அரசியல் சுதந்திரமற்ற அடிமை மோடி!

கை, கால்கள் கட்டப்பட்டதால் உணவு உண்பதற்கோ, கழிவறை பயன்படுத்துவதற்கோ கூட முடியாமல், மனிதாபிமானமற்ற முறையில் இந்தியக் குடிமக்கள் நடத்தப்பட்டுள்ளனர்.

மெரிக்கா அமெரிக்கர்களுக்கே”, “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குவோம்” உள்ளிட்ட இனவெறி-பாசிச முழக்கங்களை முன்வைத்து அமெரிக்காவில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாசிஸ்ட் டிரம்ப், உழைக்கும் மக்களுக்கு எதிராக பல்வேறு பாசிச தாக்குதல்களைத் தொடுத்து வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் ‘சட்டவிரோதமாக’ குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தேர்தல் சமயத்திலேயே பிரச்சாரம் செய்த டிரம்ப் தலைமையிலான பாசிச கும்பல், அமெரிக்காவில் குடியேறியுள்ள பிற நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான உழைக்கும் மக்களை மிகவும் இழிவான முறையில் வெளியேற்றி வருகிறது.

கடந்த பிப்ரவரி 5 அன்று 104 இந்தியர்கள் போர்க் குற்றாளிகளை போல இராணுவ விமானத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்காவிற்கு உழைக்கச் சென்ற இந்தியக் குடிமக்களை அவமானகரமான முறையில் வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே சாதாரண விமானத்தைக் காட்டிலும் பத்து மடங்கு அதிக செலவாகும் இராணுவ விமானத்தின் மூலம் நாடு கடத்தியது பாசிஸ்ட் டிரம்ப் அரசு. கைகள் விலங்கிடப்பட்டு, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு, முகத்தில் முகமூடி அணிவிக்கப்பட்டு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலாக இராணுவ விமானத்தில் கைதிகளைப் போல அழைத்து வரப்பட்டுள்ளனர். கை, கால்கள் கட்டப்பட்டதால் உணவு உண்பதற்கோ, கழிவறை பயன்படுத்துவதற்கோ கூட முடியாமல், மனிதாபிமானமற்ற முறையில் இந்தியக் குடிமக்கள் நடத்தப்பட்டுள்ளனர்.

இந்தியர்கள் இவ்வாறு நடத்தப்பட்ட காணொளிகளும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் பரவி இந்திய மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த மனிதத்தன்மையற்ற அவமானகரமான செயலுக்குப் பலரும் தங்களது கண்டனங்களையும் கடும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இதுகுறித்து வாய்திறக்கவே இல்லை. கடைசியாக வேறுவழியின்றி நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை கைவிலங்கிட்டு ராணுவ விமானத்தில் நாடு கடத்துவது அமெரிக்காவின் சட்டவிதிகள் சம்பந்தப்பட்ட விசயம். இந்தியர்களைச் சட்டவிரோதமாகக் குடியேற்றிய இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று துளியும் மான உணர்ச்சியின்றி பெயரளவிலான இறையாண்மையைக் கூட டிரம்பின் கால்களுக்குக் காணிக்கையாக்கினார். சங்கி கூட்டமும் இக்கருத்தை சமூக வலைத்தளங்களில் வாந்தியெடுத்துவரும் நிலையில், மோடி அரசின் அடிமையாகிப்போன பெரும்பாலான இந்திய ஊடகங்களும் அமெரிக்காவின் சட்டவிதிகளை நமக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றன.


படிக்க: பாசிஸ்ட் டிரம்ப் பதவியேற்பு: கிளர்ந்தெழுந்த அமெரிக்க மக்கள்


ஆனால், கடந்த ஜனவரி மாத இறுதியில் சட்டவிரோத குடியேறிகள் எனக்கூறி கொலம்பியாவின் குடிமக்களை இரண்டு இராணுவ விமானங்களில் கொலம்பியாவிற்கு ஏற்றி அனுப்பியது டிரம்ப் அரசு. ஆனால், கொலம்பிய அரசு இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்களுக்கும் கொலம்பியாவில் தரையிறங்க அனுமதி மறுத்து, அமெரிக்காவிற்கே திருப்பி அனுப்பியது. “கொலம்பிய மக்கள் புலம்பெயர்ந்தவர்கள்தான், ஆனால், அவர்கள் குற்றவாளிகள் அல்ல”, “கொலம்பிய மக்கள் கைவிலங்குடன் அழைத்து வரப்படுவதை அனுமதிக்க முடியாது, அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்த கொலம்பிய அரசு, இரண்டு தனி விமானங்களை அனுப்பி கொலம்பிய மக்களை மரியாதையுடன் அழைத்து வந்தது.

அமெரிக்க இராணுவம் திருப்பி அனுப்பப்பட்ட உடனே, கொலம்பியாவிற்குப் பொருளாதாரத் தடை, கூடுதல் வரி, விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் அரசு மிரட்டல் விடுத்து நடவடிக்கையிலும் இறங்கியது. பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும், அமெரிக்காவைத் தவிர மற்ற அனைத்து உலக நாடுகளுக்கும் கொலம்பியப் பொருட்களை ஏற்றுமதி செய்யப்படும், வரி விதிப்பின் காரணமாக கொலம்பியாவில் அதிக விலையில் விற்பனையாகும் அமெரிக்கப் பொருட்களுக்கு மாற்றாக  உள்நாட்டு உற்பத்தி பெருக்கப்பட வேண்டும், வெளிநாடுகளில் வசிக்கும் கொலம்பிய மக்கள் கொலம்பியப் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் பயன்படுத்தவும் அழைப்பு விடுப்பது என உத்தரவுகளையும் அமெரிக்காவிற்கு மிரட்டலையும் பிறப்பித்தார் கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரோ. இதன் பிறகே உடன்பாடு எட்டப்பட்டு கொலம்பிய மக்கள் மரியாதையுடன் அனுப்பப்பட்டனர்.

ஆனால், இந்தியக் குடிமக்களை அமெரிக்க அரசு இழிவுபடுத்தியதற்காக இந்தியா ஒரு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து 2024 நவம்பர் முதலே ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் கைது செய்யப்பட்டு அமெரிக்கச் சிறைகளில் அடைக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியக் குடிமக்களை மரியாதையுடன் திருப்பி அழைத்து வருவதற்கோ கண்ணியமான முறையில் அவர்கள் அமெரிக்காவிலேயே வாழ்வதற்கோ மோடி அரசு சிறு துரும்பைக் கூட நகர்த்தவில்லை.

தென்னமெரிக்காவைச் சேர்ந்த மிகச் சிறிய நாடான கொலம்பியாவிற்கு இருக்கும் அரசியல் சுதந்திரமும் இறையாண்மையும் இந்தியாவிற்கு இல்லை என்பதையே இது வெளிக்காட்டுகிறது. தற்போது மட்டுமல்ல, இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகிற நாள் முதலே, உலக மேலாதிக்க வல்லரசுகளின் நலனுக்காக காலனியாதிக்க கொள்கைகள் ஏற்றுக்கொண்டு அமல்படுத்துகிற நாடாகவும், அரசியல் சுதந்திரமற்ற நாடாகவும்தான் இந்தியா இருந்து வருகிறது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் உயரதிகாரிகளின் ஆடைகள் அமெரிக்க விமான நிலையத்தில் சோதிக்கப்பட்டது இதற்குச் சான்று.


படிக்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்-மஸ்க் கும்பலின் வெற்றியும் – விளைவுகளும்!


மற்றொருபுறம், தன்னை விஸ்வ குருவாகவும் மூன்றாம் உலக நாடுகளின் குரலாகவும் உக்ரைன்-ரஷ்யா போரை ‘நிறுத்தியவராகவும்’ தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை டிரம்ப் இழிவுபடுத்தியது குறித்து வாய்திறக்காமல் இருந்துவருவதோடு இந்திய மக்களை இழிவுபடுத்திய பாசிஸ்ட் டிரம்பை சந்திப்பதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். அதிலும், இந்த சந்திப்பை ஒட்டி, மின்னணு, இரசாயனம், மருத்துவச் சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட 12 பிரிவுகளில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிச்சலுகை அளிப்பதற்கு மோடி அரசு தயாராகியுள்ளது. மரக்கூழ், டிஷ் ஆண்டனா, மருத்துவ உபகரணங்கள் உட்பட அமெரிக்காவை இந்தியா சார்ந்திருக்கும் பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது இந்தியப் பிரதமர் மோடி ஓர் அரசியல் சுதந்திரமற்ற அடிமை என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. மேலும், மோடியை டிரம்ப் சந்திப்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று மாதங்களாக அமெரிக்காவிலேயே தங்கியிருந்தார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளன.

இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக 7.25 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி இருப்பதாகவும் அதில் 24 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 15) ‘சட்டவிரோதமாக’ குடியேறிய 119 இந்தியர்களுடன் அமெரிக்க விமானம் அமிர்தசரசு சர்வதேச விமான நிலையம் வந்தடைய உள்ளது. மேலும், மற்றொரு விமானம் நாளை வந்துசேர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அவலம் என்னவென்றால்’விஸ்வ குரு இந்தியா’வின் ’56 இன்ச்’ பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே இது நடக்கிறது என்பது தான்.

எனவே, இந்திய மக்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று தொடைநடுங்கி மோடிக்கும் எதிராக இந்தியாவிலும், அமெரிக்க வளர்ச்சிக்காக உழைத்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் மக்களுக்கு அந்நாட்டில் பாதுகாப்பான-கண்ணியமான வாழ்வாதாரம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்று பாசிஸ்ட் டிரம்பிற்கு எதிராக அமெரிக்காவிலும் மக்கள் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். இதற்குச் சர்வதேச உழைக்கும் மக்கள் குரல் கொடுக்க வேண்டும். இதுவே இன்று நம்முன்னுள்ள தீர்வு.


சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க