கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி

பல்வேறு தொழிற்சாலைகள் சார்பாக இந்த சிப்காட் பகுதியில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்பேட்டை என வரும்போது முதலாளிகளின் நிலங்களைப் பறிமுதல் செய்யவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் 12.02.2025 அன்று ”தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி அவர்களின் தலைமையில் சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகம் வரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக அணி திரண்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனர்.

மக்கள் அதிகாரம் சார்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்து போராட்டத்தில் பங்கு கொண்டோம்.

ஓசூரை அடுத்த சூளகிரி அருகே நல்லகானக் கொத்தப்கள்ளி, கோனேரிப்பள்ளி, குண்டுகுறுக்கி, கொரகுறுக்கி, வரதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமையவுள்ளது. இதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து ஆண்டுதோறும் இரண்டு போக பாசனத்திற்காக நீர் திறக்கப்படுவதை நம்பி நல்லகானக்கொத்தப்பள்ளி, குண்டுகுறுக்கி ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில், விளைநிலங்களிலும் சிப்காட் அமைக்க அரசு முயன்று வருவதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நல்கான கொத்தபள்ளி கிராமத்திற்கு உட்பட்ட விவசாய நிலங்களை தொழிற்பேட்டை (சிப்காட்) அமைக்கக் கையகப்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும்.

கெலவரப்பள்ளி இடதுபுற கால்வாய் மூலம் பாசனம் பெரும் விவசாய நிலத்தை சூளகிரி தொழிற்பேட்டைக்கு எடுக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.

கெலவரப்பள்ளி பாசன கால்வாய் திட்டத்திற்கு உட்பட்ட முப்போகம் விளைகின்ற விவசாய நிலப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்ய வேண்டும்.

தென்பெண்ணை, ஆயக்கட்டு, விவசாய நிலங்களை தொழிற்பேட்டைக்கு எடுப்பதை ரத்து செய்ய வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை காரணமாக, தற்போது விவசாயிகள் அரசின் விவசாயம் சார்ந்த திட்டங்கள் எதிலும் பங்கு பெற முடியாமல் இருக்கிறார்கள். ஆகையால், உரிய நடவடிக்கைகள் உடனே மேற்கொள்ளப்பட வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனர்.

கிருஷ்ணகிரி முழுவதும் எட்டு சிப்காட்கள் அமைக்கப்படவுள்ளன.

ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, போச்சம்பள்ளி என ஒவ்வொரு சிப்காட் பகுதியில் அரசு 500 ஏக்கர் முதல் 2000 ஏக்கர் நிலங்களை எடுத்துள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, இந்த சிப்காட் பகுதியில் முதலாளிகளின் நிலங்களும் உள்ளடங்கி உள்ளது. பல்வேறு தொழிற்சாலைகள் சார்பாக நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்பேட்டை என வரும்போது முதலாளிகளின் நிலங்களைப் பறிமுதல் செய்யவில்லை.

ஆனால் விவசாயிகளின் நிலங்களை அதுவும் விளைநிலங்களைத் தொழிற்பேட்டைக்கு அரசு எடுத்துக் கொள்கிறது.

இந்த கெலவரப்பள்ளி பாசன கால்வாய் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் செய்து வருகிறார்கள்.

அதாவது முள்ளங்கி, பீட்ரூட், முட்டைகோஸ், கேரட் என விளைவிக்கப்படுகின்றன. இது உள்நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. அதேபோன்று பசுமைக் குடில் அமைத்து ரோஜா சாகுபடி மட்டும் கொய் மலர்கள் விளைகின்றன. இது பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

ஆனால் தற்போது சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகள் மனவேதனை அடைகின்றனர்.

எனவே அரசு உடனடியாக தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

தகவல்
தோழர் ரஞ்சித்,
கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க