டிசம்பர் 25, 2024 அன்று இந்திய கம்யூனிச இயக்கம் 100ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆயிரக்கணக்கான தோழர்களின் தியாகங்களும் உழைக்கும் மக்களின் குருதியும் சமத்துவத்திற்கான வேட்கையும் நிறைந்ததே இந்திய கம்யூனிச இயக்க வரலாறு.
இந்த நூறாண்டுகளில் இந்தியாவில் புரட்சியை சாதிப்பதற்கு பல்வேறு தருணங்கள் அமைந்தாலும் இந்திய கம்யூனிச இயக்கத்தில் பீடித்துள்ள திரிபுவாதம், சந்தர்ப்பதாவதம், இடது, வலது திசைவிலகல்கள் காரணமாக அவை கைநழுவி போயின. இடதுசாரி அமைப்புகள் சிதறி போயின.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் இந்தியாவில் அரங்கேறிவரும் இன்றைய சூழலில், பாசிச சக்திகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மார்க்சிய சித்தாந்தத்தின் கீழ் மாற்று கட்டமைப்பை முன்வைத்து போராட வேண்டியுள்ளது.
இத்தருணத்தில், இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வதற்கும் அதுகுறித்த விவாதத்தை துவங்குவதற்கும் இந்திய கம்யூனிச இயக்க வரலாறு தொடர்பான கட்டுரைகளை மீள்பதிவு செய்கிறோம்.
இக்கட்டுரை அக்டோபர் 20, 2021 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது.
***
நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி… நிகழ்காலத்தைத் தாண்டி எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் இந்திய கம்யூனிச இயக்கம்
பாகம் – 2
முந்தையை பாகம் : நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
கேள்வி : ஆக, உங்கள் தந்தையும் தாயும் ஜெய்பெல்குரியில் முதலில் சந்தித்துக்கொண்டனர்?
பதில் : ஆமாம். 1940களில் சந்தித்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் தோழர்கள். அவர்கள் இருவரும் கட்சியின் துடிப்பான ஊழியர்கள். அவர்கள் சேர்ந்தே வேலை செய்தார்கள். ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டனர். வாழ்க்கைத் துணைவர்களாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். அவர்களின் திருமணம் 1952-ல் நடைபெற்றது. அதன்பின் அவர்கள் இருவரும் சிலிகுரி வந்துவிட்டனர். அதுதான் என் தந்தையின் ஊர். அவர்கள் இருவரும் டார்ஜிலிங் சிபிஐ கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர்.
1964-ல் கட்சி பிளவுபட்டபோது இருவரும் சிபிஐ எம் கட்சிக்கு வந்தனர். எனது தந்தை மேற்கொண்ட புரட்சிகரமான நிலைப்பாடுகளை சிபிஐ எம் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். அவரும், சிபிஐ எம்மில் தொடர தனக்கு விருப்பமில்லை என்ற நிலையெடுத்துவிட்டார். அவரும் அவரைப் போன்ற தலைவர்களும் சிபிஐ எம்மை விட்டு வெளியே வந்தனர். தாங்கள் செய்துவந்த புரட்சிகர வேலைகளைத் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் செய்து வந்தனர். நக்சல்பாரிக்குப் பின்பு 1969-ல் அவர்கள் சிபிஐ எம்எல் கட்சியை நிறுவினர்.
கேள்வி: உங்கள் தாயின் நிலை என்ன? அவர் இந்த அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொண்டாரா?
பதில் : சிபிஐ எம்மில் தொடர விரும்பவில்லை என்று அம்மா ஒருபோதும் சொன்னதில்லை. அதேசமயம் அவர் கட்சி உறுப்பினர் தகுதியைப் புதுப்பித்துக்கொள்ளவும் இல்லை. அவர் கட்சியில் துடிப்பாக வேலை செய்வதை நிறுத்திக்கொண்டார். அதற்கு மாறாக, அப்பாவிற்கு அவர் கட்சி வேலைகளில் துணையாக நின்றார். கணவருக்கான ஒரு பெண் தனது அரசியல் பாத்திரத்தை விட்டுத்தருவது சரியானதுதானா என்ற கேள்வி எழும்புகிறது. ஆனால், என்ன செய்வது… அதுதான் நிகழ்ந்திருந்தது.
1960-களின் நடுப்பகுதியில் அப்பாவின் உடல் நலம் சீர்கெட ஆரம்பித்தது. 1965-ல் அவருக்கு இதய தாக்குதல் ஏற்பட்டது. அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. அவருக்கு ஆஸ்துமாவும் இருந்தது. எனவே, அம்மாவின் கைநிறைய வேலை வந்துவிட்டது. அப்பாவின் அரசியல் வேலை, அவரின் உடல் நலப் பிரச்சனைகள், தினமும் வீட்டுக்கு வரும் தோழர்கள், குடும்பத்தை ஓட்டுவது, எங்களின் கல்வி, அப்பாவின் தலைமறைவு வாழ்க்கை, போலீஸ் ரைடு.. ஆனால், இவை எவற்றாலும் அம்மாவை உடைக்க முடியவில்லை. அவர் மிகவும் வலுவான மனதுள்ள பெண். துணிச்சலான பெண்.
படிக்க: இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு! | மீள்பதிவு
கேள்வி: ஆனால், நக்சல்பாரியால் உருவான சூழல்… அது எப்படி உங்கள் வீட்டைப் பாதித்தது?
பதில்: அரசியல் காரணங்களுக்காக போலீஸ் சோதனை நடப்பது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் போலீஸ் சோதனை இரவில்தான் நடக்கும். கதவைத் தட்டினார்கள் என்றால், அப்பாவை அழைத்துப்போக போலீஸ் வந்துவிட்டது என்று எங்களுக்குப் புரிந்துவிடும். எங்கள் வீட்டில் ஒரே ஒரு பெரிய படுக்கைதான் இருந்தது. நாங்கள் ஐந்துபேரும் அந்தப் படுக்கையில்தான் படுத்து உறங்குவோம். மின்சாரம் கிடையாது. ஒரு மண்ணெண்ணெய் விளக்குதான் எரிந்துகொண்டிருக்கும். போலீஸ் வரும்போது அம்மா தான் முதலில் எழுந்திருப்பார். பிடியாணை இருக்கிறதா என்று கேட்பார். இல்லையென்றால் அவர்களை உள்ளே விட மாட்டார். அப்போது மழையாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும், குளிராக இருந்தாலும் போலீஸ் வெளியேதான் காத்திருக்க வேண்டிவரும்.
அதுமட்டுமல்ல.. போலீஸ் கொண்டுவந்த துப்பாக்கிகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும் அம்மா பட்டியலிட்டுக்கொள்வார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த பட்டியலில் கையெழுத்து இட வைப்பார். அது ஓர் ஆவணம் ஆகிவிடும். போலீஸ் பொய் சொல்லி ஏமாற்றிவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு. பொய்யான குற்றச்சாட்டைத் தடுப்பதற்காக, அனைத்துவிதமான முன்தயாரிப்பையும் அம்மா செய்வார். இந்த முன் தயாரிப்பு எல்லாவற்றையும் முடித்த பின்னர்தான் அவர்களை அம்மா உள்ளே விடுவார். குறிப்பிட வேண்டிய முக்கியமான மற்றொரு விசயம் அம்மாவின் குரல். அது கணீர் என்று உரத்ததாக, ஆழமான ஒன்றாக இருக்கும். அதனைக் கேட்கும் எவரும் அதிர்ந்து போவார்.
கேள்வி: போலீஸ் உள்ளே வருவதற்கு பலப்பிரயோகம் செய்ய மாட்டார்களா?
பதில்: இல்லை. அவர்கள் ஒருபோதும் அதற்குத் துணியவில்லை. நாங்கள் இங்கே உள்ள அனைவருக்கும் தெரிந்தவர்கள். அப்பாவின் மீதும், அம்மாவின் மீதும் இங்குள்ளவர்களுக்கு அளப்பரிய மரியாதை. அப்பா சிலிகுரியில் பிறந்து வளர்ந்தவர். அவர் பண்பாட்டுத் தளத்திலும் வேலை செய்து வந்தார். இந்த காரணங்களால் போலீஸ் மரியாதையாக நடந்துகொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
கேள்வி: நக்சல்பாரிக்குப் பின் உங்கள் அப்பா தலைமறைவாக சென்றுவிட்ட பின்பு இங்கே நிலைமை எப்படியிருந்தது?
பதில்: எங்கள் வீட்டைச் சுற்றி எப்போதும் ஆயுத போலீஸ் நின்றுகொண்டிருக்கும். வங்க போலீஸ், சிஆர்பிஎப் எல்லோரும் இருப்பார்கள். எங்களுக்கு அது போகப்போக பழகிவிட்டது.
கேள்வி: நக்சல்பாரிகள் என்றால் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட காலம் அது. அரசு, அரசியல் கட்சிகள், ஊடகம் என்று அனைவரும் இயக்கத்துக்கு எதிராக நின்றனர். உங்களுக்கு அருகாமையில் வாழ்ந்தவர்கள் உங்களை எப்படி பார்த்தனர்? அவர்கள் உங்களை விட்டு விலகவில்லையா?
பதில் : ஒருபோதும் இல்லை. அவர்கள் எப்போதும் எங்களின் பெற்றோர்களை மதித்தனர். எங்களுக்கு ஆதரவு அளித்தனர். நக்சல் என்ற வார்த்தையை உருவாக்கியதே ஊடகங்கள்தான். துவக்கத்தில் சிபிஐ எம்மை விட்டு விலகியவர்களை தூற்றவும், அவமானப்படுத்தவும் நக்சல் என்ற வார்த்தையை அவர்கள் உருவாக்கினார்கள். இயக்கத்தை சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ‘இங்கே பயங்கரவாதிகள் இருக்கின்றனர். ஆயுதங்களைச் சேகரிக்கின்றனர்’ என்று அவர்கள் தினமும் கதை கட்டினார்கள்.
வழக்கமான போக்கிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறியவர்களை அசிங்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வார்த்தைதான் நக்சல் என்பது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த வார்த்தைக்கு மரியாதை கிடைக்க ஆரம்பித்தது. நக்சல் என்ற அடைமொழியைச் சேர்த்தால் அது மரியாதைக்குரியது என்ற காலமும் வந்தது. எப்படியிருந்தாலும் உள்ளூர் மக்கள் அரசின், போலீசின் துஷ்பிரச்சாரங்களை நம்பவில்லை. மக்கள், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, எங்களுக்கு எப்போதும் உதவியாக இருந்தனர். உண்மையிலேயே அதனை அங்கீகரித்து பாராட்ட வேண்டும்.
கேள்வி: உங்கள் தந்தையை நீங்கள் கடைசியாகச் சந்தித்து எப்போது ?
பதில்: கடைசியாக என் தந்தை 1969 நவம்பரில் தலைமறைவானார். 1972 ஜூலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை கொல்கத்தாவின் லால்பஜார் போலீஸ் லாக் அப்பில் வைத்திருந்தனர் 12 நாட்கள் கடந்த பின்னர், ஜூலை 28 அன்று அவர் இறந்துபோனார். அவர் போலீஸ் காவலிலிருந்தபோது நானும் எனது சகோதரிகளும் அம்மாவும் அவரை இரண்டு முறை சந்தித்தோம். கடைசியாக அப்பாவை 25 அன்று சந்தித்தோம். அந்த சமயத்தில் என் மூத்த அக்கா மருத்துவ முன் படிப்புக்காக கொல்கத்தாவில் தங்கியிருந்தார்.
படிக்க: நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு! | மீள்பதிவு
கேள்வி: கைதுக்குப் பின்பு அவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்களா?
பதில்: இல்லை. நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லாமல் இருப்பது சட்ட விரோதம் என்றபோதும், ஒருமுறைகூட அழைத்துச் செல்லவில்லை. அவர் போலீஸ் காவலிலேயே செத்துப் போனார். அவர் உடல் நலமின்றி இருந்தார்.
கேள்வி: அவர் காவலிலிருந்தபோது உடல் ரீதியாக அவரைத் துன்புறுத்தினார்களா?
பதில்: தெரியாது. எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்தபோது அவர் நிலைகுலைந்திருந்தார். எப்போதும்போல, போலீசின் முன்னிலையில்தான் சந்திப்பு நடந்தது. டெபி ராய், விபூதி சக்கரவர்த்தி போன்ற, நக்சலைட்டுகளைக் கொன்றதால் புகழ்பெற்ற காவல் அதிகாரிகள் அப்போது இருந்தார்கள். அவர்கள் எப்போதும் அங்கேயே இருப்பார்கள். இருந்தாலும், ‘நீங்கள் பலவீனமாகி விட்டீர்களே?’, ‘போலீஸ் அதிகாரிகள் உங்களை என்ன செய்தார்கள்?’ என்ற கேள்விகளை அம்மா கேட்டார். ‘உங்களைச் சித்திரவதை செய்தார்களா?’ என்பதுதான் அம்மா கேட்டதற்கான பொருள்.
‘அவர்கள் எப்போதும் வருகிறார்கள். காலை, மதியம், மாலை, இரவு என்று எல்லா நேரமும் வருகிறார்கள்.அவர்கள் என்னைத் தூங்க விடுவதில்லை ‘ என்று அப்பா சொன்னார். அப்படியென்றால், விசாரணை இடைவெளியின்றி தொடர்ந்து பல மணி நேரம் நடந்தது என்று பொருள். மேலும், அவரின் உயிரைக் காப்பதற்கான மருந்துகள் அவருக்கு லாக்கப்பில் கொடுக்கப்படவில்லை.
அவருக்கு இதயப் பிரச்சனை இருந்தது என்பதால், சில மருந்துகளை அவர் ஒருவேளை கூட தவறாது சாப்பிட வேண்டும். வீட்டில் இருக்கும்போது அவருக்கு ஒருசமயம் நெஞ்சுவலி ஏற்பட்டது. பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவரை அழைப்போம். மருத்துவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் வந்து அப்பாவின் அருகிலிருந்து பார்த்துக்கொள்வார். ஆனால், இந்த வசதிகளெல்லாம் லாக்கப்பில் இல்லை. அவரை ஓய்வெடுக்க விடவில்லை. மருந்து கொடுக்கவில்லை. உயிர் காக்கும் வசதி எதுவும் அங்கிருக்கவில்லை. இது ஒவ்வொன்றுமே சித்திரவதைதானே? இலையா? இவை அனைத்துமே ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்கள்.
கேள்வி: அவரின் இறப்பு பற்றி எப்படி உங்களுக்குத் தெரிய வந்தது?
பதில்: என் சகோதரிக்குத்தான் முதலில் தகவல் வந்தது. பெரிய அக்கா தங்கியிருந்த மருத்துவக் கல்லூரி விடுதிக்கு போலீஸ் வந்து, அவசரமாக எங்கள் தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அக்காவை தன்னோடு வரும்படி போலீஸ் அழைத்திருக்கிறார். ஆனால், இதெல்லாம் நாடகம் என்று என் அக்காவின் உள் மனது சொல்லியிருக்கிறது.
என் அப்பா போலீசிடம் அதுபோன்ற உதவிகளை ஒருபோதும் கேட்க மாட்டார் என்று அக்காவுக்குத் தெரியும். இறந்த உடலை ஒரு வெள்ளை துணியால் போர்த்தியிருந்த காட்சிதான் என் அக்காவிற்குக் காட்டப்பட்டது. சிலிகுரியில் இருந்த எங்களுக்கும் போலீஸ் தகவல் வந்தது. எங்களின் அண்டை அயலார் விமான டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்து கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தனர்.
நாங்கள் மாலையில் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தோம். அந்த சமயத்தில் உடலைப் பிணவறைக்குக் கொண்டு சென்றிருந்தனர். இறந்தவரை அடையாளம் காணவும், உறுதி செய்யவும் போலீஸ் எங்களை அழைத்துச் சென்றது. அந்த இடம் முழுவதும் போலீஸ்காரர்கள்தான் இருந்தார்கள். என் அப்பா பாதங்களின் பின்புறம் கருப்பாக இருந்தது. அட்டைக் கரி போலக் கருப்பாக இருந்தது. அப்படி இருப்பது இயற்கையா என்ன? அந்த கருப்புப் பாதங்கள் இப்போதும் கண் முன்னே இருக்கின்றன. அவை ஒருபோதும் மறையாது.
கேள்வி: உடலை சிலிகுரி கொண்டுவந்தீர்களா?
பதில்: இல்லை. உடலை எங்களிடம் கொடுங்கள் என்று அம்மா கேட்டார். உடலை சிலிகுரியிலிருந்து கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்கள் முற்றிலுமாக மறுத்துவிட்டார்கள்.
கேள்வி: உடலை எங்கே எரித்தார்கள்?
பதில்: கொல்கத்தா சுடுகாட்டில். வங்கத்தின் ஆயுதப் போலீசும், சிஆர்பிஎப்-பும் சுடுகாட்டில் நிறைக்கப்பட்டிருந்தனர். நகரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது போன்ற நிலை இருந்தது. ஆனால், எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, சின்ன சந்து போன்ற தெருக்களிலிருந்து 4 அல்லது 5 பேர் கொண்ட குழுக்களாக, சட்டென்று தோன்றி அப்பாவுக்கும், இயக்கத்துக்கும் செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு சட்டென்று மறைந்தனர். மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க இப்படிச் செய்வதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும். அந்த ஒருமைப்பாடு நிகழ்வை நான் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
அப்போது கட்சிக்காரர்கள் தலைமறைவாக இருந்தார்கள். அவர்கள் வெளியே வந்தால் பிடிக்கப்படுவார்கள், சித்திரவதைக்கு ஆளாவார்கள், கொலை செய்யப்படுவார்கள். இதற்கெல்லாம் துணிந்து அஞ்சலி செலுத்த வந்தவர்களை நினைத்து நாங்கள் பெருமைகொண்டோம். அதுமட்டுமல்ல, எங்களுக்கு அது ஆறுதல் தருவதாக இருந்தது. அந்த மிகப்பெரும் இழப்பின் நடுவே, துயரின் நடுவே, நாங்கள் தனியே இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
கேள்வி: உங்கள் அப்பாவின் மரணத்தை உங்கள் தாய் எப்படி எதிர்கொண்டார்?
பதில்: அவர் நொறுங்கிப்போனார். அவர் அழுததை அந்த நாள் நாள் நாங்கள் யாரும் பார்த்ததில்லை. அதன்பின் அம்மா எவரோடும் அரசியல் பேசவில்லை. அவர் ஊடகங்களிடமும் பேசவில்லை. போனில் கூட ஊடகங்களுக்கு பதில் சொல்வதில்லை. அது மிக ஆழமான மெளனம். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட பலரும் அழைப்பார்கள். ஆனால், அந்த அழைப்புகளுக்கு அம்மா பதில் கொடுப்பதில்லை. அந்த முழுமையான அரசியல் மௌனம் அவர் இறப்பது வரை நீடித்தது.
கேள்வி: அம்மா எப்போது இறந்தார்?
பதில்: ஜூன் 25, 1995.
கேள்வி: உங்கள் தாய் ஓர் அரசியல்வாதி என்று சொன்னீர்கள்? அவர் ஏன், ஏறக்குறைய 20 ஆண்டுகள், மௌனம் சாதித்தார்?
பதில்: உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஆனால், அது அப்படித்தான் நடந்தது. ஒருவேளை, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர் மௌனம் சாதித்திருக்கலாம். எங்களைப் பாதுகாப்பாக, பத்திரமாக வளர்க்க வேண்டும் என்று அவர் கருதியிருக்கலாம். அரசியல் ஈடுபாடு உள்ள ஒருவரின் சிந்தனையும் செயல்பாடும் எப்படி இப்படி மாற முடியும் என்று நாங்களும் ஆச்சரியப்பட்டிருக்கிறோம். அவர் மௌனத்திற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம்.
1972 வாக்கில் இயக்கம், அரசின் ஒடுக்குமுறை காரணமாக, கணிசமாக பலவீனப்பட்டுவிட்டது. மேலும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன. சாரு மஜூம்தாரின் அரசியல் வழிக்கு எதிராகவும், செயல் தந்திரங்களுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வந்தன. கட்சி பிளவுபட்டுப் போனது. அவர் இறந்த பின்னர் மோதல்கள் கடுமையாக மாறின. எங்கள் தந்தையோடும், குடும்பத்தோடும் நெருக்கமாக இருந்த பலர் தங்களுக்குள் முரண்பட்டு பிரிந்து நின்றனர். இயக்கத்தில் பல சின்னஞ்சிறு குழுக்கள் உருவாகின.
குடும்ப உறுப்பினர்கள் என்கிற அளவுக்கு கருதப்பட்ட சிலர் பிரிந்து நின்றதும், விலகி நின்றதும் அம்மாவை மிகவும் காயப்படுத்தியது. ஏதோ ஒரு பக்கத்தில் சேர்ந்து நிற்பது சரியானது அல்ல என்று அவர் கருதினார். உண்மையில் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. இதுபோன்ற சூழலில் மௌனமாக இருப்பது நல்லது என்று அம்மா யோசித்திருக்கலாம்.
கேள்வி: அவர் இந்த சமயத்திலும் உழைத்துக்கொண்டிருந்தாரா?
பதில்: ஆமாம். அவர் ஓய்ந்தது இல்லை. அவரின் உழைப்புதான் வருமானத்திற்கான ஒரே வழி. அம்மாவுக்கு ஓய்வாக இருப்பது என்பதே தெரியாது. அவர் எல்ஐசி முகவர் வேலையைத் தொடர்ந்தார். ஊரெங்கும் சுற்றி பலரையும் பாலிசி எடுத்துக்கொள்ள வைத்தார். எனது மூத்த சகோதரி அம்மாவைப் பற்றி வங்க மொழியில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். என் அப்பா எதிரிகளைக் கொன்றொழித்தார், கொலை செய்தார் என்று கதைகள் பரப்பப்படும் சூழலில், பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக லைப் இன்சூரன்சை எங்கள் அம்மா விற்பதில் உள்ள முரண்பாட்டை அந்த நூலில் என் சகோதரி பேசுவார்.
கேள்வி: உங்கள் அப்பாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரவில்லையா?
பதில்: அந்த சமயத்தில் நாங்கள் கேட்கவில்லை. உலகத்தைப் பார்க்காமல் அம்மா முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டார் என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னேன் அல்லவா? அப்போது நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். எங்களில் தோழர்கள் பலரும் ஒன்று தலைமறைவாக இருந்தார்கள் அல்லது சிறையிலிருந்தார்கள். அந்த சமயத்தில் எங்களோடு யாரும் இல்லை. அப்புறம், 1997ல் நான் அரசியலில் இறங்கிய பின்னர், நீதி விசாரணை வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை அணுகினோம். எங்கள் அப்பா, வங்கத்தின் கட்சி மாநில செயலாளராக இருந்த சரோஜ் தத்தா மரணம், அந்த சமயத்தில் நடத்தப்பட்ட பிற கொலைகள் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரினோம். அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன்பின் உச்சநீதிமன்றம் சென்றோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
கேள்வி: நீங்கள் மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டீர்களா?
பதில்: இல்லை. நாங்கள் மாணவர் அரசியலில் ஈடுபடவில்லை.எங்களின் படிப்பிலேயே கவனமாக இருந்தோம். ஆனாலும் நாங்கள் சமூக சேவை செய்தோம். தந்தையின் மரணம். அவரைப் பற்றிய பாரதூரமான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள்…. இவையெல்லாம் எங்களை மிகவும் ஆழமாக பாதித்தன. படிப்பை விட்டு வெளியேறுங்கள், கிராமங்களுக்கு சென்று புரட்சிகர பணியாற்றுங்கள் என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ‘சாரு மஜூம்தாரின் பிள்ளைகள் பூர்ஷ்வாக்களின் படிப்பைப் படிக்கிறார்கள்’ என்று எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சாரு மஜூம்தாரின் பிள்ளைகள் என்பதால் நாங்கள் எப்போதும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். தெருவில் நடக்கும் போது கூட எங்களைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு எங்களுக்கிருந்தது. கடைகளில் நிற்பவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள், நல்லதாகவோ, வேறு மாதிரியோ பேசுகிறார்கள் என்று நாங்கள் என்பதைக் கவனித்தோம். எப்போதுமே கவனத்துடன் இருந்தபடி வளர்வது சிறார்களுக்கு நல்லதல்ல. எங்கள் தாய் நாங்கள் நாங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தார். அதே சமயம், ‘நீங்கள் எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்’ என்று எங்களிடம் சொன்னார்.
ஆங்கிலம் மூலக் கட்டுரை : The Wire
முகநூலில் – ஆங்கிலம் வழி தமிழாக்கம் : சி. மதிவாணன்
(சி.மதிவாணன் – சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்)
குறிப்பு :
நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படை மற்றும் அந்த எழுச்சியில் உழைக்கும் மக்களின் பங்கு குறித்து வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை மூன்று பாகமாக வெளியிடுகிறோம் – வினவு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram