உத்தரப்பிரதேசத்தின் தேர்வாணையம் முன்பு தேர்வை ஒரே ஷிப்டாக நடத்த வேண்டும் என்று கடந்த நான்கு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக யோகி அரசு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி உத்தரப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Uttar Pradesh Public Service Commission UPPSC) வெளியிட்ட அறிக்கையில் மாகாண குடிமைப் பணிக்கான (Provincial Civil Services – PCS) முதன்மைத் தேர்வு (preliminary) டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் இரண்டு ஷிப்டுகளாகவும் ஆய்வு அதிகாரி, உதவி ஆய்வு அதிகாரி (Review Officer RO, Assistant Review Officer ARO) பணிக்கான தேர்வு டிசம்பர் 22, 23 ஆம் தேதிகளில் மூன்று ஷிப்டுகளாகவும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வாணையத்தின் தலைமையிடம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் நவம்பர் 11 அன்று கூடி “ஒரே நாள் ஒரே ஷிப்ட்” என்ற முழக்கத்தை எழுப்பினர். தேர்வு பல ஷிப்ட்களாக நடத்தப்பாட்டால் தேர்வுத்தாள் கசிவுக்கு வழிவகுக்கும் என்பதால் ஒரே நாளில் தேர்வை நடத்த வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பா.ஜ.க அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் நவம்பர் 13 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வெளியே ஊர்வலம் நடத்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.
படிக்க: உத்தரகாண்ட்: 24 ஊர்க்காவல் பணிக்கு 21,000 பேர் விண்ணப்பித்த அவலம்
மாணவர்களின் போராட்டம் குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒரே தேசம் ஒரே தேர்தலை ஊக்குவிக்கும் அரசாங்கத்தால் இளைஞர்களுக்கான தேர்வுகளைக் கூட ஒரே நாளில் நடத்த முடியவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் உறுதியான தொடர் போராட்டத்திற்குப் பணிந்து நவம்பர் 14 முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பி.சி.எஸ் முதன்மைத் தேர்வை ஒரே நாளில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தேர்வாணையம் எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஆய்வு அதிகாரி, துணை ஆய்வு அதிகாரி பணிக்கான தேர்வுகளை ஒரே நாளில் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு பரிசீலனை செய்து அளிக்கின்ற அறிக்கையின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர். ஓ / ஏ. ஆர். ஓ தேர்வை ஒரே நாளில் நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
உறுதியான போராட்டங்கள் மூலம் மட்டுமே பாசிச கும்பலைப் பணிய வைக்க முடியும் என்பதை மாணவர்களின் போராட்டம் நமக்கு மீண்டும் உணர்த்துகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
மக்களின் போராட்டங்களே பாசிச சக்திகளை பின்வாங்க வைக்கிறது.