மீண்டும் காசாவை ஒடுக்க ஆயத்தமாகும் இஸ்ரேல்

மனிதாபிமான உதவிகளை நிறுத்திய பிறகு, இஸ்ரேல் தற்போது மின்சாரத்தையும் தண்ணீர் விநியோகத்தையும் நிறுத்த முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது.

ஸ்ரேல் – ஹமாஸுக்கான முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. போர்நிறுத்த காலகட்டத்தில் பரஸ்பரம் இருதரப்பினரும் பணயக் கைதிகளை மாற்றிக் கொண்டனர். முதல்கட்ட போர்நிறுத்தம் அமலில் இருக்கும்போதே ஒரு மாதகாலத்திற்கு முன்பாக இரண்டாம்கட்ட போர்நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இதுவரை நடைபெறவில்லை. இந்நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் ஒத்துழைப்பு அளிக்காமல் திடீரென அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும் என நிர்ப்பந்தித்து வருகிறது. மேலும், முதல்கட்ட போர்நிறுத்தம் முடிவிற்கு வந்தவுடனேயே காசாவிற்கு செல்லும் அனைத்து மனிதாபிமான பொருட்களுக்கும் அனுமதி மறுத்து பாலஸ்தீன மக்களை கொன்றொழிக்க இரத்தவெறி பிடித்த இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது.

இஸ்லாமியர்களுக்குப் புனித மாதமான ரம்சான் பண்டிகைக்காகவும் யூதர்களின் பாஸ்கா விடுமுறையையொட்டியும் முதல்கட்ட போர்நிறுத்தத்தை ஏப்ரல் 20 வரை நீட்டிக்க அமெரிக்காவின் மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் புதிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை முன்மொழிந்தார். இதனை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், ஹமாஸ் முதல்கட்ட போர்நிறுத்த நீட்டிப்புக்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

குறிப்பாக, இரண்டாம்கட்ட போர்நிறுத்தத்தில், போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவது; இஸ்ரேல் காசாவிலிருந்து முற்றிலுமாக வெளியேறுவது; மீதமுள்ள பணயக் கைதிகளை விடுதலை செய்வது போன்றவை உத்தரவாதமாக்கப்படும். ஆனால், அமெரிக்காவின் முன்மொழிவில், ஹமாஸ் பணயக் கைதிகளில் பாதி பேரை முதல் நாளில் விடுவிக்க வேண்டும், பதிலுக்கு இஸ்ரேல் யாரையும் விடுவிக்காது. பிறகு, மீதமுள்ளவர்களை நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டும்போது விடுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸிடம் 59 பணயக் கைதிகள்தான் இருப்பதாக நம்பப்படுகிறது. அப்படியிருக்க பாதி பணயக் கைதிகளை முதல் நாளிலே விடுதலை செய்தால் பணயக் கைதிகளின் எண்ணிக்கை குறையும். பேரத்தில் ஹமாஸை பலவீனப்படும். ஹமாஸை ஆயுதமற்ற வகையில் நிராயுதபாணியாக்குவது, அதன் தலைவர்களைக் கொல்வது என்பது அமெரிக்க – இஸ்ரேலின் மறைமுக திட்டமாகும்.

இந்த நயவஞ்சகமான முதல்கட்ட போர்நிறுத்தத்தை நீட்டிக்க வலுயுறுத்திதான் ஹமாஸிற்கு இஸ்ரேல் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதற்குச் சம்மதிக்க மறுத்ததற்குத்தான் காசா மக்களுக்கான உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்காமல் பாலஸ்தீன மக்களைப் பசியால் கொன்று வருகிறது இஸ்ரேல்.


படிக்க: பாலஸ்தீனம்: மக்கள் மருத்துவர் அபு சஃபியாவை சித்திரவதைக்குள்ளாக்கும் இஸ்ரேல்


இஸ்ரேலின் அறிக்கையில், “பணயக்கைதிகளை மாற்றிக்கொள்ளும் முதல்கட்ட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அமெரிக்க சிறப்புத் தூதர் விட்கோஃப் முன்வைத்த முன்மொழிவை ஹமாஸ் ஏற்க மறுத்தது. ஆதலால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் காசா பகுதிக்குள் அனைத்து பொருட்கள் மற்றும் விநியோகங்களும் நிறுத்தப்படும் என பிரதமர் நெதன்யாகு முடிவு செய்துள்ளார். எங்களின் பணயக் கைதிகளை விடுதலை செய்யாமல் போர்நிறுத்தம் சாத்தியமில்லை. ஹமாஸ் தொடர்ந்து மறுத்து வந்தால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களுக்கு இஸ்ரேல் தடை விதித்ததையும் அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்றதையும் ஹமாஸ் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளது. அதன் அறிக்கையில், “இஸ்ரேலின் நடவடிக்கை ஒப்பந்தத்தை மறுப்பதாகவும் இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையைத் தவிர்ப்பதாகவும் உள்ளது. காசாவிற்கு வரும் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி மறுக்கும் நெதன்யாகுவின் முடிவு என்பது மிகவும் இழிவான மிரட்டல் மற்றும் போர்க் குற்றம். இது போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பயங்கரமாக மீறும் செயலாகும். ஆக்கிரமிப்புக்கு எதிராக மத்தியஸ்தர்கள் மற்றும் சர்வதேச சமூகம் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இருபது இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு எதிரான ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேல் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது, இது 100 தியாகிகளை கொன்றழித்தது மற்றும் மனிதாபிமான நெறிமுறைகளை எல்லாம் கேள்விக் குறியாக்கிவிட்டது. காசாவில் மனிதாபிமான பேரழிவுகளை உருவாக்கவுள்ளது. காசா அரசின் ஊடகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 962 போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல்களில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. 15 மாதகால போரில் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் பட்டினியில் வாடினார்கள். மனிதாபிமான உதவிகளுக்குப் பல கட்டுப்பாடுகளை இஸ்ரேல் விதித்த நிலையில் அடுத்த வேலை உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். தற்போது இஸ்ரேலின் இந்த கொடூர முடிவு காசாவில் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

இஸ்ரேலின் முடிவிற்கு அரபு நாடுகளும் பல்வேறு மனிதாபிமான அமைப்புகளும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

காசாவிற்குள் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்திருப்பதை “இஸ்ரேல் பட்டினியைப் போரில் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” என சவுதி அரேபியாவும் எகிப்தும் சாடியிருக்கின்றன.


படிக்க: காசாவில் உறைபனியால் குழந்தைகள் மரணம் – தொடரும் இஸ்ரேலின் படுகொலைகள்!


போர்நிறுத்த ஒப்பந்தத்தையும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும், 4-வது ஜெனிவா ஒப்பந்தத்தையும் அப்பட்டமாக மீறும் செயலாகும்; உணவுப் பொருட்களுக்குத் தடை விதித்திருப்பது, மக்களைப் பட்டினியில் துடிக்கவிடுவது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகிறது; காசாவின் அனைத்து பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேலை உலக நாடுகள் கட்டாயப்படுத்துமாறு கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது.

மனிதாபிமான உதவிகளை நிறுத்திய பிறகு, இஸ்ரேல் தற்போது மின்சாரத்தையும் தண்ணீர் விநியோகத்தையும் நிறுத்த முயன்று வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. இஸ்ரேல் ஹயாம் (Israel Hayom) பத்திரிகை, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் போவதற்கு முன்பாக முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை என்றால், காசாவில் மின்சாரத்தையும் தண்ணீரையும் இஸ்ரேல் நிறுத்தவுள்ளது எனவும் மத்தியஸ்தர்கள் ஹமாஸை இஸ்ரேலின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்க நிர்ப்பந்திக்க சில நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலை நிறுத்துவதற்கு நெதன்யாகு தயாராக இல்லை எனவும் தெரிவித்தது.

அதேநேரத்தில், எரிசக்தித்துறை அமைச்சர் எலி கோகன் காசாவில் மின்சாரத்தை நிறுத்த அமைச்சரவையில் அனுமதி கேட்கத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலின் சேனல் 14 தெரிவித்தது. இஸ்ரேலின் பொதுத்துறை செய்தி ஊடகமான கான் நியூஸ், காசாவிடம் நான்கு மாதங்களுக்கான உணவு இருக்கிறது. அதனால் மின்சாரத்தைத் தயாரிக்கும் எரிபொருள் விநியோகங்களை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்தது. காசா முழுவதிலும் தண்ணீரைத் துண்டிக்கப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தது.

ஒட்டுமொத்தமாக, அமெரிக்க – இஸ்ரேல் இரண்டும் பாலஸ்தீனத்தைச் சிதைத்து வருகிறது. மக்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளைத் தடுத்து நிறுத்தினால் பாலஸ்தீன மக்களின் மன உறுதியைக் குலைத்து விடலாம் என கனவு காண்கிறது. அது ஒருபோதும் நடைபெறாது. காசாவை கட்டியெழுப்பும் ஹமாஸ், பாலஸ்தீன மக்களின் இலட்சிய உணர்வை எந்த சிறுநாய் கூட்டத்தாலும் தடுக்க முடியாது. பாலஸ்தீன மக்களுக்கு நாம் துணைநிற்க வேண்டும். அடிப்படைத் தேவைகளைக் கூட தடை செய்திருப்பது என்பது நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாத செயலாகும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களைக் கட்டியமைப்போம். அதுதான் இரத்தவெறி பிடித்த ஓநாய்களின் பல்லைப் பிடுங்கும்.

பாலஸ்தீனம் மீளும்!


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க