ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் அதானிக்குச் சொந்தமான 600 மெகாவாட் சூரிய மின்திட்டத்தை (Solar project) எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.
ஜெய்சல்மரில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது பையா கிராமம். இங்குதான் அதானியின் சூரிய மின்திட்டம் அமைந்துள்ளது. இதற்காக அப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதையும் மேய்ச்சல் நிலங்கள் கைப்பற்றப்படுவதையும் எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். அப்பகுதியைச் சார்ந்த ஷியோ தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவீந்திர சிங் பதியும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாகக் கூறி போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய போலீசு 14 பேரை கைது செய்துள்ளது. அதன் பிறகான போலீசின் நடவடிக்கைகளில் மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஜெய்சல்மரின் போலீசு கண்காணிப்பாளர் சுதிர் சவுத்ரி, சூரிய மின்திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் நிலத்தில்தான் அமைந்துள்ளது எனக் கூறுகிறார். ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர் சுமர் சிங் சன்வதா கூறுகையில், ராஜஸ்தானை ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு, ஜெய்சல்மர் முழுவதும் ஏராளமான மேய்ச்சல் நிலங்களை அதானியின் “சோலார்” நிறுவனத்திற்காக ஒதுக்கியுள்ளதை அம்பலப்படுத்துகிறார்.
கடந்த மாதத்தில் பையா கிராமத்தைச் சார்ந்த மக்கள், இத்திட்டத்திற்காக மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது எனக் கூறி ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர். இக்கிராம மக்கள் மேய்ச்சல் நிலங்களை புனிதமாகக் கருதுகின்றனர். புனித நிலம் என பொருள்படும் “ஓரான்” (Oran) என்ற வார்த்தையாலேயே மக்கள் இந்நிலங்களை குறிப்பிடுகின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு பயன்படுகின்ற இந்நிலங்கள்தான் அவர்கள் வாழ்வின் ஆதாரமாகும்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே இத்தகைய நிலங்களை அரசு கைப்பற்றுவதற்கு எதிராக போராடி மக்கள் அந்நிலங்களை காத்து வருகின்றனர். இந்நிலங்களில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டுவதற்குக் கூட அவர்கள் அனுமதிப்பதில்லை. இவை அடர்ந்த காடுகளாகவும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மிக்கவையாகவும் பல்லுயிர்ச்சூழல் கொண்டதாகவும் உள்ளன. ஜெய்சல்மர் மக்கள் அரசின் பதிவேடுகளில் இந்நிலங்களை ஓரான் என்று பதிவு செய்யக் கோருகின்றனர். அப்போதுதான் தங்கள் நிலங்கள் காப்பாற்றப்படும் என்று கருதுகின்றனர்.
படிக்க: அதானி மூலம் வங்கதேச அரசிற்கு நெருக்கடி கொடுக்கும் மோடி அரசு
ஆனால், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. அரசோ, இந்நிலங்கள் வருவாய்த்துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது. மேலும் ஜெய்சல்மரில் உள்ள சுமார் 2.02 லட்சம் ஹெக்டேர் ஓரான்களை (Orans) நிகர்நிலைக் காடுகளாக (Deemed Forest) அறிவிக்க அரசானது முன்மொழிந்துள்ளது. இத்தகைய நிகர்நிலைக் காடுகளை பிற நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம் என 2023-இல் ஒன்றிய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் கால்நடை மேய்ச்சலுக்கு கட்டுப்பாடுகள் வரலாம், இக்காடுகள் தனியார் முதலாளிகளின் லாப நோக்கங்களுக்காக அழிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு, அவர்களின் கோபத்தை தூண்டியுள்ளது.
கைது செய்யப்பட்ட 14 பேரில் ஒருவரான பையா கிராமத்தைச் சார்ந்த 36 வயதான மோதி சிங், “எங்கள் முன்னோர்கள் இந்த நிலத்தை ஓரானாக (புனித நிலம்) விட்டுச் சென்றனர். இந்த நிலம் தற்போது அரசுக்குச் சொந்தமானது. புனிதமான மரங்கள் என்பதால் பல ஆண்டுகளாக எந்த மரத்தையும் வெட்டவில்லை. தற்போது அதானி இந்த நிலங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார்” என்று கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் மற்றொருவரான பஞ்சாயத்து சமிதி உறுப்பினர், சோப் சிங் பதி “அரசாங்கம் நிலத்தை கையகப்படுத்துவது, மேய்ச்சல் உரிமையை அகற்றிவிடும்” என்று கூறுகிறார். அப்பகுதியைச் சார்ந்த 60 வயதான முதியவர் “என்னிடம் சுமார் 50 மாடுகள் மற்றும் பல செம்மறி ஆடுகள் உள்ளன. எனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு எங்கே கொண்டு செல்வேன்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
அக்கிராமத்தைச் சார்ந்த இளைஞரான ராம் சிங் பதி “ஒரு கிளையைக் கூட வெட்ட முடியாத எண்ணற்ற மரங்கள் அந்த நிலத்தில் (ஓரான்) உள்ளன. அங்கு உள்ள மரங்களும் செடிகளும் நமது நம்பிக்கையின் சின்னங்கள். இந்த நிலத்தை அபகரிக்க அரசு அதானியுடன் கூட்டுச் சேர்கிறது” என்று அம்பலப்படுத்தியுள்ளார்.
மக்களின் உணர்வுகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, மக்கள் பயன்பாட்டுக்கான மேய்ச்சல் நிலங்களை அதானிக்கு அள்ளிக் கொடுக்க பா.ஜ.க. அரசு துடிக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு, இயற்கையையும் அழிப்பதன் மூலம் அதானிக்கு கொள்ளை லாபத்தை உத்தரவாதப்படுத்துவதையே பா.ஜ.க. அரசு தனது புனிதமான பணியாக கொண்டுள்ளதை இது காட்டுகிறது. இதைத்தான் பாசிச மோடி கும்பல் நாடு முழுவதும் செவ்வனே செய்து வருகிறது.
அய்யனார்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram