திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பாட்டம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மனோஜ் என்ற இளைஞர், மறவர் சாதி வெறியர்களால் வீடுபுகுந்து வெட்டப்பட்ட சம்பவம் அம்மாவட்டத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இத்தாக்குதலில் ஈடுபட்ட ஒன்பது பேரும் 17 முதல் 20 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் என்பது அம்மக்கள் மத்தியில் கூடுதல் பதற்றத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி, மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மனோஜ் என்ற 17 வயது இளைஞர், தனது வீட்டிற்குச் செல்வதற்காக தங்கள் கிராமத்தின் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருமலைக்கொழுந்துபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சாலையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளனர். கார் மனோஜை உரசிச் செல்ல “மெதுவா போங்க” என்று அவர் குரல் எழுப்பியுள்ளார்.
“ஒரு தாழ்த்தப்பட்டவன் தங்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவதா?” என்று சாதிவெறி தலைக்கேறிய அம்மூவரும் காரை நிறுத்திவிட்டு மனோஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மதுபோதையிலிருந்த அந்த சாதிவெறிப் பிடித்த கும்பல் மனோஜை தாக்கியும் உள்ளது. அருகிலிருந்தவர்கள் அங்கு வந்தவுடன் மூவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
ஆனால், ஆதிக்கச் சாதிவெறிப் பிடித்த மூன்று இளைஞர்கள் தங்களுடன் இன்னும் ஆறு பேரைச் சேர்த்துக்கொண்டு மாலை 5.30 மணியளவில் மனோஜின் வீட்டிற்குள் புகுந்து அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மனோஜின் தலையில் பீர் பாட்டிலை அடித்து உடைத்துள்ளனர். அரிவாளால் அவரின் தலை, வலது கால், இடது கால் என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியுள்ளனர். கதவு, சோபா, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். சத்தம் கேட்டு வீட்டிற்கு அருகிலிருந்த மக்கள் கூடியதால் ஆதிக்கச் சாதிவெறியர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கின்றனர்.
இத்தகைய கொலைவெறித் தாக்குதலால் படுகாயமடைந்த மனோஜ் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இத்தாக்குதலால் மனோஜின் தாயார் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார். “அவர்களுடன் முன் பகை என எதுவும் இல்லை. சாலையில் கேள்வி கேட்டதற்காக அடித்திருக்கின்றனர். ஒன்பது பேர் சேர்ந்து வெட்டியிருக்கின்றனர். எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” என அவரின் தாயார் கேள்வி எழுப்புகிறார்.
வழக்கம் போல இந்த சம்பவத்திலும் தாக்குதல் நடத்திய ஆதிக்கச் சாதிவெறியர்களைப் போலீசு உடனே கைது செய்யவில்லை. இதனையடுத்து, இத்தாக்குதலைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதலின் பின்னணியில் உள்ள நபர்களைக் கைது செய்வதில் போலீசு அலட்சியம் காட்டுவதாகக் கூறி, நவம்பர் ஐந்தாம் தேதியன்று தங்கள் கிராமத்தின் அருகில் உள்ள மலைக்குன்றின் மீது ஏறி போராட்டம் நடத்தும் முயற்சியில் மேலப்பாட்டம் மக்கள் இறங்கினர். போலீசு அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
படிக்க: தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கான பின்னணி என்ன?
தாக்குதலில் தொடர்புடையதாக திருமலைக் கொழுந்துபுரம் கிராமத்தில் வசிக்கும் முத்துக்குமார், லட்சுமணன், தங்க இசக்கி உட்பட ஐந்து பேரை போலீசு கைது செய்துள்ளது. அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், கொலை முயற்சி, அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனோஜ் மீதான தாக்குதல் சம்பவம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை மீதான தாக்குதல் சம்பவத்தையே நினைவுபடுத்துகிறது. சின்னத்துரை தன்னுடன் பள்ளியில் படிக்கும் ஆதிக்கச் சாதிவெறிப் பிடித்த சக மாணவர்களாலேயே வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டித் தாக்கப்பட்டதைப் போன்றே, பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் மனோஜும் ஆதிக்கச் சாதிவெறிப் பிடித்த இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மாணவர் மீது இக்கொடிய தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் இளைஞர்களாக இருப்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும். நெல்லை மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களில் சிறுவர்களும் இளைஞர்களும் ஈடுபடுவது முன்பைவிட அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஆதிக்கச் சாதிவெறி என்ற நஞ்சு முன்பைவிட சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் அதிவேகமாக விதைக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இத்தாக்குதல் சம்பவம் மற்றொரு சான்றாகும்.
இவ்வாறு, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல் அதிகரித்து வருவதற்கும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் ஊடுருவி வேலை செய்வதே காரணமாகும். எனவே, ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களையும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலையும் தடை செய்வதன் மூலமே தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியும்.
பிரவீன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram