கேள்விக் குறியாகும் டேன் டீ தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை!

வரலாறு நெடுகிலும், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக, மலையகத் தமிழர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இடம் பெயர்த்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

0

டந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு அரசு நீலகிரி மற்றும் வால்பாறையில் உள்ள அரசு தேயிலை தோட்ட (TANTEA) நிர்வாகத்திற்கு சொந்தமான 2152 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க முடிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையானது மறு குடியமர்த்தப்பட்ட தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி விடும்நிலையில் உள்ளது.

இலங்கையில், 1830-களில் ஆங்கிலேயர்களால் காபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. கிட்டத்தட்ட 2.75 லட்சம் ஏக்கர்களில் காபி விளைவிக்கப்பட்டது. ஆனால் 1870-களில் காபி இலைகள் அதிகமாக நோயினால் தாக்கப்பட்டு காபி விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆங்கிலேயர்கள் 1880-களில் தேயிலை தோட்டங்களை உருவாக்கத் தொடங்கினர். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக தேயிலை தோட்டங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அங்கு அவர்களுக்கு இலங்கை குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட்டது.

ஆனால் 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சிலோன் குடியுரிமைச் சட்டத்தின் வழியாக மலையக தோட்ட தொழிலாளர் குடும்பங்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் இலங்கை அரசால் பறித்துக் கொள்ளப்பட்டது. பின்னர், 1964 ஆம் ஆண்டு இந்தியா – இலங்கை இடையே சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில், சுமார் 5.25 லட்சம் தமிழர்களை மீண்டும் ஏற்பதாகவும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை மற்றும் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்துவதாகவும் இந்திய அரசு உத்தரவாதம் அளித்தது.


படிக்க: பசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் !


அவ்வாறு இந்தியாவிற்கு திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்ட தமிழர்கள் வால்பாறை, நீலகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மறு குடியமர்த்தப்பட்டனர். அரசு ஆவணங்களின்படி, 4082 தோட்ட தமிழ் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் டேன் டீ நிறுவனத்தை நம்பி இருக்கிறது. அரசின் கூற்றுப்படி 3569 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 220 தற்காலிக தொழிலாளர்கள் டேன் டீ-க்கு சொந்தமான தொழிற்சாலைகள் மற்றும் தோட்டங்களில் பணிபுரிகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், டேன் டீ நிர்வாகம் வனத்துறையிடம் இருந்து குத்தகைக்கு எடுத்திருந்த நிலத்தில் 4059 ஹெக்டேர் நிலத்தை வனத்துறையிடமே திருப்பி ஒப்படைத்து இருக்கிறது. வனத்துறை உடனான குத்தகை ஒப்பந்தத்தின்படி மூன்று ஆண்டுகள் வரை சாகுபடிக்கு பயன்படுத்தப்படாத நிலத்தை வனத்துறைக்கே திருப்பி ஒப்படைத்து விட வேண்டும். தற்போது சாகுபடி வெறும் 2400 ஏக்கர்களிலேயே நடைபெற்று வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக டேன் டீ நிர்வாகம் நட்டத்தை சந்தித்து வருவதாகவும், அதனால்தான் சாகுபடிக்கு பயன்படுத்தப்படாத நிலத்தை வனத்துறையிடமே ஒப்படைப்பதாகவும் டேன் டீ-யின் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் கூறுகிறார்.

நட்டத்தை காரணம் காட்டி நடுவட்டம், வால்பாறை (தொழிற்சாலையுடன் சேர்த்து), குன்னூர், கோத்தகிரி, பாண்டியர், சேரங்கோடு, நெல்லியாளம், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2152 ஹெக்டேர் நிலங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. இதில் வால்பாறையில் மிகப்பெரிய தோட்டம் உள்ளது (1,069.308 ஹெக்டேர்). இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5.98 கோடி டேன் டீ நிர்வாகத்திற்கு மிச்சமாகும் என்று அரசாணை கூறுகிறது.

திமுக அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இதுகுறித்துப் பேசுகையில், “டேன் டீ நிறுவனத்தை எப்படி லாபகரமாக இயக்குவது என்பது குறித்து விரிவான ஆய்வு நடத்தி பரிந்துரைகளைப் பெற உள்ளோம்” என்று கூறினார். மேலும், “ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், குடியிருப்புகளில் இருந்து காலி செய்யப்படுவதானது புதிய தொழிலாளர்களுக்கு வீடு வழங்குவதற்காகத் தான்” என்று கூறினார். ஆனால் உண்மை என்னவென்றால், தோட்டங்களில் உள்ள பாதி வீடுகள் ஏற்கனவே காலியாகத் தான் உள்ளன.


படிக்க: மலையகத் தோட்டங்களை தனியார் பிடியிலிருந்து மீட்போம் | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி


தற்போது இந்த தேயிலை தோட்டங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுவதால், இங்கு பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் வேறு தோட்டங்கள் ஏதாவது ஒன்றில் மாநில அரசால் குடியமர்த்தப்படுவர்.

வரலாறு நெடுகிலும், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக, மலையகத் தமிழர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இடம் பெயர்த்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கொத்தடிமைகளாக இடம்பெயர்த்தபட்டனர்; சிறிமாவோ – சாஸ்திரி உடன்படிக்கைக்குப் பிறகு இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு இடம்பெயர்த்தப்பட்டனர். தற்போது இந்த தேயிலைத் தோட்டங்கள் மூடப்படுவதால் வேறு இடங்களுக்கு இடம்பெயர்த்தப்பட உள்ளனர்.

தமிழக அரசு தொடர்ந்து வஞ்சிக்கும் அளவிற்கு என்ன தவறு செய்தார்கள் மலையக தமிழர்கள், பிழைப்புக்காக இலங்கைக்கும் தமிழகத்திற்கும் அகதிகளாக அலைந்து திரிவதைத்தவிர !

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க