சத்தீஸ்கர் மாநிலத்தில் கனிமவள கொள்ளைக்காகப் பழங்குடியின மக்களைப் படுகொலை செய்துவருகின்ற பாதுகாப்புப் படையினர் மேலும் ஐந்து பழங்குடியின மக்களைப் படுகொலை செய்துள்ளனர்.
டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ‘மாவோயிஸ்டு ஒழிப்பு’ என்கிற பெயரில் நாராயண்பூர் மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லைகளில் மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலில் படுகாயமடைந்த நான்கு சிறுவர்கள் தண்டேவாடா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் 12 வயது சிறுவனது தொண்டையில் தோட்டா பாய்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அதன்பிறகு தொண்டையில் அறுவைச் சிகிச்சைக்காக டிசம்பர் 17 ஆம் தேதி ராய்பூரில் உள்ள DKS சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அச்சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டான்.
அங்கு அவனுக்கு நான்கு மயக்க மருந்து நிபுணர்கள் உள்பட 12 மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் இரண்டரை மணி நேரம் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவனுடைய தொண்டையிலிருந்து தோட்டா அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் உடல்நிலை முன்பைவிட நன்றாக இருப்பதாகவும், அவனால் கொஞ்சம் பேச முடிகிறது என்றும் கூறினர். ஆனால் அவன் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறான். சிகிச்சைக்குப்பிறகு தோட்டாவை போலீசார் கொண்டு சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தண்டேவாடா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இரண்டு குழந்தைகள் டிசம்பர் 19 ஆம் தேதி மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பின்னர் இரு குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சமூக ஆர்வலர் சோனி தண்டேவாடாவில் உள்ள தன்னுடைய வீட்டிற்குக் கூட்டிச் சென்றுள்ளார்.
போலீசிடம் குழந்தைகளை ஒப்படைக்க மறுத்ததால் தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து சோனி கூறுகையில் “ ஒவ்வொரு 15-20 நிமிடத்திற்கும் போன் செய்து மனதளவில் துன்புறுத்தினார்கள். இறுதியில் குழந்தைகளை மருத்துவமனைக்குக் கூட்டிச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். அங்கே நிறைய பரிசோதனைகளைச் செய்து கொள்வதற்கு எங்களுக்குப் பரிந்துரைத்தனர். பின்னர் மாலையில் குழந்தைகளை என் அண்ணன் வீட்டிற்குக் கூட்டிச் சென்றேன்” என்று தெரிவித்தார்.
படிக்க: கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடிகள் அமைப்பைத் தடை செய்த சத்தீஸ்கர் அரசு!
மேலும் சோனி கூறுகையில், “அடுத்த நாள் நான் சிறிது நேரம் என்னுடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் போலீசார் எனது சகோதரனின் வீட்டிற்குள் நுழைந்து குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைக் கூட்டிச்சென்றனர் என்கிற தகவல் கிடைத்தது. வீட்டிற்குப் போய் பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதைப் பார்த்தவுடன் குழந்தைகளை வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்றதால் கைகலப்பு நடந்திருக்கலாம் என்று தோன்றியது.
பின்னர், நான் எப்படியோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் மருத்துவமனையில் ஒரு அறையில் பூட்டப்பட்டிருப்பதை அறிந்தேன். போலீசார் அவர்களை (குழந்தைகளை) அழைத்துச் செல்ல முயன்றனர். குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்த்தனர். ஆனாலும், அவர்களை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் அமர வைத்தனர். கைகலப்பில் சோனு (தலையில் சுடப்பட்டவர்) கீழே விழுந்தபோது, அவரை தூக்கி வாகனத்தில் தள்ளினர். இரண்டு குழந்தைகளும் அழத் தொடங்கியபோது, அவர்கள் ஒவ்வொருவரின் வாயிலும் ஒரு துணி திணிக்கப்பட்டது” என்றார்.
சமூக ஆர்வலரின் கூற்றுப்படி, அந்தக் குழந்தைகள் அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் பூட்டப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் அவர்களைக் கீழே உள்ள ஒரு அறைக்கு அழைத்து வந்தனர். குழந்தைகளை மருத்துவமனையில் அடைப்பதற்காக, போலீசார் அவர்களை மலேரியா நோயாளிகள் என்று பொய்யாக அறிவிக்கச் செய்து, அவர்களின் கைகளில் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.
பாசிச கும்பலானது அதானி, அம்பானி, அகர்வால் போன்ற கார்ப்பரேட் கும்பல்களின் கனிம வள கொள்ளைக்காக மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் திட்டமிட்டு பழங்குடியின மக்களைப் படுகொலை செய்து வருகிறது. பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டுவதே பாசிச கும்பலின் திட்டம்.
குறிப்பாக சத்தீஸ்கரில் கடந்த ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு பழங்குடியின மக்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த 13 ஆம் தேதி மூன்று நாள் பயணமாக சத்தீஸ்கருக்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா ராணுவ வீரர்களிடையே பேசுகையில் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு 99 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர், 123 பேர் கைது செய்யப்பட்டனர். 250 பேர் சரணடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 2026 மார்ச் 31 ஆம் தேதிக்குள் மாநிலத்திலிருந்து நக்சலிசம் ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார். அதாவது கார்ப்பரேட்களின் கனிமவள கொள்ளைக்காக பழங்குடியின மக்களை மலைகளிலிருந்து வெளியேற்றுவதற்கு அம்மக்கள் மீதான படுகொலைகளைப் பாசிச கும்பல் தீவிரப்படுத்த உள்ளது என்பதே இதன் பொருள்.
எனவே இயற்கையைப் பாதுகாக்கப் போராடுகின்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஜனநாயக சக்திகள் கார்ப்பரேட்களின் கனிமவள கொள்ளைக்கு எதிராகவும் போராட வேண்டும். இதுவே தற்போதைய தேவையாக உள்ளது.
நன்றி: தி வயர்
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram