உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகா கும்பமேளாவில் அகண்ட பாரதத்தின் அரசியலமைப்பை வெளியிடத் தயாராகி வருகிறது காவிக் கும்பல். 25 பேர் கொண்ட கமிட்டியை உருவாக்கி 501 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணத்தைத் தயாரித்துள்ளது. பிப்ரவரி 2 அன்று நடைபெறும் பசந்த் பஞ்சமி விழாவில் இதனை வெளியிடவுள்ளது.
இராமாயணம், கிருஷ்ணரின் போதனைகள், மனுஷ்மிருதி, சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் போன்றவற்றிலிருந்து இந்த அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாகக் காவிக் கும்பல் கூறுகிறது.
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், வாரனாசியின் சம்பூரனந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகம், டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள சங்கி அறிஞர்களைக் கொண்டு இந்துராஷ்டிர அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேடுகெட்ட கமிட்டியின் பெயர் இந்துராஷ்டிர சம்விதான் நிர்மல் சமிதி (Hindu Rashtra Samvidhan Nirmal Samiti).
மகா கும்பமேளாவில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த சுவாமி ஆனந்த் ஸ்வரூப் மகாராஜ் (கமிட்டியின் ஆதரவாளர்) இந்தியாவை 2035 ஆம் ஆண்டுக்குள் இந்து நாடாக மாற்றுவோம் எனக் கூறினார்.
“மனித விழுமியங்கள் தான் இந்த அரசமைப்பின் மையக்கரு. இதனை வடக்கிலிருந்து 14 அறிஞர்களும் தெற்கிலிருந்து 11 அறிஞர்களும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த அரசியலமைப்பு பிற மதத்தினருக்கு எதிரானதில்லை. ஆனால், தேச வளர்ச்சிக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் தற்போதுள்ள சட்டத்தைக் காட்டிலும் கடுமையான தண்டனைகள் இதில் வழங்கப்படும்”.
படிக்க: கும்பமேளா படுகொலை: பா.ஜ.க அரசே குற்றவாளி
“கடந்த 70 ஆண்டுகளில் 300 திருத்தங்கள் இந்திய அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக நமது வேதங்கள் மாறாமல் ஒரே மாதிரியாக உள்ளன. 127 கிறிஸ்தவ நாடுகள், 57 முஸ்லீம் நாடுகள், 15 பௌத்த நாடுகள் உள்ளன. ஏன் யூதர்களுக்கும் கூட இஸ்ரேல் என்ற நாடு உள்ளது. ஆனால், இந்த உலகில் 175 கோடி மக்கள் தொகை கொண்ட இந்துக்களுக்கு நாடில்லை” என்று சம்பவி பீடத்தின் தலைவர் கூறினார்.
“இந்து ராஷ்டிரத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இராணுவ கல்வி கட்டாயமாக்கப்படும். திருட்டிற்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். வரி விதிப்பு முறை மாற்றப்படும். விவசாயத்திற்கு வரி கிடையாது” என்று கமேஷ்வர் உபாத்யாயா, கமிட்டியின் தலைவர் கூறினார்.
இந்த அரசமைப்பில் ஒரே நாடாளுமன்றம் மட்டுமே இருக்கும். அதற்குப் பெயர் ”ஹிந்து தர்ம நாடாளுமன்றம்”. இதன் உறுப்பினர்கள் ”தர்மிக் சன்சத்கள்” (Dharmik Sansads) என்று அழைக்கப்படுவர். 16 வயது நிறைவடைந்திருந்தால் வாக்கு செலுத்த முடியும்; சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களே தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள். நாட்டின் தலைவரான ராஷ்டிரத்யக்ஷ் (Rashtradhyaksh), நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பொது சிவில் சட்டத்தை முதல்முறையாக உத்தரகாண்டில் அமல்படுத்தியுள்ளது பா.ஜ.க அரசு. தற்போது இஸ்லாமியர்களின் சொத்துகளைப் பறித்து இரண்டாந்தர குடிமக்களாக்கும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்குக் கூட்டுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்து ராஷ்டிரத்தைப் படைக்கும் நோக்கில் காவிக் கும்பல் பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் “அகண்ட இந்து ராஷ்டிரத்திற்கான அரசியலமைப்பு” என்ற பெயரில் ஒரு ஆவணம் வெளியிடப்படுவதென்பது ஜனநாயகத்தை நேசிப்போருக்கான எச்சரிக்கையாகும்.
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram