தமிழ்நாட்டின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான நாசகர சட்டமான தமிழ்நாடு “நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023”-யை அமல்படுத்துவதற்கான சட்டவிதிகளை கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி அரசிதழில் தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஜனநாயக விரோத முறையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் பல சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த மக்கள் விரோத திட்டத்திற்கு கடந்தாண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதியே ஒப்புதல் அளித்து விட்டார். ஆனால், மக்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்பின் காரணமாக இச்சட்டம் ஒரு ஆண்டிற்கும் மேலாய் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது.
ஆனால், தற்போது விவசாயிகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, தன்னுடைய கார்ப்பரேட் சேவைக்காக எந்தவித முன்னறிவிப்புமின்றி நைச்சியமாக இச்சட்டத்திற்கான சட்ட விதிகளை தி.மு.க. அரசு செயலுக்கு கொண்டுவந்துள்ளது.
இச்சட்டத்தின்படி, புதிதாக தொழிற்திட்டம் தொடங்க விரும்புபவர் அத்திட்டத்திற்கு சிறப்புத் திட்ட அனுமதிக்கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் அரசு, அத்திட்டத்தை மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் எனக் கருதினால் அத்திட்டத்தை சிறப்புத் திட்டமாக அறிவித்து ஒரு நிபுணர் குழுவை அமைக்கும். அக்குழுவில் நான்கு அரசு அதிகாரிகள், ஒரு சுற்றுச்சூழல் நிபுணர் உள்ளடங்கியிருப்பர். அக்குழு பொதுமக்கள் கருத்துக் கூட்டம் ஒன்றை நடத்தி, தங்களது உள்ளீடுகளுடன் வரைவு நில ஒருங்கிணைப்புத் திட்டம் ஒன்றை வெளியிடும். அந்த வரைவு திட்டத்தை அரசு மீண்டும் பரிசீலித்து ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கி அரசிதழில் வெளியிடும்.
படிக்க: பரந்தூர் விமான நிலையம் கார்ப்பரேட் சேவையில் தீவிரம் காட்டும் திமுக அரசு!
அதாவது, இந்த நடைமுறை முழுக்க முழுக்க கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில், தொழிற் திட்டத்தை முன்னெடுப்பவரின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதற்கான அதிகாரமே அரசு அமைக்கும் நிபுணர் குழுவுக்கு இல்லை. மேலும், அரசும் கூட ஒப்புதல் அல்லது நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தொழிற்திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாகிருக்கும் என்றால், அதை அரசு நிராகரிக்கலாம் என்ற சரத்தே இச்சட்டத்தில் இல்லை.
மேலும், நீர்நிலைகள் உள்ளடங்கிய 100 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் திட்டமிடப்படும் எந்தவொரு தொழிற் திட்டத்திற்கும் அரசின் சிறப்பு திட்ட அனுமதி வழங்கப்பட்டால், நீர்நிலைகளையும் திட்ட உரிமையாளர் தன் பயன்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என இச்சட்டம் கூறுகிறது. இது நீர்நிலைகள் பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய பிற சட்டங்கள், ஆணைகள் நீர்த்துப்போகும் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
எனவே, இந்த சட்டவிதிகள் மூலம் பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல மக்கள் விரோத திட்டங்களை இனி தி.மு.க. அரசால் எளிதாக செயல்படுத்த முடியும். அதனை எதிர்த்து யாராலும் கேள்வியெழுப்ப முடியாது.
இதன்விளைவாக, தமிழ்நாட்டின் நீர்வளமும் நிலவளமும் கடுமையாக பாதிக்கப்படும். ஸ்டெர்லைட் போன்ற பல நாசகர ஆலைகள் தமிழ்நாட்டிற்குள் செயல்பட அனுமதிக்கப்படும். ‘வளர்ச்சி’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் தாரைவாக்கப்படும். விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கப்படுவர்.
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஏற்படும் விளைவுகளை பற்றி விவசாய சங்கங்களும் ஜனநாயக சக்திகளும் அறிந்திருப்பதால் தான் இச்சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். போராட்டங்களையும் கட்டியமைத்து வருகின்றனர். தற்போதும் இச்சட்டத்தின் விதிகளை வெளியிடப்பட்டதற்கு எதிராக இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நவம்பர் 19-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாட்டின் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பாதுகாக்க வேண்டும் எனக் கருதும் அனைவரும் நில ஒருங்கிணைப்புச் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் இணைந்து போராட வேண்டும். அப்போராட்டங்கள் மூலம் பாசிச பா.ஜ.க-வை எதிர்ப்பதாக பேசிக் கொண்டே தமிழ்நாட்டை கார்ப்பரேட் கும்பலின் வேட்டைகாடாக மாற்ற முயற்சிக்கும் தி.மு.க. அரசை அடிப்பணிய வைக்க வேண்டும்.
பிரவீன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram