ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக (Eco Sensitive Zone – c) அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மார்ச் 29 ஆம் தேதியன்று, வால்பாறையிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தியுள்ளன.
இந்த போராட்டத்திற்கு வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், கார், ஆட்டோ, லாரி என அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வால்பாறையில் ஜவுளிக் கடைகள், மளிகைக் கடைகள், தேநீர்க்கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் வால்பாறை, டாப்ஸ்லிப் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம் 1479.87 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
இதில் 958 சதுர கி.மீ பரப்பு புலிகளின் வாழ்விடத்தை உள்ளடக்கிய உள்வட்டப்பகுதியாகவும் (Core Zone), மற்ற பகுதிகள் வெளிவட்டப்பகுதியாகவும் (Buffer Zone) உள்ளன.
காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை மலைப்பகுதியில் மட்டும் 63 தனியார் தேயிலைத்தோட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அனைத்து தேயிலைத் தோட்டப் பகுதிகளும், கிராமங்களும், குடியிருப்புகளும் வால்பாறை நகராட்சிக்குள் இடம் பெற்றுள்ளன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அங்கு 70,859 மக்கள் வசித்து வந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரித்துள்ளது.
படிக்க: சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு 2022 : 180 நாடுகளில் இந்தியா கடைசி இடம் !
வால்பாறையை உள்ளடக்கியுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்து, கடந்த ஆண்டு டிசம்பரில் இதற்கான வரைவு அறிவிக்கையை ஒன்றிய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.
அதிலிருந்து 60 நாட்களுக்கு, மக்களிடமிருந்து ஆட்சேபம் மற்றும் ஆலோசனைகள் எனக் கருத்துக் கூற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வரைவு அறிவிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி வால்பாறையில் கடந்த ஜனவரி 7 அன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
***
மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் புரிந்துகொள்ள தற்போது அமைக்கப்படவுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் குறித்து முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் தேசிய சுற்றுச்சூழல் கொள்கையின்படி, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் குறித்து ஆனைமலை புலிகள் காப்பகக் கள இயக்குநர் வெங்கடேஷ் ”பிபிசி தமிழ்”-க்கு அளித்த விளக்கம்.
- புலிகள் காப்பகம், வன உயிரினச் சரணாலயங்களை ஒட்டியுள்ள பகுதிகளின் சூழல் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, 0–10 கி.மீ. தூரத்தை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, சில நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன; சில நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
- தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள், அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகள் என இவை 3 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- சுரங்க பணி, மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலை, பெரிய நீர் மின் திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மற்றபடி விவசாயப் பணிகள், உரம் தெளிப்பது, மருந்து அடிப்பது, கட்டுமானப் பணி, கட்டடச்சீரமைப்பு, குடியிருப்பு பராமரிப்பு, சாலை சீரமைப்பு, போக்குவரத்து என அனைத்துமே தற்போதுள்ள படி ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இருக்கும்.
படிக்க: சூழலியலைச் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகள் | நூல்
இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் நடைமுறைக்கு வந்தால், சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் வால்பாறை நகராட்சியும் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்கிறார், வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஜெபராஜ்.
நூறாண்டுக்கும் மேலாக வால்பாறையில் குடியிருந்து வரும் மக்களையும், வேலைவாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தேயிலைத் தோட்டங்களையும் மொத்தமாக அகற்றுவதற்கான நடவடிக்கை இது என்கிறார் அவர்.
இதுகுறித்து அண்ணா தொழிலாளர் சங்கத்தின் தேயிலைத் தோட்டப்பிரிவு மாநிலத் தலைவர் ஹமீது பேசுகையில், ”மாஞ்சோலையைப் போல, வால்பாறையிலிருந்தும் மொத்தமாக மக்களை வெளியே அனுப்புவதற்கான திட்டம்தான் இந்த சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல அறிவிப்பு. இதை நடைமுறைப்படுத்தினால், தோட்டங்களில் மருந்து அடிக்கவும், குடியிருப்புகளில் சிறு கட்டட பராமரிப்பு மேற்கொள்ளவும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். இதனால் 30 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்களின் வேலை, வாழ்வாதாரம் எல்லாமே பாதிக்கப்படும்” என்றார்.
இயற்கை வளங்கள் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு என்ற போலியான பிம்பத்தை உருவாக்கி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும், மலைப்பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் பழங்குடியின மக்களையும் அங்கிருந்து விரட்டி, கார்ப்பரேட் சுரண்டலுக்கு வழி வகுக்கவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற களத்தில் போராடிக் கொண்டிருக்கும் வால்பாறை மக்களுக்கு ஆதரவுக் குரலை எழுப்ப வேண்டியுள்ளது.
நன்றி: பி.பி.சி தமிழ்
குழலி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram