும் போது சமுதாயத்தில் ஏன் யாரும் உதவ முன்வரவில்லை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாசிச மோடி அரசானது உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களை வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் என்று பொய்யான பிம்பத்தை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதுபோன்ற மாநிலங்களில்தான் இரண்டு வேலை உணவுக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதனைப் பயன்படுத்திக் கொண்டு நுண் நிதி கடன் நிறுவனங்கள் வறுமையில் உள்ள மக்களுக்குக் கடன் கொடுத்து மேலும் அம்மக்களைப் பட்டினிச் சாவுக்குத் தள்ளுகிறது.
இதுமட்டுமல்லாமல் குழந்தைகளை விற்கும் மாபியா கும்பல்கள் மக்களின் வறுமை நிலையினை பயன்படுத்தி அவர்களுடைய குழந்தையினை விற்று பணத்தைப் பெற்றுத் தருவது அதிகமாகியுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram