இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925-2024): தியாகங்கள் உரமாகின்றன

கம்யூனிசம் ஓர் அறிவியல் தத்துவம்; அதனை யாராலும் அழிக்க முடியாது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளை அகற்றி பூவுலகில் சொர்க்கத்தைப் படைப்பதற்காக மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகள் போராடி வருகின்றன.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925-2024)
தியாகங்கள் உரமாகின்றன, சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகின்றன!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்து நமது நாட்டை விடுதலை செய்ய விரும்பிய விடுதலைப் போராட்ட வீரர்களில் பலர், 1917 ரசிய சோசலிசப் புரட்சியின் மூலம் உந்துதல் பெற்று கம்யூனிசத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு செயல்படத் தொடங்கியதன் தொடர்ச்சியாக 1925 டிசம்பர் 25-ஆம் நாளில் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரையிலான இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறானது பல்லாயிரக்கணக்கான தோழர்கள், கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்களின் அளப்பரிய தியாகமும் அவர்கள் சிந்திய செங்குருதியும் நிறைந்ததாகும்.

அன்றைக்கு, கம்யூனிசக் கொள்கையின் ஈர்ப்பினால் உந்தப்பட்ட தோழர்கள் தலைமையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் ஏராளம். வங்காளத்தில் தெபாகா விவசாயிகள் எழுச்சி; மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் வார்லி பழங்குடி மக்களின் எழுச்சி; கேரளத்தில் வயலாறு-புன்னப்புரா தொழிலாளர் போராட்டம்; தமிழ்நாட்டில் கீழத்தஞ்சை கூலி விவசாயிகளின் செங்கொடி இயக்கம்; தபால் தந்தி ஊழியர் போராட்டம்; மும்பை துறைமுகத் தொழிலாளர் போராட்டம்; மும்பை கப்பற்படை எழுச்சி என்று எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றின.

கம்யூனிஸ்டுகள் தலைமையில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்துப் போராடுவதைக் கண்டு அஞ்சிய ஆர்.எஸ்.எஸ்-இன் மூதாதையர்கள், இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தினர்; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்தனர். காங்கிரசு கட்சியோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை ‘அகிம்சை வழிப் போராட்டம்’ என்ற பெயரில் மழுங்கடித்தது. எனினும், இவற்றையெல்லாம் மீறி கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் மக்கள் போராட்டங்கள் வளர்வதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அதன் கொள்ளைக்குத் துணை போன இந்திய தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் கூட்டுச் சதியின் விளைவாக, 1947-இல் ‘சுதந்திரம்’ என்ற பெயரில் இந்தியாவில் அதிகார மாற்றம் அரங்கேற்றப்பட்டது.

தெலுங்கானா விவசாயிகளின் வீரஞ்செறிந்த எழுச்சி

இன்னொரு பக்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையோ புரட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தவறியது; இந்திய விடுதலைக்கு தலைமை தாங்க மறுத்தது; பொருளாதாரப் போராட்டங்களை முன் தள்ளியது; சந்தர்ப்பவாதத்தில் மூழ்கியது. இவற்றையெல்லாம் மீறி, 1942-இல் மூண்டெழுந்த கப்பற்படை எழுச்சி, 1946-இல் முன்னேறிய தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் போன்ற போராட்டங்களைக் காட்டிக் கொடுக்கவும் செய்தது. ஓட்டுச்சீட்டு நாடாளுமன்றப் பாதையில் வீழ்ந்தது.

எனினும், ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதன் பின்னர் உருவான ‘மார்க்சிஸ்ட்’ கட்சியிலும் இருந்த புரட்சியாளர்கள் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வந்தனர். இதன் விளைவாக, 1967-இல் நடந்த நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியும் அதனைத் தொடர்ந்து 1969-இல் உருவாக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-யும் இந்திய மக்களுக்கு புரட்சியின் மீது மாபெரும் நம்பிக்கையூட்டின. இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது புரட்சிகரப் போராட்டங்கள் நடந்த இடங்களிலெல்லாம், மார்க்சிய-லெனினியக் கட்சியின் கீழ் மக்கள் அணிதிரண்டனர். பண்ணையாதிக்கம், சாதி ஆதிக்கம், நிலப்பிரபுத்துவ ஆதிக்கம், அரசின் ஒடுக்குமுறைகள் போன்றவற்றிற்கெதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டி போராட்டியது நக்சல்பாரி இயக்கம்.

நக்சல்பாரி இயக்கத்தில் செல்வாக்கு செலுத்திய தனிநபர் அழித்தொழிப்பு – இடது தீவிரவாதப் பாதையானது அவ்வியக்கம் பல்வேறு குழுக்களாக சிதைவுறவும் மக்களிடம் இருந்து தனிமைப்படவும் வழிவகுத்தது.

எனினும், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக்கொண்ட பல குழுக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் திரள் வழியில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தத் தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்தகாலத் தவறுகளில் இருந்து அனுபவங்கள், படிப்பினைகளை எடுத்துக் கொண்டு முன்னேறி வருகின்றன. அந்தவகையில், இன்று கம்யூனிச இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் வலது சந்தர்ப்பவாதம், நவீன கலைப்புவாதம், நவீன அராஜகவாதம் போன்ற குட்டிமுதலாளிய, முதலாளிய சித்தாந்தங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன.

பல குழுக்களாகப் பிரிந்திருந்தாலும் புரட்சிகர அமைப்புகள்தான் மக்களின் உரிமைகளுக்காக களத்தில் நிற்கின்றன; இந்திய கம்யூனிச இயக்கத்தின் தியாகப் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கின்றன; கம்யூனிசத் தத்துவத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி உண்மையான சமுதாய மாற்றத்திற்காக தொடர்ந்து போராடி வருகின்றன.

மேலும், ஓட்டுச் சீட்டு அரசியலில் சென்று சீரழிந்த சி.பி.எம்., சி.பி.ஐ. போன்ற கட்சிகளின் அணிகளில் பலரும், தனிநபர்களாகவும் கம்யூனிசத்தை நேசிக்கின்ற சக்திகள் மட்டுமே மக்களுக்காகப் போராடி வருகின்றனர்.

ஆனால், ஆளும் வர்க்கங்களின் கட்சிகளும் கார்ப்பரேட், பார்ப்பனிய ஊடகங்களும் மார்க்சிய-லெனினிய இயக்கங்களுக்கு எதிராக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகின்றன; அவர்களது பங்களிப்பை இருட்டடிப்பு செய்கின்றன. 1952-களிலேயே போலி சோசலிச நாடாக மாறிய சமூக ஏகாதிபத்தியமான ரசியா, 1992-இல் சிதைந்ததை ‘கம்யூனிசத்தின் தோல்வி’ என்று பிரச்சாரம் செய்தன. நாடாளுமன்ற ஓட்டுச் சீட்டு அரசியலில் சென்று சீரழிந்துவரும் சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கட்சிகளின் தொடர்ச்சியான தேர்தல் சரிவுகளைக் காட்டியும் மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் பிளவுற்றிருப்பதைக் காட்டியும் இந்தியாவில் கம்யூனிசம் மறைந்து வருவதாகப் பிரச்சாரம் செய்கின்றன.

ஆனால், உண்மையில் இந்த கார்ப்பரேட் கட்சிகளும் அவை இதுநாள் வரையில் பின்பற்றிய கொள்கைகளும்தான் இந்தியாவில் நிலவும் அனைத்துவித கேடுகளுக்கும் காரணம். கிராமங்களிலிருந்து விவசாயிகள் வெளியேற்றம், காடுகளில் இருந்து பழங்குடி மக்கள் விரட்டியடிப்பு, கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகள், அன்றாடம் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், அதிகரித்துவரும் குற்றங்கள், வேலையின்மை, கொள்ளை நோய்கள், சுகாதாரக் கேடுகள் போன்ற அனைத்திற்கும் இவர்கள் பின்பற்றும் கார்ப்பரேட் ஆதரவு முதலாளித்துவக் கொள்கைகள்தான் காரணம். இவர்கள் முன்வைத்த நாடாளுமன்றப் பாதையில் சென்றுதான் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளும் சீரழிந்தன.

நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து கொல்கத்தாவில் நடந்த மாணவர்களின் போராட்டம்

அதுமட்டுமல்ல, “இந்தியா ஒரு சுதந்திர நாடு”, “இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மதச்சார்பற்றது, ஜனநாயகமானது” என்று இந்தக் கட்சிகளும் அதன் ஊடகங்களும் பிரச்சாரம் செய்தன. ஆனால், இந்த அரசியல் சட்டத்தைப் பயன்படுத்திதான், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது; இவர்கள் போற்றிய நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கிறது; இந்தக் கட்சிகளையும் அடக்கி ஒடுக்குகிறது; சிறுபான்மை மத மக்களையும் தலித்துகளையும் படுகொலை செய்கிறது.

மொத்தத்தில், இந்த கார்ப்பரேட் கட்சிகள் முன்வைத்த நாடாளுமன்ற ஜனநாயகமும் தோற்றுவிட்டது.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு, திராவிடக் கட்சிகள், ஜனதா கட்சி போன்றவை முன்வைத்த சித்தாந்தங்களை அவையே கைவிட்டுவிட்டன. ஆனால், இன்றளவிலும் கம்யூனிசம் மட்டுமே உழைக்கும் மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறது.

இந்த உண்மைகளை மறைப்பதற்காகவும் நமது நாட்டில் புரட்சிகர மாற்றம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான், இந்த கார்ப்பரேட் கட்சிகளும் பார்ப்பனிய ஊடகங்களும் கம்யூனிச இயக்கங்கள், மார்க்சிய-லெனினிய அமைப்புகள் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றன.

கம்யூனிசம் ஓர் அறிவியல் தத்துவம்; அதனை யாராலும் அழிக்க முடியாது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளை அகற்றி பூவுலகில் சொர்க்கத்தைப் படைப்பதற்காக மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகள் போராடி வருகின்றன.

இந்த இயக்கங்களின் முயற்சியில் புரட்சிகரக் கட்சி கட்டியமைக்கப்படும்; அதன் மூலமாக மட்டுமே இந்திய மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்; நாடு சோசலிசத்தை நோக்கி முன்னேறும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை!


ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க