உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் “பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில்” (Neonatal Intensive Care Unit – NICU) கடந்த 15-ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 54 குழந்தைகளில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகியும் தீ விபத்தினால் ஏற்பட்ட கரும்புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ள கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும், மீட்கப்பட்ட 44 குழந்தைகளில் 7 குழந்தைகள் பலத்த தீக்காயத்துடனும், 16 குழந்தைகள் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருவதாக ஜான்சி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், தீக்காயத்தைத் தாங்கும் சக்தி குழந்தைகளுக்கு இல்லை என்பதாலும், நோய்த் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், மருத்துவமனையில் ஏற்பட்ட மின் கசிவுதான் தீ விபத்திற்குக் காரணம் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், 15-ஆம் தேதி மதியத்திற்குப் பின்பு மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசிவைச் சரி செய்யாமல் இருந்த மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தினாலே, இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்திருப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் எம்.பி-யுமான சந்திரபால் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதேபோல், குழந்தைகள் பிரிவிலிருந்த தீயணைப்புக் கருவிகள் காலாவதியாகியிருந்ததும், தீ விபத்தின் போது அலாரம் ஒலிக்கவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. எனவே, 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது மின்கசிவினால் அல்ல, மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உ.பி-யின் யோகி அரசால் நிகழ்த்தப்பட்ட பச்சை படுகொலை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், இந்த ஒரு மருத்துவமனை மட்டுமல்ல உத்தரப்பிரதேசத்தில் உள்ள பெரும்பான்மை அரசு மருத்துவமனைகளின் நிலை இதுவாகத்தான் உள்ளது.
படிக்க: உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா கும்பலின் ஆலை
இந்துராஷ்டிரத்தின் சோதனை சாலையாக இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் சீரழிந்து போயிருக்கும் மருத்துவ கட்டமைப்பால், அப்பாவி மக்கள், குழந்தைகள் உயிர் பறிக்கப்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது.
இதற்கு முன்பாக கடந்த அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி படோன் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுமி உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் . பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமியின் தந்தை, மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவரும் போதிய சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் குழந்தை வேறு வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டே இருந்ததுதான் குழந்தை உயிரிழந்ததற்குக் காரணம் என்று அம்பலப்படுத்தியுள்ளார்.
இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில், ‘போலே பாபா’ என்று அழைக்கப்படும் சாமியாரின் மத சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 121 பேர் உயிரிழந்த கொடூர சம்பவம் அரங்கேறியது. அதிலும், கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமுற்றவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாததால்தான் பலர் உயிரிழந்திருந்தனர். சிகிச்சை அளிப்பதற்குப் படுக்கை வசதி கூட இல்லாமல், மருத்துவமனை வாசலில் உடல்கள் குவிக்கப்பட்டிருந்த அவலம் உத்தரப் பிரதேசத்தின் மருத்துவக் கட்டமைப்பின் லட்சணத்தை அம்பலப்படுத்திக்காட்டியது.
ராமர் கோவில் கட்டுமானப் பணி, மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்டத் திட்டம், பசுமாடுகளுக்குக் கோசாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக கோடிகோடியாக செலவு செய்யும் யோகி அரசு, உழைக்கும் மக்கள் நம்பியிருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் மக்களை கொன்றொழித்து வருகிறது. மேலும், ஒப்பந்த முறையில் மருத்துவர்களையும், சுகாதாரப் பணியாளர்களையும் நியமித்து அரசு நடத்தும் மாவட்ட அரசு மருத்துவமனைகளை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான வேலைகளைத் தீவிரமாகச் செய்துவருகிறது. இது, சீரழிந்து போயிருக்கும் மருத்துவக் கட்டமைப்பை மேலும் மோசமாக்கவே செய்யும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram