12.12.2024

ஹீமோ டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பை
அரசு -தனியார் பங்களிப்பு என மாற்றி பொது சுகாதாரத் திட்டத்தை
ஒழித்துக்கட்டும் பாசிச மோடி அரசு!

கண்டன அறிக்கை

தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கி அரசு மருத்துவமனைகளையும், மருத்துவக் கட்டமைப்பையும் படிப்படியாக கார்ப்பரேட் மயமாக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் பாசிச மோடி அரசு, தற்போது இன்னொரு புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

ஹீமோ டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பை இனிமேல் அரசு – தனியார் பங்களிப்புடன் செய்யலாம் என அறிவித்துள்ளது மோடி அரசு. இதன்மூலம் காப்பீட்டுத் திட்டங்கள் வழியாகவும் பணம் செலுத்தியும் இரத்தச் சுத்திகரிப்பை மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசின் தேசிய சுகாதார இயக்கம் சார்பாக, தமிழ்நாடு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த கூட்டத்தில் ஒன்றிய அரசின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதாக முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் பொது சுகாதாரக் கட்டமைப்பை கார்ப்பரேட் மயமாக்குவதில் மோடி அரசுடன் திமுக அரசும் கைகோர்த்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தேசிய சுகாதார இயக்கம் சார்பாக முன்மொழியப்படும் இத்தகைய மாற்றங்கள் எல்லாமே உலக வங்கியின் உத்தரவுகளே. பொது சுகாதாரக் கட்டமைப்பைச் சிதைத்து, மருத்துவத்தை முற்று முழுதாக வணிகமயமாக்குவதுதான் இதன் நோக்கம். இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் இரத்தச் சுத்திகரிப்பைச் செய்ய முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுவர், இது அவர்களின் உயிருக்கே ஆபத்தானதாக மாறும்.

2015-இல் அதாவது பத்தாண்டுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படியே பின்வரும் விவரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்றுச் சிகிச்சை தேவைப்படும் பெரும்பான்மையான மக்களுக்கு பெரும் நிதிச்சுமையை உருவாக்குகிறது. மேலும் 112 நாடுகளில், பலரால் சிகிச்சை பெறவே முடியாது. இதன் விளைவாக ஆண்டுதோறும் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், சிறுநீரகச் செயலிழப்பால் உயிரிழக்கின்றனர்.

மேலும் அரசு மருத்துவமனைகளில் ஒருமுறை ஹீமோ டயாலிசிஸ் செய்வதற்கு 150 ரூபாய் செலவாகும் என்றால், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இரண்டாயிரத்தில் இருந்து 15,000 ரூபாய் வரை கூட சில டயாலிசிஸ் வகைகளுக்குச் செலவாகும் என்கிறார்கள். மோடி அரசின் புதிய அறிவிப்பை மேற்கண்ட நிலைமையுடன் இணைத்துப் பரிசீலிக்கும் போது, இந்த அறிவிப்பு கார்ப்பரேட் மருத்துவமனைகளை நோக்கி மக்களைத் தள்ளும் நோக்கத்துடன் இருப்பது புரிகிறது.

அரசு மருத்துவமனைகளில் இரத்தச் சுத்திகரிப்பு
நிலையங்களை ஓரங்கட்டும் தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகளில் உள்ள இரத்தச் சுத்திகரிப்பு பிரிவில் தற்போது 160 பேர் மட்டுமே தற்காலிக – ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். டயாலிசிஸ் தொழில்நுட்பப் பணியிடங்களில் 624 பேரை நிரந்தரமாக நியமிக்க சுகாதாரத்துறைக்கு 2023-இல் மருத்துவக் கல்வி இயக்குனரகம் பரிந்துரைத்தது. ஆனால் அரசோ இதுவரை நியமிக்கவில்லை. இரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களில் 20 சதவீதமான கருவிகள் பழுதாகி உள்ளன. அவற்றைச் சீரமைக்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் அதெல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத்தகைய கருவிகள் மற்றும் நிரந்தரப் பணியாளர் பற்றாக்குறை போன்றவற்றால் ஏழை மக்கள்தான் தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.

தகுதியான பணியாளர்கள் இன்றி தற்காலிகப் பணியாளர்களும், பயிற்சி மாணவர்களும் டயாலிசிஸ் சிக்கிச்சையில் ஈடுபடுத்தப்படுவதன் காரணமாக பல்வேறு குறைபாடுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. உதாரணமாக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கடந்த 2015-ஆம் ஆண்டில் தவறான டயாலிசிஸ் சிகிச்சையால் 16 நோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டது. புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 பேர் இறந்தனர். இவையெல்லாம் தொடர்ந்து சீரழிக்கப்பட்டு வரும் கட்டமைப்புக்கான உதாரணங்கள்.

நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கக் கோரிய வழக்கில், போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்திய போதும், தமிழ்நாடு அரசோ வழக்கை இழுத்தடித்துக் கொண்டும், தற்காலிக ஊழியர்கள் – பயிற்சி மாணவர்கள் இருப்பதால் 24 மணி நேரமும் இரத்தச் சுத்திகரிப்பு பிரிவு செயல்படுவதாகவும் சொத்தையான வாதத்தை முன்வைத்துக் கொண்டும் இருக்கிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசின் அறிக்கையில், “மருத்துவ ஆராய்ச்சி இயக்குனரகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 768 இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் 690 இயந்திரங்கள் இயங்கும் நிலையில் உள்ளன. ஒரு மாதத்திற்கு சராசரியாக 5,807 நோயாளிகள் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர். அதேபோல சுகாதாரத் துறையின் கீழ் உள்ள 91 மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் 449 டையாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் 440 இயந்திரங்கள் செயல்படுகின்றன. ஒரு மாதத்திற்கு சராசரியாக 2,260 நபர்கள் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர்” என்று புள்ளி விவரங்களைக் கொடுத்திருக்கிறது அரசு. இதுவொரு புள்ளிவிவர மோசடி என்பதே உண்மை. மொத்தமுள்ள 1,130 இயந்திரங்களில் 8,067 பேர் சராசரியாக மாதந்தோறும் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்; அதாவது ஒரு இயந்திரத்தில் சராசரியாக 7 பேர்.

2022-ஆம் ஆண்டில் வெளியான ஒன்றிய அரசின் அறிவிப்பு பின்வருமாறு கூறுகிறது. “ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2.2 லட்சம் புதிய நோயாளிகள் இறுதி நிலை சிறுநீரக நோயால் (ESRD) இந்தியாவில் சேர்க்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் 3.4 கோடி டயாலிசிஸ் தேவைப்படுகின்றது. டயாலிசிஸ் சிகிச்சையின் அதிக செலவு, நடைமுறையில் அத்தகைய நோயாளிகளைக் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் பொருளாதாரப் பேரழிவுக்கு வழிவகுக்கிறது”. பொய் சொல்வதையும், பிரச்சினைகளைக் குறைத்துக் காட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசை விடவும் மிகக் குறைவான எண்ணிக்கையைக் கூறி, தமிழ்நாட்டில் எல்லாமே சுபமாக நடந்து கொண்டிருப்பதாக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறது திமுக அரசு.

நம் குற்றச்சாட்டு கடுமையாக இருப்பதாகத் தோன்றினால், இன்னொரு உதாரணத்தைக் கூற முடியும். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மட்டும் மாதந்தோறும் 2,000 நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சை பெறுவதாக “தி இந்து” ஆங்கில நாளேடு 10 மார்ச் – 2020 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியானால், மீதமுள்ள 138 சிகிச்சை மையங்களிலும் சேர்த்தே 6,000 பேர்தான் சிகிச்சைக்கு வருகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் ஒருசில முறை மட்டுமே இலவச டயாலிசிஸ் செய்ய முடியும் என அரசு மருத்துவமனைகள் விரட்டி விட்டால்தான் இத்தகைய புள்ளி விவரத்தை உருவாக்க முடியும். ஒருவகையில் இந்த அணுகுமுறை உண்மையும் கூட. அதாவது, தினசரி புதிய நோயாளிகள் வருகை அதிகரிக்கும் போது, பழைய நோயாளிகளுக்கு இலவசச் சிகிச்சை அளிப்பது சாத்தியமில்லை என்ற நிலையில்தான் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இதனால், காப்பீட்டை நம்பியும், சொந்தச் செலவிலும் தனியார் மருத்துவமனைகளுக்குப் போக வேண்டிய கட்டாயம் நோயாளிகளுக்கு உருவாக்கப்படுகிறது.

மேலும், இன்னொரு புள்ளிவிவரத்தின் படி, “இந்திய டயாலிசிஸ் சந்தை ஆண்டுக்கு 31% என்ற விகிதத்தில் வளரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகின் பிற நாடுகளில் 8% ஆக உள்ளது” என்றும் கூறப்படுகிறது. மேற்சொன்ன எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தால், மோடி அரசும் திமுக அரசும் எத்தகையதொரு பேரபாயமிக்க திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரத் துடிக்கின்றனர் என்பது புரியும்.

ஏற்கெனவே, மூன்றில் இருபங்கு சிறுநீரக நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல், ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கில் மாண்டு வருகின்றனர். சுற்றுச்சூழல் சீர்கேடு, குடிநீரால் உருவாகும் பாதிப்புகளே சிறுநீரக நோய்களுக்கு மூலகாரணமாக இருக்கின்றன. அவற்றைக் கட்டுப்படுத்த, கார்ப்பரேட்டுகளை ஒழுங்குபடுத்த மறுக்கும் அரசுகள்தான், இன்னொருபுறத்தில், அந்த நோய்களுக்கான சிகிச்சையையும் கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றன.

காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவமனைகளும் முழுக்க கார்ப்பரேட்மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், நிதி நெருக்கடி காரணமாக நாங்கள் காப்பீட்டிற்கு நிதி வழங்க மாட்டோம் என அரசு கைவிரித்தால் என்ன நடக்கும்? அதுவொரு பேரழிவை உருவாக்கி விடுமல்லவா? மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களையும், மானியங்களையும் படிப்படியாக ஒழித்துக் கட்டி வரும் அரசு இதையெல்லாம் செய்யாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

காப்பீட்டு நிறுவனங்களுக்குக் கொட்டிக் கொடுக்கப்படும் பல ஆயிரம் கோடிகளைக் கொண்டு, தரமான அரசு மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கி விட முடியும். பல்லாயிரம் பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பையும் பல கோடி மக்களுக்கு தரமான சிக்கிச்சையும் கொடுக்க முடியும். ஆனாலும், அதைச் செய்ய மாட்டோம் என ஒன்றிய – மாநில அரசுகள் பிடிவாதமாக இருப்பதன் காரணத்தை, மருத்துவக் கட்டமைப்பை கார்ப்பரேட்மயமாக்கும் மக்கள் விரோதப் போக்கை நாம் அம்பலப்படுத்தியே தீர வேண்டும்.

இந்த பேரபாயத்தை உணர்ந்து தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மருத்துவர் சங்கங்கள், புரட்சிகர – ஜனநாயக சக்திகளுடன் ஒன்றிணைந்து உழைக்கும் மக்கள் அனைவரும் களத்திற்கு வர வேண்டும். பொது மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கும், மருத்துவத்தில் கார்ப்பரேட் மற்றும் வணிகமயம் ஒழிக்கப்படுவதற்கும், உலக வங்கி போன்ற உலகளாவிய தலையீடுகள் தடுத்து நிறுத்தப்படுவதற்கும் நாம் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தோழர். ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க