மதுரையில் பட்டியல் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கக் கோரி காட்டுநாயக்கன் சமூகத்தினர் நவம்பர் 8 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சியில் உள்ள சத்தியமூர்த்தி நகரில், “காட்டுநாயக்கன்” எனும் பழங்குடியின மக்கள் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். காடுகளில் வேட்டையாடி வாழ்ந்துவந்த, வேட்டையாடுதலை குலத்தொழிலாகக் கொண்ட இப்பழங்குடியின மக்களை, காடுகளிலிருந்து கடந்த காலத்தில் அரசு விரட்டியடித்து விட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்பிறகு இம்மக்கள் நாடோடி சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது மதுரை சத்தியமூர்த்தி நகரில் சுமார் 2,000-த்திற்கும் மேற்பட்ட காட்டுநாயக்கன் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். வாழ்வாதாரத்திற்காக சோசியம் பார்ப்பது, குறி சொல்வது போன்ற தொழில்களை செய்து பிழைத்து வருகின்றனர். வாழ்வாதாரத்திற்கு வேறு வழியில்லாமலும் தவித்து வருகின்றனர்.
இருப்பினும், தங்களது இந்த நிச்சயமற்ற வாழ்நிலை தங்களோடு முடியட்டும், தங்கள் பிள்ளைகளாவது படித்து நல்ல வேலைக்கு சென்று வாழட்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதனால் சோசியம் பார்ப்பது, குறி சொல்வது போன்ற குலத்தொழிலுக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுமதிப்பதில்லை. கஷ்டப்பட்டு பிள்ளைகளை படிக்க வைத்து வருகின்றனர். இதனடிப்படையில், இந்த ஊரில் சுமார் 400-க்கும் மேலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் படித்து வருகின்றனர். அதற்கேற்ப, கடந்தாண்டு வரை காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு அரசு பட்டியல் பழங்குடியினர் சான்றிதழை (ST Certificate) வழங்கிவந்தது. அதன்மூலம் மக்கள் சில பலன்களை அடைந்து வந்தனர்.
ஆனால், தற்போது திடீரென இம்மக்களுக்கு பட்டியல் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க இப்பகுதி கோட்டாட்சியர் சுகு பிரேம நேசமணி மறுத்துள்ளார். அதன் காரணமாக, கோட்டாட்சியர் அலுவலகமும் இம்மக்களுக்கு பழங்குடியின சான்றிதழை வழங்காமல் அநீதியாக நடந்துகொள்கிறது.
“மதுரை மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இம்மக்களின் (காட்டுநாயக்கன் பழங்குடியின மக்கள்) பழக்கவழக்கங்கள் பழங்குடியினர் பின்பற்றும் வகையில் இல்லை என தெரியவந்துள்ளது. மெய்தன்மை சந்தேகத்துக்கு உரியதாக வாழ்வியல் மாற்றம் உள்ளது. அவர்களது பழக்கவழக்கங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொட்டிய நாயக்கர் சாதியைப் போல உள்ள காரணத்தினால் இந்த சாதிக்கான சான்றிதழை அவர்களுக்கு வழங்க முடியவில்லை” என ஒடுக்கப்பட்ட மக்களின் பழக்கவழக்கத்திற்குள் சென்று ‘புலனாய்வு’ நடத்தி அதன் முடிவை தெரிவிக்கிறது கோட்டாட்சியர் நிர்வாகம்.
ஆனால், “சுமார் 50 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்கக்கப்பட்டுவந்த பட்டியல் பழங்குடியின சான்றிதழ், கடந்த ஆண்டிலிருந்து வழங்கப்படாமல் இருப்பது தங்கள் குழந்தைகளின் கல்விக்கு பெறும் தடையாக உள்ளது” என பெற்றோர்கள் குமுறுகின்றனர். எனவே, காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த தங்களுக்கு மீண்டும் பட்டியல் பழங்குடியின சான்றிதழ் வாங்கப்பட வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர். முன்னர் சத்தியமூர்த்தி நகர் கிராம மந்தையில் போராடிவந்த மக்கள் தற்போது மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், தொடர்ந்து 5-வது நாளாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு வேட்டைக்கு செல்பவர்களை போன்ற வேடமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவருக்கும் பட்டியல் பழங்குடியின சான்றிதழ் வழங்காமல் பள்ளிக்கும் செல்ல மாட்டோம், வீட்டிற்கும் போகமாட்டோம் என உறுதியாக உள்ள மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர் சாதி ஏழைகள் எனக் கூறி ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் அறியவகை ஏழைகளுக்கு 10 சதவிகித இட-ஒதுக்கீடு வழங்கும் இந்த அரசு, காடுகளில் இருந்து அரசால் விரட்டியடிக்கப்பட்ட பழங்குடி காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு பட்டியல் பழங்குடியின சான்றிதழ் வழங்க மறுத்து மக்களுக்கு துரோகமிழைக்கிறது. அரசும் அதிகார வர்க்கமும் எப்போதுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் துணைநிற்பதில்லை, மாறாக அது அவர்களை ஒடுக்கவே மூர்க்கமாக செயல்படுகிறது என்பதை இத்தகைய பழங்குடியின மக்களின் அடுத்தடுத்த போராட்டங்கள் அம்பலப்படுத்துகின்றன.
ஆனால், நமக்கான உரிமைகளை போராடித்தான் பெற முடியும் என உறுதியாக உள்ள காட்டுநாயக்கன் சமூக மக்கள் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர். போராடும் மக்களுக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் ஆதரவளித்து போராட்டத்தை வெற்றி பெறச்செய்வோம்.
சந்திரன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram