கடந்த அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் டெல்லி போலீசுதுறையின் சிறப்புப் பிரிவும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமையும் (NCB) நடத்திய சோதனையில், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் ஆய்வகம் இயங்கிவருவதை கண்டறிந்துள்ளனர். கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் காஸ்னா பகுதியில் இந்த போதைப்பொருள் தயாரிக்கும் ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் மிகவும் ஆபத்தானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் 95 கிலோ எடையுள்ள மெத்தாம்பேட்டமைன் எனும் செயற்கை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, போதைப்பொருள் தயாரிப்பதற்காக வைத்திருந்த அசிட்டோன், சோடியம் ஹைட்ராக்சைடு, மெத்திலீன் குளோரைடு, பிரீமியம் கிரேடு எத்தனால், டோலுயீன், ரெட் பாஸ்பரஸ், எத்தில் அசிடேட் போன்ற இரசாயனங்கள் மற்றும் உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களையும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை கைப்பற்றியது. இதில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டாலும் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை வாய் திறக்கவில்லை.
இந்த ஆலையை டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரும் திகார் சிறை காப்பாளரும் நடத்தி வந்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வேதியியலாளர் ஒருவர் இந்த ஆலையில் போதை மருந்துகளைத் தயார் செய்து வந்துள்ளார். இதனைவிட அதிர்ச்சிகரமானது என்னவெனில், இந்த போதைப்பொருள் தயாரிப்பில் திகார் சிறையில் தற்போது உள்ள மெக்சிகோவை சேர்ந்த தொழிலதிபரும் ஈடுபட்டுள்ளார்.
இத்தொழிலதிபர் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திகார் சிறையில் சிறை கண்காணிப்பாளருடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டு அவர் மூலம் போதைப்பொருள் தயாரிப்பை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த ஆலையில் தயாரிக்கப்படும் போதைப்பொருளின் தரத்தை, இந்த மெக்சிகோ நாட்டவர் சிறையிலிருந்தபடியே பரிசோதித்து உறுதிசெய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
படிக்க: நவசேவா துறைமுகத்தில் ’ஹெராயின்’: அதானிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!
மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் அதிகம் நடக்கும் நாடு. அந்நாட்டில் பல போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான குழுவான சி.ஜே.என்.ஜி. என்றழைக்கப்படும் “கார்டெல் டி ஜாலிஸ்கோ நுாவா ஜெனரேஷியன்” (CJNG – Cartel Jalisco Nueva Generacion) என்ற அமைப்புடன் இத்தொழிலதிபருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதிலிருந்து உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு கும்பலுக்கு மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சி.ஜே.என்.ஜி. கார்டெலானது அமெரிக்காவின் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின்படி உலகின் மிக ஆபத்தான ஐந்து நாடுகடந்த குற்றவியல் அமைப்புகளில் ஒன்றாகும். இந்த கார்டெலானது பல நூறு கிலோ அளவு மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஹெராயின் உற்பத்தி செய்வதாகவும் பல டன் அளவு கோக்கைனை கடத்துவதாகவும் அறியப்படுகிறது. இதன் தலைவன் நெமெசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ், அமெரிக்காவில் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவனாவான். அவனைக் கைது செய்வதற்கு பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா வெகுமதியாக அறிவித்துள்ளது. மேலும், இந்த கார்டலின் பல உறுப்பினர்கள் சி.ஜே.என்.ஜி. உடனான தொடர்புக்காக இந்தாண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்தால் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
மேலும், இந்த கார்டெலானது தீவிர வன்முறை மற்றும் கொடூரமான நடைமுறைகளின் வரலாற்றைக் கொண்டுள்ளது, தற்போதும் வன்முறையை ஓர் ஆயுதமாகக் கையாண்டு வருகிறது. அமெரிக்க நீதித்துறையின்படி, சி.ஜே.என்.ஜி. கார்டெல் உலகின் மிகவும் சக்திவாய்ந்த போதைப்பொருள் விற்பனையாளர்களில் ஒன்றாகும். இவ்வமைப்பிற்கு அதிநவீன இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் கவச வாகனங்கள் பொருத்தப்பட்ட முழுநேர வீரர்கள் இருப்பதாகவும் விரிவான வாரிசுகளுடன் இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வமைப்பு குறித்துக் குறிப்பிட்டுள்ள மலேசிய செய்தியாளர் இயன் மைல்ஸ் சியோங் எக்ஸ் ஆன் எக்ஸ், “சி.ஜே.என்.ஜி. ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ராணுவ உபகரணங்களையும் அனுபவங்களையும் கொண்டவர்களாகவும் உள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இப்போது துணை ராணுவப் படைகளாக உள்ளனர்” என்கிறார்.
மேலும், இந்த கார்டெலானது மனிதனின் நரமாமிசத்தை உண்பதை அதன் உறுப்பினர் பயிற்சி துவக்கத்தின் ஒரு பகுதியாகக் கொண்ட மோசமான வன்முறைக் குழு என்று ஊடகவியலாளர்களின் உலகளாவிய வலையமைப்பு தெரிவித்துள்ளது. 2022-இல் தி டெய்லி பீஸ்ட் (The Daily Beast) என்ற பத்திரிக்கை ஊடகத்தில், சி.ஜே.என்.ஜி-இன் பயங்கரவாதப் பள்ளிகளில் நடத்தப்பட்ட கொடூரமான நரமாமிச பயிற்சி நிகழ்வின் காணொளி வெளியாகியது. இந்த கார்டெலின் புதிய உறுப்பினரான ஜாலிஸ்கோ “நான் அங்கு இருந்தேன், நிறைய நரமாமிசம் இருந்தது” என டெய்லி பீஸ்டிடம் தெரிவித்தார். இதிலிருந்து இந்த சி.ஜே.என்.ஜி. கார்டெலானது மிகவும் ஆபத்தான ஆயுதமயமாக்கப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மாஃபியா கும்பல் என்பது தெரியவருகிறது.
படிக்க: வெளிநாடுகளில் மர்ம கொலைகள் செய்கிறதா இந்தியா? || அறம் இணைய இதழ்
இந்த சி.ஜே.என்.ஜி. சர்வதேச நிறுவனம் தெற்காசியாவில் குறிப்பாக, இந்தியாவில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது எனப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் டெல்லியை உற்பத்தி தளமாகக்கொண்டு செயல்படும் ஒரு சிண்டிகேட்-டானது, மெக்சிகோவின் சி.ஜே.என்.ஜி. கார்டெல் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சர்வதேச அளவில் துபாயில் இக்கார்டெல் இயங்குகிறது. இந்தியர்கள், மெக்சிகன்கள், கனடியர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும், இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த பிப்ரவரியில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை மற்றொரு மெத்தாம்பேட்டமைன் ஆய்வகத்தைச் சோதனையிட்டு, மூன்று மெக்சிகன் வேதியியலாளர்கள் உட்பட ஒன்பது பேரைக் கைது செய்தது. அந்த சோதனையில் 15 கிலோவுக்கும் அதிகமான மெத்தாம்பேட்டமைன் மற்றும் 9 கிலோ சூடோபெட்ரின் உள்ளிட்ட இரசாயனங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், அக்டோபர் தொடக்கத்தில் ஒரு வாரத்திற்குள் நடத்தப்பட்ட சமீபத்திய இரண்டு சோதனைகளில், டெல்லி போலீசுதுறையின் சிறப்புப் பிரிவு மிகப்பெரிய சர்வதேச போதைப்பொருள் சிண்டிகேட்டைக் கண்டுபிடித்து ரூ.7,600 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கைப்பற்றியது.
டெல்லியின் மகிபால்பூரில் நடந்த சோதனையில், தாய்லாந்தில் இருந்து சுமார் ரூ.5,600 கோடி மதிப்பிலான 560 கிலோ கிராம் கோக்கைன் மற்றும் 40 கிலோ கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாய்லாந்திலிருந்து சாலைப் போக்குவரத்தைப் பயன்படுத்தி உத்தரப்பிரதேசம் வழியாக இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தியதாகப் போலீசு தெரிவித்தது.
முன்னதாக, மேற்கு டெல்லியின் ரமேஷ் நகரில் நடந்த மற்றொரு சோதனையில், சர்வதேசச் சந்தையில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 204 கிலோ கிராம் உயர்தர கோக்கைன் சிற்றுண்டி பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பை மற்றும் பிற மாநிலங்களில் விநியோகிக்கத் தயாராகிவரும் பெரிய கப்பலின் ஒரு பகுதியாக இந்த போதைப்பொருள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். குறியீட்டு வார்த்தைகள் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட தகவல் தொடர்புகளைப் பயன்படுத்திச் செயல்படும் சிண்டிகேட், இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வெளிநாட்டு சப்ளையர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
படிக்க: உ.பி கான்வர் யாத்திரை: நாஜிக்களின் வழிமுறையைப் பின்பற்றும் யோகி
மொத்தத்தில், இந்தாண்டில் மட்டும் இதுபோன்று போதைப்பொருள் தயாரிக்கும் ஆலைகள் கண்டுபிடிக்கப்படுவது இது ஆறாவது சம்பவமாகும். குஜராத்தின் காந்திநகர், அம்ரேலி, ராஜஸ்தானின் ஜோத்பூர், சிரோஹி, மத்தியப்பிரதேசத்தின் போபால் ஆகிய இடங்களில் இயங்கிய ஐந்து தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. போபாலில் மட்டும் 907 கிலோ போதைப்பொருள், 7,000 கிலோ ரசாயனங்கள், இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆக, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. போதைப்பொருள்களை விநியோகித்து நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களைக் குறிப்பாக இளைஞர்களைச் சீரழிவு கலாச்சாரத்தில் மூழ்கடித்து எதையும் சிந்திக்க விடாமல் செய்கின்றனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் சர்வதேச வலைப்பின்னலைக் கொண்டுள்ளன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.
இவை அனைத்தும் ஆளும் அரசுகளுக்கும் அதிகார வர்க்கத்தின் துணையில்லாமல் நடக்க வாய்ப்பில்லை. மேலும் சிறை கண்காணிப்பாளரே ஆலையை நடத்துவது சட்ட ஒழுங்கின் யோக்கியதையை திரைகிழித்துக் காட்டுகிறது. அதிகார வர்க்கத்தின் துணையுடன் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து போதைப்பொருள் உற்பத்தியை மேற்கொள்கின்றனர்.
குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான முந்திரா துறைமுகத்தில் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருவதும் இதனோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது. இவை அனைத்தும் இந்திய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-அதானி கும்பலானது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மாஃபியா கும்பலுடன் தொடர்பில் இருப்பதற்கான சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்கிறது.
அசுரன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram