ஃபெஞ்சல் புயல் | களத்தில் தோழர்கள் | கிருஷ்ணகிரி

தொடர்புக்கு: தோழர். இரஞ்சித் - 8754674757

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 1) விடிய, விடியப் பெய்த கனமழையால், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதனால் இப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

பாம்பாறு அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை 587 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த அணைக்கு, திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் பெய்யும் மழை நீர், ஆண்டியப்பனூர் அணைக்கட்டு மூலமாகவும் தண்ணீர் வருகிறது. இதே போல், பெணுகொண்டாபுரம் ஏரியில் மூலம் வரும் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரும் நீர் ஆதாரமாக உள்ளது.

இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால், பாம்பாறு அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று இரவு விநாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (டிசம்பர் 2) காலை 5 மணியளவில் 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

அணையின் மொத்த கொள்ளளவான 19.6 அடியில் நீர்மட்டம் ஏற்கனவே 18.6 அடியாக இருந்ததால், அணையின் பாதுகாப்பினை கருதி, 5 மதகுகள் வழியாக 15 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரிநீர், அனுமன்தீர்த்தம் அருகே தென்பெண்ணை ஆற்றில் கலந்து சீறிப் பாய்ந்து ஓடுகிறது. பாம்பாறு அணையில் 20.50 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

நேற்று பிற்பகலிலிருந்து இன்று காலை வரை இடைவிடாத மழை பெய்த நிலையில், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி சுற்றுவட்டாரங்களில் பெய்த மழையால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்று (டிச.2) காலை 7 மணி நிலவரப்படி 50.3 செ.மீட்டர் (503 மில்லிமீட்டர்) மழை பெய்துள்ளது.

இதனால், ஊத்தங்கரை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்ததுள்ளது. குறிப்பாக, ஊத்தங்கரை – திருப்பத்தூர் சாலையில் உள்ள பரசனேரி நிரம்பி வெளியேறிய உபரிநீரால், அங்கே ஏரி் கரையோரம் வாடகைக்காக நிறுத்தப்பட்டிருந்த கார், மினிவேன்கள் உள்ளிட்டவை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊத்தங்கரை அண்ணாநகர், காமராஜர் நகர் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை நீர் நிலை உள்ள பகுதிகளுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள தாழ்வான பகுதிகளுக்கும் செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஊத்தங்கரை பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தோழர்களோடு இணைந்து செயல்பட விரும்பும் நண்பர்கள் கீழ்க்கண்ட தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு: தோழர். இரஞ்சித் – 8754674757


தகவல்
மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க