தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே தனியார் நிதி நிறுவன கடன் தொல்லையால் சங்கரன் என்பவர் விஷம் குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறப்பிற்கு காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான சங்கரன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வழங்குகின்ற அப்டஸ் (APTUS Value Housing Finance India Ltd) என்கிற தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய வீட்டை அடகு வைத்து ஐந்து லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
கடனை அடைப்பதற்கு மாதந்தோறும் 11 ஆயிரம் ரூபாய் தவணையாகக் கட்டி வந்திருக்கிறார். பின்னர் இடையில் ஏற்பட்ட வேலை நெருக்கடி காரணமாக சில மாதங்களாக சங்கரனால் தவணைத் தொகையைக் கட்ட முடியவில்லை. ஆனால் பைனான்ஸ் நிறுவனம் தொடர்ந்து தவணைத் தொகையைச் செலுத்தும்படி சங்கரனுக்கு நெருக்கடி கொடுத்து வந்துள்ளது.
ஒரு கட்டத்திற்கு மேல் பைனான்ஸ் நிறுவனம் கடன் தொகைக்கு நிகராக சங்கரன் வீட்டை ஜப்தி செய்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றமும் சங்கரன் தவணைத் தொகையைச் செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்வதற்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி அன்று தூத்துக்குடி போலீஸ் துணை கண்காணிப்பாளர் சுகிர் தலைமையில் முறப்பநாடு போலீசார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் சங்கரன் வீட்டை ஜப்தி செய்யச் சென்றுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சங்கரன், பத்ரகாளி ஆகியோர் பூச்சி மருந்தைக் குடித்துவிட்டனர்.
வாயில் நுரை தள்ளிய நிலையில் சங்கரன் தவித்தபோது, அவர் நடிப்பதாக போலீசார் கூறி மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதுடன் காப்பாற்ற வந்தவர்களையும் தடுத்து ”நீங்கள் ஏதாவது செய்தால் உங்கள் மேல் வழக்கு போட்டுவிடுவேன்” என்று துணை கண்காணிப்பாளர் மிரட்டியுள்ளார். இருவரின் நிலையையும் கண்டுகொள்ளாத பைனான்ஸ் அதிகாரிகள் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்து வைத்து வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர்.
படிக்க: சுய உதவிக் குழு கடன் நெருக்கடியால் தொடரும் தற்கொலைகள்!
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் கடந்த நிலையில் இருவரின் நிலையும் மோசமடைந்துள்ளது. அதன் பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரையும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கரன் உயிரிழந்துள்ளார். அவரது மனைவிக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சங்கரனின் மகள் பானு கூறுகையில் “என்னுடைய அப்பாவை சிறிது நேரத்திற்கு முன்னால் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் போலீசார் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கவில்லை“ என்று தெரிவித்துள்ளார்.
சங்கரன் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையிலிருந்து சங்கரன் உடலை வாங்க மறுத்து சங்கரனின் உயிரிழப்பிற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று பிப்ரவரி 1 அன்று வல்லநாட்டில் 150க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும் நெல்லை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
பின்னர் ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் மற்றும் டி.எஸ்.பி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சங்கரனின் மகள் மற்றும் மகனுக்கு எட்டு லட்சமும், பத்ரகாளியின் மேல் சிகிச்சைக்காக 2 லட்சம் என 10 லட்சம் தருவதாக பைனான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். வீட்டின் மீதுள்ள ஜப்தி ரத்து செய்யப்பட்டு வீடு வழங்கப்படும், பத்ரகாளிக்கு அரசு வேலைக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்த பின்பு மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ”சங்கரனின் உயிரிழப்பிற்குக் காரணமான போலீஸ் துணை கண்காணிப்பாளர், பைனான்ஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார். ஆனால் தற்போது வரை யார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
விஜய் மல்லையா போன்றவர்கள் கோடிகளில் கடன் வாங்கிவிட்டு அதனைத் திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகின்றனர். அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. ஆனால் உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற்றுத் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும் போது அவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram