உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத்தில் உள்ள டி.டி.ஐ. சிட்டி ஹவுசிங் சொசைட்டி (TDI City housing society) காந்த் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பில் ஏறக்குறைய 450 இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு வசிக்கும் அசோக் பஜாஜ் என்பவர் இக்ரா சவ்த்ரி என்ற இஸ்லாமிய மருத்துவருக்கு கடந்த செவ்வாயன்று (டிசம்பர் 3) வீட்டை விற்றுள்ளார். இதனை அங்கு வசிக்கும் இந்துக்களும் இந்துமத வெறியர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இஸ்லாமியரை குடியிருப்பிற்குள் அனுமதித்தால் அது ‘மக்கள்தொகை மாற்றத்துக்கு வழிவகுக்கும்’; ‘இந்து குடும்பங்கள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறும் போக்கு உருவாகும்’ என அங்கு இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், “எங்களுக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் அசோக் பஜாஜ் தனது வீட்டை இந்து அல்லாத ஒருவருக்கு விற்றிருக்கிறார். நாங்கள் இங்கு அமைதியாக வாழ்கிறோம். இதற்கு முன்பு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போது இந்த இஸ்லாமிய மருத்துவருக்கு வீட்டை விற்றது ‘சமூக நல்லிணக்கத்தை மீறியது’” என்று குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
இஸ்லாமியர்கள் தங்கியிருக்கும் வீடுகளை புல்டோசர்களை கொண்டு இடித்து அவர்களை விரட்டியடிப்பதும் கலவரங்களை தூண்டிவிட்டு இஸ்லாமியர்களை கொன்றுகுவிப்பதும் இந்துத்துவ கும்பலின் செயல்பாடுகளாக உள்ள நிலையில், இங்கு ஒரே ஒரு முஸ்லிம் மருத்துவருக்கு வீடு வழங்கியது ‘சமூக நல்லிணக்கத்தை மீறியது’ என்று குடியிருப்பாளர்கள் கூறுவதென்பது அம்மக்களிடம் ஊட்டப்பட்டுள்ள இஸ்லாமிய வெறுப்புணர்வை அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
படிக்க: குஜராத்தில் அரசு குடியிருப்பில் முஸ்லிம்களுக்கு இடம் இல்லை – சவால் விடும் பாசிசக் கும்பல்!
அசோக் பஜாஜ் விற்பனையின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் விரும்புவதாகவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் போலீசிடம் நாங்கள் ஏற்கெனவே புகார் அளித்துள்ளோம் என்றும் ரஸ்தோகி என்ற அங்குள்ள இந்து குடியிருப்பாளர் கூறினார்.
நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளதாகவும் அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்க்கப் பணியாற்றி வருவதாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் அனுஜ் குமார் சிங் கூறியுள்ளார். மேலும், மத நல்லிணக்கம் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக நிர்வாகமும் போலீசுதுறையும் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். போலீசுத்துறையும் மாஜிஸ்திரேட்டும் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினாலும் இந்து குடியிருப்பு வாசிகள்தான் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களுக்கு சாதகமாகத்தான் பேச்சுவார்த்தை முடியும்.
மேலும் மற்றொரு குடியிருப்பாளரான பல்லவி, “இது 15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் வீடாக உள்ளது. இந்த வீடு மீண்டும் ஒரு இந்துவின் பெயரில் பதிவு செய்யப்படுவது முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம். இல்லையெனில், இந்துக்கள் வெளியேறத் தொடங்கலாம். தங்களுக்கு எந்த சமூகத்துடனும் பகை இல்லை. ஆனால், இந்த கட்டமைப்பு மாறுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறுகிறார்.
குடியிருப்பாளர் பல்லவியை போலவே இந்துத்துவ கும்பலும் இந்த சமூக கட்டமைப்பு மாறுவதை விரும்புவதில்லை. இயல்பிலேயே இந்த சமூக கட்டமைப்பு சிறுபான்மையினரை ஒடுக்கும் கட்டமைப்பாக இருப்பதால் இதனை கொண்டு இஸ்லாமியர்களை ஒடுக்கி தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளவே இந்துத்துவ கும்பல் விரும்புகிறது. இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் கையில் சிக்கியுள்ள இந்த கட்டமைப்பை வீழ்த்த வேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறது.
ஏற்கெனவே குஜராத்தில் வதோத்ரா முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட ஹர்ணி என்ற இடத்தில் உள்ள மோட்நாத் குடியிருப்பிலும், முஸ்லிம் பெண் ஒருவரை 6 ஆண்டுகள் குடியேற விடாமல் தடுத்து வருகிறது இந்து மதவெறி கும்பல். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்பாடுகள் தினந்தோறும் நடைபெறும் காட்சியாக மாறிவருகிறது.
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலானது உழைக்கும் மக்களுக்கே உரிய மனிதநேயத்தையும் அழித்து இந்துமதவெறியை ஊட்டி மனிதர்களை மிருகமாக்கி வருகிறது. பாசிசக் கும்பல் மக்கள் மத்தியில் வேரூன்றுவது தீவிரமடையும்போது மனிதத்தன்மையே அற்ற இன்னும் கோரமான காட்சிகளை நாம் காண நேரிடும். எனவே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வை தடை செய் என முழங்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
கபிலன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram