01.03.2025

இராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை
ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க
டெண்டர் அறிவிப்பு!

தமிழ்நாட்டை சூறையாட அனுமதியோம்!

கண்டன அறிக்கை

மிழ்நாட்டில், இராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் எரிவாயு எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பை செய்துள்ளது ஒன்றிய எரிசக்தி இயக்குனரகம். இந்த அறிவிப்பை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

மத்திய எரிசக்தி இயக்குநரகம் சார்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கு, திறந்தவெளி அனுமதி அடிப்படையில் 10-ஆவது சுற்று ஏலம் விடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதி உட்பட நாடு முழுவதும் 25 வட்டாரங்களில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 986 சதுர கிலோ மீட்டர் ஏலம் விடப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில், சுமார் 9,990 சதுர அடி பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்துத் துறைகளையும் இயற்கை வளங்களையும் அம்பானி – அதானி பாசிச கும்பலுக்கு வாரிக் கொடுப்பதையே மோடி அமித்ஷா பாசிச கும்பல் திட்டங்களாக மேற்கொள்கின்றது.

கூடங்குளம் அணு மின்நிலையம், அணுக்கழிவு மையம், அணுக் கனிம சுரங்க திட்டம், நியுட்ரினோ ஆய்வுத் திட்டம், ஷெல் எரிவாயுத் திட்டம், கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, ஹைட்ரோகார்பன், எண்ணெய் எரிவாயு ஆகிய திட்டங்கள் மூலமாக தமிழ்நாட்டுக் கடற்கரை முழுவதையும் அணு மின்னுற்பத்திக் குவிமையமாக்கி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தமிழ்நாட்டை சுடுகாடாக்குவதே பாசிச மோடி அரசின் நோக்கம்.

ஒருபுறம் மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு போன்ற பண்பாட்டு ரீதியான தாக்குதல்களை தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் பாசிச மோடி அரசு, ஹைட்ரோ கார்பன், எண்ணெய் எரிவாயு போன்ற திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க