இயற்கையின் இருமுனை எதிர்த்தாக்குதலில் அமெரிக்கா

காட்டுத்தீயும் கடுமையான பனிபொழிவும் அமெரிக்க மக்களை வாட்டி வதைத்து வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதுமே பருவநிலை மோசமாக பாதிக்கப்பட்டு புதிய வகை பேரிடர்கள் ஏற்படுகின்றன.

மெரிக்காவின் ஒரு பகுதியில் கடும் பனி மக்களை வாட்டி வதைத்துவரும் சூழலில், மறுமுனையில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே தெற்கு காலிஃபோர்னியாவில் பரவிவரும் காட்டுத்தீ அங்குள்ள வீடுகளை தீக்கிரையாக்கியுள்ளது. இதனால் முதலில் பத்தாயிரம் வீடுகளிலிருந்து முப்பதாயிரம் மக்கள் வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு அறிவித்த நிலையில், காட்டுத்தீ பரவுவதன் வேகம் அதிகரிப்பதால் 1 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர். வீடுகள் தீப்பற்றும் ஆபத்தில் இருப்பதால் வேறுவழியின்றி வீடுகளிலிருந்து வெளியேறியதாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலிசேட்ஸில் பத்து ஏக்கர் வரை பரவியிருந்த காட்டுத்தீ, சில மணிநேரங்களில் 2,900 ஏக்கருக்கும் அதிகமாக பரவியதால் அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சாம்பல்காடாகியுள்ளது. இதனால் தற்போது மட்டுமின்றி வருங்காலத்திலும் அங்குள்ள மக்கள் கடுமையான உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இதுவரை ஏற்பட்டுள்ள காட்டுத்தீயிலேயே மிக மோசமான காட்டுத்தீயாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பாலிசேட்ஸிலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள அல்டடேனாவிலும் மற்றொரு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதுவும் சிறு காட்டுத்தீயாக தொடங்கிய நிலையில், சில மணி நேரங்களில் 400 ஏக்கருக்கும் மேல் பரவியுள்ளது.

காட்டுத் தீ காரணமாக 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கான மின்சாரத் தேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெண்டியுரா கவுண்டி என்ற பகுதியில் சுமார் 3 லட்சத்து 34 ஆயிரம் மக்களும், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 9 லட்சத்து 57 ஆயிரம் மக்களும் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பது, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது போன்ற காரணங்களால் தீயை கட்டுப்படுத்துவதில் தோய்வு ஏற்படுத்தியுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இக்காட்டுத்தீயால் இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிகை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


படிக்க: அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் : முதலாளித்துவத்தை வீழ்த்தாமல் தீர்வு இல்லை !


மறுபுறம், அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த 13 ஆண்டுகளாக இல்லாத பனிபொழிவு ஏற்பட்டுள்ளது. மத்திய அமெரிக்காவின் கேன்சிஸ் முதல் கிழக்கு கடற்கரையிலுள்ள நியூ ஜெர்சி வரையிலான மாகாணங்கள் பனியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல மாகாணங்களில் உள்ள பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. ஐந்து பேருக்கும் அதிகமானோர் இப்பனிபொழிவால் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கென்டக்கி, இந்தியானா, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, இல்லினாய்ஸ் மற்றும் மிசோரி மாகாணங்களில் சுமார் 3 லட்சம் பேர் மின்விநியோகம் இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மணிக்கு 72 கி.மீ. வேகத்தில் பனிக்காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கிழக்குப்பகுதிகளில் எலும்பை நடுங்க வைக்கும் அளவுக்கு ஆபத்தான பனியும், குளிர்காற்றும் இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு காரணமாக பல பள்ளிகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பனிபொழிவு காரணமாக நூற்றுக்கணக்கான விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சாலையில் படிந்துள்ள பனித்துகள்களை அகற்றினாலும் அடுத்த அரைமணி நேரத்திற்குள் மீண்டும் பனியால் மூடப்படும் நிலை இருப்பதால் வாகனம் ஓட்டுவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், கன்சாஸ், மேற்கு நெப்ராஸ்கா, இந்தியானாவின் பகுதிகளில் பனிமூடிய சாலைகளால், பல வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கன்சாஸ் நகர சர்வதேச விமானநிலையத்தில் 11 அங்குலம் அளவுக்கு பனிப்பொழிவு பதிவானதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அட்லாண்டிக்கை நோக்கி பனிப்பொழிவு நகர்ந்ததால் பல பகுதிகளிலும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரேநாளில் 1400 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டன. 740 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது. மத்திய அட்லாண்டிக்கை நோக்கி பனிப்புயல் நகர்ந்து கொண்டிருப்பதால் வாஷிங்டன் டி.சி. மக்கள் கனத்த பனிப்பொழிவாலும், கடுமையான குளிராலும் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும் இப்பனிபொழிவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. வடதுருவத்தை சுற்றிச்சுழலும் குளிர்ந்த துருவச்சுழல் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் சில ஆசிய நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவுவதாக சூழலியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் பனி புயல் வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதில் அவலம் என்னவென்றால், அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டிரம்ப் காலநிலை மாற்றம் என்பதையே நிராகரிப்பவராக உள்ளார்.

இவ்வாறு காட்டுத்தீயும் கடுமையான பனிபொழிவும் அமெரிக்க மக்களை வாட்டி வதைத்து வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதுமே பருவநிலை மோசமாக பாதிக்கப்பட்டு புதிய வகை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதனால் உழைக்கும் மக்களே கடுமையான பாதிப்பை சந்திக்கின்றனர்.

ஆனால், இந்த காலநிலை மாற்றத்திற்கு காரணமாக இருந்த முதலாளித்துவச் சரண்டலாளர்களை பாதுகாக்கும் அரசுகளோ மக்களை பாதுகாக்க எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. மாறாக, உழைக்கும் மக்களை கொத்து கொத்தாகச் சாவதை வேடிக்கை பார்க்கின்றன. இந்த கொலைகார முதலாளிய அரசை தகர்த்து மக்கள் நலன் கொண்ட மாற்று கட்டமைப்பையும் அதில் தேவைக்கேற்ற உற்பத்தி முறையையும் நிலைநாட்டுவதே மக்களை பாதுகாக்கும்.


ஆலம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க