கும்பமேளா படுகொலை: பா.ஜ.க அரசே குற்றவாளி

மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் ஊடாக இந்து மத உணர்வை ஊட்டி தனக்கான அடித்தளத்தைப் பெருக்கிக் கொள்ள எத்தனிக்கிறது காவிக் கும்பல்.

0

த்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. அங்கு நள்ளிரவு 1:30 மணியளவில் (ஜனவரி 29) திடீரென ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா ஜனவரி 13 அன்று தொடங்கியது. மொத்தம் 45 நாட்கள் இந்த கும்பமேளா நடைபெறும்.”ஷாஹி ஸ்னான்” அதாவது நாக சாதுக்கள் நீராடும் மௌனி அமாவாசை தினமான இன்று (ஜனவரி 29) சுமார் 10 கோடி பேர் அங்கு திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசு அதிகாரிகள் முன்னரே தெரிவித்திருந்தனர்.

அதிகப்படியான மக்கள் கூட்டம் அங்கு கூடும் என்பதை அறிந்திருந்தும் யோகி ஆதித்யநாத் அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் பலியாகியுள்ளனர். தடுப்புகளை மீறிச் சென்றதே நெரிசலுக்குக் காரணம் என்று வழக்கம் போல அரசு தரப்பில் மக்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. ஆனால் போதுமான பாதுகாப்பு செய்யப்படவில்லை என்பதே நேரில் சென்ற மக்களின் அனுபவமாக உள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர் ஐ.ஏ.என்.எஸ் செய்தி முகமையிடம் பேசுகையில், தன்னைக் காப்பாற்றுமாறு பாதுகாப்புப் படையினரிடம் முறையிட்டதாகவும், நிர்வாகத்தைச் சேர்ந்த யாரும் தன்னைக் காப்பாற்ற வரவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேபோல், ​​மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர், “அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை; யாரும் உதவ வரவில்லை; பலர் காயமடைந்தனர். எனது தாய் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.


படிக்க: ஹத்ராஸ் படுகொலை: போலே பாபாவும்! இந்துத்துவத்திற்கான அணித்திரட்டலும்!


இச்சம்பவம் குறித்து கருத்து கூறிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி “நிர்வாக சீர்கேடும், பொதுவான பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தாமல் வி.ஐ.பி-க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதுமே இந்தத் துயர சம்பவத்துக்குக் காரணம்” என்று கூறியுள்ளார்.

அதேபோல் “கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகள், வி.ஐ.பி-களின் நடமாட்டம், நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்தியது, தவறான நிர்வாகம் ஆகியவையே காரணம்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் “இது மாதிரியான மிகப் பெரிய நிகழ்வுக்கு ஏர் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும். அதைச் செய்யாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானி குழுமம், ரிலையன்ஸ், கோகோ கோலா, ஐ.டி.சி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலோ கும்பமேளாவைப் பயன்படுத்தி தங்களது பிரண்டுகளை விளம்பரப்படுத்திக் கொள்ள ₹5,000 கோடியை சி.எஸ்.ஆர் நிதியாக ஒதுக்கியிருந்தன.

அதேபோல், காவிக் கும்பலும் மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அதன் ஊடாக இந்து மத உணர்வை ஊட்டி தனக்கான அடித்தளத்தைப் பெருக்கிக் கொள்ள எத்தனிக்கிறது. அந்த அடித்தளத்தை தனக்கான வாக்குகளாக மாற்றிக் கொள்ளும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. அக்கும்பல் தனது ஆதாயத்திற்காக மக்களை தற்போது பலி கொடுத்துள்ளது.

ஏற்கெனவே, உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ’போலே பாபா’வின் சத்சங் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்து வடுக்கள் மறைவதற்குள் தற்போது மீண்டும் ஒரு படுகொலை அரங்கேறியுள்ளது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க