சமூகம் மற்றும் மதச்சார்பின்மை குறித்த ஆய்வு மையத்தின் (Centre for the Study of Society and Secularism – CSSS) மனித உரிமை ஆர்வலர்களான இர்பான், நேஹா தபாடே மற்றும் மிதிலா ராவத் ஆகியோரால், “மேலாதிக்கம் மற்றும் இடிப்புகள்: 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் மதக் கலவரங்களின் கதை” (Hegemony and Demolitions: The Tale of Communal Riots in India in 2024) என்கிற தலைப்பில் எழுதப்பட்ட ஆய்வறிக்கையில், 2023 ஆம் ஆண்டைவிட வகுப்புவாத கலவரங்கள் 84 சதவிகிதம் அதிகமாக கடந்த ஆண்டில் (2024) பதிவாகி உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், “உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தியாவில் வகுப்புவாதக் கலவரங்கள் குறித்த விரிவான தரவுகளைப் பராமரிக்கின்றன. ஆனால் அந்த கலவரங்கள் குறித்த தரவுகளைத் தொடர்ந்து வெளியிடுவதை நிறுத்திவிட்டன” என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
அறிக்கையின்படி மகாராஷ்டிராவில் 12 மதக்கலவரங்களும், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் தலா 7 கலவரங்களும் பதிவாகி உள்ளன. இக்கலவரங்களில் 10 முஸ்லீம்களும், 3 இந்துக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக “2024 ஆம் ஆண்டில் மதக்கலவரங்கள் அதிகரித்ததற்கு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல்கள் காரணமாக இருக்கலாம்” என்று இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற அயோத்தி ராமர் கோவில் திறப்பின் போது 4 கலவரங்கள் நடைபெற்றுள்ளன. 26 மதக்கலவரங்கள், மத விழாக்கள், ஊர்வலங்களின் போது நடைபெற்றுள்ளன. குறிப்பாக சரஸ்வதி பூஜையின் போது 7 கலவரங்களும், விநாயகர் சதுர்த்தியின் போது 4 கலவரங்களும், பக்ரீத் பண்டிகையின் போது 2 கலவரங்களும் பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மதக் கொண்டாட்டங்களை, இஸ்லாமியர்களின் மீதான மதக்கலவரங்களுக்கும், அரசியல் அணிதிரட்டல்களுக்கும் காவி கும்பல் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை அறிய முடிகிறது.
படிக்க: உ.பி: நீதிமன்றத்தின் துணையோடு சம்பல் பகுதியில் கலவரத்தை உருவாக்கும் பாசிச கும்பல்
மேலும் 6 கலவரங்கள் மத வழிபாட்டுத் தளங்கள் தொடர்பானவை ஆகும். பழங்கால இந்து கோவில்களை இடித்துவிட்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாகக் காவி கும்பல் நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி மற்றும் ஜான்பூரில் உள்ள அதாலா மசூதி உள்பட 10 வழிபாட்டுத் தளங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், மதக் கலவரங்களில் அரசாங்கமானது பாரபட்சத்தோடு முஸ்லீம் சமூகத்தை மட்டும் குறிவைக்கும் ஒரு போக்கு உள்ளதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான சொத்துகளை இடிப்பது, கணிசமான பொருளாதார சேதத்தை ஏற்படுத்துவது, புல்டோசர்களைப் பயன்படுத்துவது ஆகியவையும் அடங்கும். கூடுதலாக அரசானது மதக்கலவரங்களின் போது, வன்முறைக்கு ஆளான சமயங்களில் கூட முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீதே வழக்குகளைத் தொடுத்துள்ளதாக இந்த ஆய்வு அம்பலப்படுத்தி உள்ளது.
மதக்கலவரங்கள் நடந்த பகுதிகளான டெல்லியில் உள்ள மசூதி, உத்தரகாண்டில் உள்ள மதரசா ஆகியவற்றில் உள்ள முஸ்லீம் மக்களின் 19 சொத்துக்களை அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி காவி கும்பல் இடித்துள்ளது.
அசாமில் உள்ளவர்கள் வங்கதேச வம்சாவளி முஸ்லீம்கள் என்றும், மத்தியப் பிரதேசத்தில் உள்ளவர்கள் மாட்டிறைச்சி கடத்தல்காரர்கள் என்றும் கூறி அவர்களின் 11 வீடுகள் மற்றும் முஸ்லீம் ஒருவரின் வாடகை வீட்டையும் இடித்துள்ளனர்.
மேலும் 2024 ஆம் ஆண்டில் நடந்த 13 கும்பல் படுகொலைகளில் 9 முஸ்லீம்கள், ஒரு இந்து, ஒரு கிறிஸ்தவர் என 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது 2023 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 21 கும்பல் படுகொலைகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ள போதிலும் இதுபோன்ற தாக்குதல்கள் கவலை தரும் தொடர் நிகழ்வுகளாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
மொத்தத்தில், 7 கும்பல் படுகொலைகள் ‘பசு பாதுகாப்பு’ அல்லது ‘பசுக் கொலை’ குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவை, மீதமுள்ளவை மதம் கடந்த உறவுகள் மற்றும் முஸ்லீம் என்ற மத அடையாளத்திற்காகக் குறிவைத்துத் தாக்கப்படுவது காரணமாகும்.
படிக்க: ஜார்க்கண்டில் பழங்குடியின மக்களிடையே மதக்கலவரத்தைத் தூண்டும் பாசிச கும்பல்!
“இந்த வகுப்புவாதக் கலவரங்களின் அதிகரிப்பானது, இந்தியாவில் மத நல்லிணக்கத்தை அரசு பேணி வருவதால் வகுப்புவாத கலவரங்களும் பதற்றங்களும் இல்லாமல் உள்ளது என்ற அரசின் கதையைப் பொய்யாக்குகிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாசிச கும்பல் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தது முதல் முஸ்லீம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதாவது உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களில் முஸ்லீம் மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்குகின்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. தாக்குதலின் ஒரு பகுதியாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
எனவே, பரந்துபட்ட மக்கள் போராட்டங்களைக் கட்டியமைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைக்காமல் பாசிச கும்பலை வீழ்த்துவது சாத்தியமாகாது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram