காலம் உருவாக்கிய தலைவர் இமானுவேல் சேகரன்

தற்பொழுது தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியில் அதிகமாய் பரவிக் கொண்டிருக்கும் ஆண்ட பரம்பரை மனநிலை என்ற கொடிய நோயை அன்றே எதிர்த்து “ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வுரிமை கழகம்” ஒன்றை உருவாக்கி அதன்மூலம் சாதி மறுப்பு திருமணம், விதவை மறுமணம் போன்ற சனாதனத்தின் கொடூர விளைவுகளை போக்கத் துணிந்தது நின்றார், இமானுவேல் சேகரன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”.

இது தமிழில் பொதுமொழி மட்டுமல்ல, இதுதான் தமிழில் ஆதிமொழியும் கூட. அந்த ஆதிமொழி உணர்த்தும் செய்தி என்னவெனில், மனிதராய் இருந்தாலும் சரி, இல்லை ஏனைய உயிரினங்களாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் பிறப்பின் அடிப்படையில் சமம்.

இது தமிழ் மரபில் உதிர்த்து எழுந்த அற்புதமான சிந்தனை ஆகும். இப்பொதுமொழி உருவாக்கிய மரபினை சீர்குலைக்க அப்போது பல பேதங்கள் தமிழின் மீது படையெடுத்து கொண்டே இருந்தன. அதில் முதன்மையானது வர்ணம். அதுதான் இந்த சாதியையும் எண்ணிலடங்கா வர்க்க பேதத்தையும் தமிழ் மண்ணில் உருவாக்கியது.

இவை அனைத்தும் இந்து மதத்தின் கோரப் பிடியிலிருந்துதான் உருவானது என்றாலும், இதனை நிலை நிறுத்துவதற்கு சில திட்டங்கள் தேவைப்பட்டது. அதை இந்த மண்ணில் இயல்பாய் தந்ததுதான் “மனு”. இங்கிருந்த பார்ப்பன அரசுகளின் உதவியுடன் மனுவின் சட்டங்கள் இம்மண்ணில் நிறுவி மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்தது.

இருப்பினும் மனுவினால் அதனை இங்கு முழுமையாக செய்ய முடியவில்லை. காரணம் அவை வெறும் சட்ட திட்டங்களே. இச்சட்ட திட்டங்களை சரியாக அமல்படுத்த தவறும் பட்சத்தில் அவை பொய்த்துப் போகவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்தான், புராண இதிகாசங்கள் அதனை மக்களின் மனதில் ஆழமாய் கொண்டுபோய் சேர்த்தன. அவைதான் இங்கிருந்த பகுத்தறிவு சிந்தனையை சீர்குலைக்க ஆரம்பித்தன.

அச்சீரழிவுகளை தமிழ் மண்ணில் இருந்து அகற்ற, மனுவின் கொடிய சட்ட திட்டங்களை இந்நிலப்பரப்பில் இருந்து அழித்தொழிக்க, தமிழ் தன் உண்மையான பண்பாட்டை மீட்டெடுக்க, அவ்வபோது பல தலைவர்களை உருவாக்கிக் கொண்டே இருந்தது.

அதன்படி வர்ண பேதத்தை எதிர்த்த நீண்ட தமிழ் மரபின் தொடர்ச்சிதான் இமானுவேல் சேகரன்.

காலம் உருவாக்கிய தலைவர்

இமானுவேல் சேகரனை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவரின் காலச் சூழலை புரிந்து கொண்டால் மட்டுமே அது சாத்தியம்.

எங்கு பார்த்தாலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், ஈவு இறக்கம் இல்லாத மதச் சடங்குகள் என மனிதனின் உயிரைக் குடிக்கும் பழக்கவழக்கங்கள் எல்லாம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் புரையோடி போயிருந்த காலம் அது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் அப்படியிருக்க ராமநாதபுரம் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

ஒடுக்கப்பட்ட மக்கள் முழங்காலுக்கு கீழ் உடுப்பும் பாதங்களில் செருப்பும் அணியக்கூடாது என்றும், அவர்களின் வாரிசுகள் அனைவரும் மிட்டா மிராசுதாரர்களின் ஆடு மாடுகளை மேய்க்க வைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கூடம் பக்கமே போகக்கூடாது என்றும் பண்ணைகளில் அடிமையாக மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என ஆதிக்கச் சாதியினர் மிகவும் கீழ்த்தரமான கட்டளைகளை இட்டனர்.

அதனை எல்லாம் மறுத்து அம்மாவட்டத்தில் 1904-இல் ஆலப்புரத்திலும் பின் 1919-இல் கல்பலிலும் நடைபெற்ற போராட்டம் இறுதியாய் 1930-இல் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது. ஜான் பொன்னையா என்ற ஒரு நபர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். போராட்டத்தை நசுக்க ஆதிக்கச் சாதியினர் 31-க்கும் மேற்பட்ட கிராமங்களை கைக்குள் போட்டுக்கொண்டு 148 பேரின் தலைமையில் போராடியவர்களை தாக்கி அடித்து நொறுக்கியது, 19 வீடுகள் சூறையாடப்பட்டன, பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

இங்கிருந்துதான் இமானுவேலின் போராட்ட குணமும் அவருக்கான தேவையும் இயல்பாய் கிடைத்தது. ஏனெனில் அதுதான் சாத்தியமும் கூட… 

அன்றும் நடந்த வேங்கைவயல் சம்பவம்: 

ஓராண்டுக்கு முன்பு நடந்த வேங்கைவயல் சம்பவம் பற்றி அனைவரும் அறிந்ததே, அதில் அங்கிருந்த ஆதிக்கச் சாதியினர் பட்டியல் சாதி மக்கள் பருகும் குடிநீர் தொட்டியில் மலத்தை அள்ளிப்போட்டு மனிதத்தன்மை இல்லாத அச்செயலை செய்தனர்.

இது ஏதோ தற்போது நடைபெற்ற நிகழ்வு போல் சிலர் சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர்.. ஆனால் அது உண்மை அல்ல..

அன்றைய ராமநாதபுரத்தில் உள்ள கோண்டுலாவியில் 1950-களுக்கு பின் பட்டியல் சாதியினர் தண்ணீர் எடுப்பதற்கான உரிமையைப் பெற்றனர். இதனையடுத்து அங்கிருந்த ஆதிக்கச் சாதியினர் தங்களுக்கு என்று ஒரு புது கிணற்றை வெட்டிவிட்டு, ஏற்கெனவே இருந்த பொதுக்குளத்தில் மனித கழிவுகளுடன் சேர்த்து, இறந்து போன விலங்கின் கழிவுகளையும் அதற்குள் அள்ளி வீசினர். அதற்கான காரணம் ‘கீழ் சாதி நாய்கள் நம்முடன் சேர்ந்து தண்ணீர் குடிக்கக் கூடாது’ என்பதுதான்.

அங்கு மட்டுமின்றி முதுகுளத்தூர் ஒட்டியுள்ள சித்தாரங்குடியிலும் அதுதான் அன்றைய நிலைமையாய் இருந்தது. அங்கிருந்த தேவேந்திர குல வேளாளர் மக்கள் பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பது தங்களுக்கு அவமானம் என நினைத்து அதில் மிருகக் கழிவுகளை அள்ளி வீசியது இந்த சனாதனம்.

அம்பேத்கருடனான சந்திப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் உரையை கேட்டும், அரசியல் நூல்களைப் படித்தும் அரசியல் அறிவை வளர்த்துக்கொண்டார், இமானுவேல் சேகரன். அந்நிலையில்தான், 1936-இல் தேவேந்திரகுல வேளாளளின் மாநாடு அவர்களின் எழுச்சியை காண்பிப்பதற்காக நடைபெற திட்டமிடப்பட்டது.

அப்போது அம்பேத்கரை அழைத்து அதில் பங்கேற்க வைப்பதற்கான திட்டமும் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் அது அன்றைக்கு முடியாமல் போனதால் அதன்பிறகு திரு.தேக்கம்பட்டி பாலசுந்தரராஜ் அவர்களின் மூலம் 1946 டிசம்பர் 29-இல் அம்பேத்கர் தமிழ்நாடு அழைத்து வரப்பட்டார். அதன் பின் மதுரையில் உள்ள விக்டோரியா அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் அவரும் சிறப்புரையாற்ற அங்கு தென்தமிழ்நாடு எங்கும் உள்ள அருந்ததியர், ஆதிதிராவிடர்கள், தேவேந்திரகுல மக்கள் மிகவும் அதிகமாக பங்கேற்றனர்.


படிக்க: சாதிவெறிக் கொட்டமும் தியாகி இமானுவேல் சேகரனின் அவசியமும்


அம்மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு இமானுவேல் சேகரை அம்பேத்கரிடம் அறிமுகப்படுத்தி வைக்க அதற்கு அவர் ஏன் இப்படி மீசையை குறுகலாக வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு பாலசுந்தரராசு அவர்கள், “எங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் எளிய மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மீசையை பெரிதாக வைத்திருந்தனர். அவர்களைத் தேடிவரும் ஏழை எளிய மக்களுக்கு அது ஒரு மிராட்சியை ஏற்படுத்தி விடுகிறது” என்றார். அதன்பின்பு இமானுவேல் “இது பல இடங்களில் எங்களுக்கிடப்பட்ட கட்டளையாகவும் இருக்கிறது.. ஆகையால் தான் இந்த குறுமிசை” என்றார்.

குலக்கல்வி முறை எதிர்ப்பு:

இந்தியாவில் இருந்த உயிர் மிகுந்த இச்சடங்குகள் எல்லாம் எங்கிருந்து முளைக்கிறது என்று அதனை தேடிப் பார்த்தால் அது இந்து மதத்தின் அடிவாரத்தில் இருந்துதான் என்பது எல்லோருக்கும் புலனாகும். ஏனெனில், அதுதான் இக்கொடூர சடங்குகளையும் சாதி அமைப்பையும் இன்றும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அன்றைய காலத்தில் அறியாமையில் ஒரு பக்கம் மக்கள் திளைத்துக் கொண்டிருந்தனர் என்றால் மறுபுறம் ஒரு சாரார் மட்டும் படித்து முன்னேறிக் கொண்டிருந்தனர். இவ்விழிவை போக்க கல்வியை அனைவருக்கும் சமமாய் மாற்ற பலரும் போராடினர் என்றாலும் அவர்களுக்கெல்லாம் இடையூறாய் வந்து நின்றது குலக்கல்வி முறை. தாயும் தந்தையும் என்ன தொழில் செய்கிறார்களோ அதனைத்தான் பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்பதுதான் இக்குலக்கல்வி முறையின் கருத்துரு.

1954-இல் ராஜாஜி ஆட்சியில் மாணவர்கள் தங்களின் கல்வி நேரத்தில் ஒரு பகுதியை குடும்பம் செய்துவந்த தொழிலை கற்றுக்கொள்ள பயன்படுத்த வேண்டும் என்று குலக்கல்வி முறையை நிலைநாட்டுவதற்கான சட்டத்தை இயற்றினார். அதனை தீவிரமாக எதிர்த்த பெரியார், 1954 ஜனவரி 24 அன்று குலக்கல்வி முறையை நீக்குவதற்கு மூன்று மாத அவகாசத்தை விதித்து அதனை எதிர்த்து தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.

அதன் பிற்பாடு தமிழ்நாட்டில் பல இடங்களில் லக்கல்வி முறையை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. அவ்வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எழுத்தறிவில்லாத அச்சூழலில் தன்னுடைய மக்களுக்கு கல்வி அறிவு கிடைக்க, தம் மக்கள் அதுவரை செய்த அடிமைத்தனம் மிக்க தொழில்களை மண்மூடி புதைத்திட, குலக்கல்வி முறையை எதிர்த்து ராமநாதபுரத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டார் இமானுவேல் சேகரன்.

மேலும் தம் மக்களிடம் குலத் தொழில்களை செய்ய வேண்டாம் என்றும் வேறு கௌரவம் மிக்க தொழில்களை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

விதவை மறுமணம் முறை ஆதரிப்பு:

உலகம் முழுவதும் இருக்கும் எல்லா இடங்களிலும் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருந்தனர் என்றாலும், இந்தியாவில் அது இன்னும் உச்சநிலையில் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இங்கு பெண் என்பவள் ஆணுக்கு கட்டுப்பட்டு நடக்கவும், அவர்கள் சொல்பேச்சை கேட்டு நடக்கும் ஒரு பிண்டமாகவுமே பார்க்கப்பட்டாள். இன்னும் சொல்லப்போனால் கணவன் இறந்தவுடன் மனைவியும் இறந்துவிட வேண்டும் என்பதுதான் இங்கிருக்கும் மனிதர்களின் இயல்பாய் இருந்தது.

இதனை எதிர்த்து சில சமூக சீர்திருத்தவாதிகள் ஆங்கிலேயரின் துணைகொண்டு “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் கொடூர வழக்கத்தை தடை செய்தனர். அதன் பிறகு சில ஆங்கிலேயர்கள் பெண்களுக்கு வழிகாட்ட இக்கொடிய வழக்கு முறைகளில் இருந்து வெளிவர பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தல், கல்வி உரிமையை கொடுத்தல் போன்றவற்றை சட்டமாக இயற்றினர்.

இது எல்லாம் நகர்ப்புற மக்களுக்கு ஓரளவுக்கு சென்றடைந்தது என்றாலும், தென் மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக ஆதிக்கச் சாதியினர் மத்தியில் அச்சட்டங்களால் ஒரு துளி கூட பயன் கூட இல்லாமல் இருந்தது. இதனை நன்கு அறிந்த இமானுவேல் சேகரன் மறுமணத்தில் தவறு இல்லை என்றும் அது மிகச் சரியானதுதான் என்றும் மறுமணத்திற்கான உரிமையை தன் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்.

ஆண்ட பரம்பரையா இல்லை உழைக்கும் பரம்பரையா?

சமீபத்தில், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவைச் சார்ந்த அழகேந்திரன் என்ற இளைஞரை மற்றொரு தாழ்த்தப்பட்ட பிரிவான தேவேந்திர குல வேளாளர் பிரிவினர் ஆணவப் படுகொலை செய்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்தேறியது. இது “பார்ப்பனியம் பட்டியல் சாதியினர் உள்ளும் புகுந்துவிட்டது” என்ற அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகளை நிரூபிக்கும் விதமாக அமைந்தது. இது சமீபத்தில் நடந்தேறிய ஒரு நிகழ்வுதான் என்றாலும் இந்த மனநிலையை இமானுவேல் சேகரன் அன்றே எதிர்த்திருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் இமானுவேலின் அம்மா பிறந்த ஊரான இதாம்பாடல் கிராமத்தில் ஒரு வழக்கம் இருந்தது. ஆதிக்கச் சாதியினர் தண்ணீர் பிடித்த பின்புதான் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்பதுதான் அது. இதில் என்ன துயரம் என்றால் அருந்ததியர்களை விட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த தேவேந்திர குல வேளாளர் மக்கள், ஆதிக்கச் சாதியினருக்கு பிறகு தாங்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். அதன்பிறகே அருந்ததியர் மக்கள் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்ற நிலை அங்கே இருந்துவந்தது. இதனை அறிந்த இமானுவேல் சேகரன் தனது சொந்த சாதியினரே இப்படி செய்கிறார்களே என்று அவர்களை கடுமையாக சாடினார்.

அது மட்டுமல்லாமல், சாதி மறுப்பு திருமணத்தை அவரே நடத்துவது; அத்திருமணத்தை செய்தவர்களை ஊரறிய பாராட்டி வரவேற்பது போன்ற சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவை அனைத்தும் சனாதனத்தின் பிடியில் சிக்கிகொண்டிருந்த ஆதிக்கச் சாதி மக்களை வெறுப்படையச் செய்தது.


படிக்க: தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!


அதிலும் குறிப்பாக வினோபா பாவேவின் “பூமிதான இயக்க”த்தில் பணியாற்றிய கிருஷ்ணம்மாள்-ஜெகநாதன் திருமணத்தினை நடத்த இமானுவேல் சேகரன் துணைபுரிந்தது மட்டுமின்றி, அதனை மேளதாளங்களுடனும் வரவேற்றது, அங்கிருந்த ஆதிக்கச் சாதியினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இமானுவேல் சேகரன் சாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்தது மட்டுமின்றி சனாதனம் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதையும் ஒடுங்கிக்கிடந்த அம்மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்.

இன்றைய தேவை

தற்பொழுது தேவேந்திர குல வேளாளர் மக்கள் மத்தியில் அதிகமாய் பரவிக் கொண்டிருக்கும் ஆண்ட பரம்பரை மனநிலை என்ற கொடிய நோயை அன்றே எதிர்த்துதான் “ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வுரிமை கழகம்” ஒன்றை உருவாக்கி அதன்மூலம் சாதி மறுப்பு திருமணம், விதவை மறுமணம் போன்ற சனாதனத்தின் கொடூர விளைவுகளை போக்கத் துணிந்து நின்றார்.

இது தெரிந்தும் இன்றைய பல தேவேந்திர குல வேளாளர் தலைவர்கள் சனதானத்திற்கு எடுபிடி வேலை பார்க்கும் விதமாக, அம்மக்களை இடஒதுக்கீட்டிற்கு எதிராக சிந்திக்க வைப்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுதிரளவிடாமல் தடுப்பது, பட்டியல் வெளியேற்றம் போன்ற பல சமூக கேடுகள் நிறைந்த வேலைகளை செய்கின்றனர். அவர்களுக்கும் சரி அவர்கள் சார்ந்த மக்களுக்கும் சரி இவை என்றுமே ஆபத்தானதுதான்.

அதிலும் குறிப்பாக ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் ஒருபுறம் சனாதனத்தை எதிர்த்த இமானுவேலை கையில் எடுத்துக்கொண்டு மறுபுறம் சங்கிகளின் வாலாட்டியாக செயல்படுவது அவரின் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.

இவர்கள் போன்ற கயவர்களையும், சமத்துவத்திற்கான கொள்கை உணர்வு இல்லாதவர்களையும், தமிழ் மண்ணிலிருந்து அகற்ற இன்றும் நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.

அதுவும் சனாதனத்தின் கைக்கூலிகளாக அல்லாமல்..

இமானுவேலின் சாதி ஒழிப்பு – எதிர்ப்பு போர்வாளாக!

வாழ்க மனிதம்.


இரா.சே கருணாகரன்,
சமூக செயற்பாட்டாளர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க