தோட்டங்களைத் தனியார் கம்பனிகளின் பிடியிலிருந்து மீட்கவேண்டும் ! – பு.ஜ.மா.லெ.க.-வின் மலையக பிராந்திய செயலாளர் தோழர் சுரேன் கோரிக்கை.

தோட்டங்களை அதாவது தோட்டக் குடியிருப்பு (லயன்அறைகள், தனி வீடுகள்) அதனோடு இணைந்த சுற்றுப்புறம் – விவசாய காணிகள், பாதைகள், மைதானம், வழிபாட்டிடம், இயற்கை வளங்கள் – ஆகியவற்றை தனியார் கம்பனிகளின் பிடியிலிருந்து மீட்டு முழுமையாக அரச நிர்வாகத்திற்குள் உள்வாங்க வேண்டும், அதற்காக நாம் அனைவரும் போராட வேண்டும். எமது பிரதிநிதிகள் முதலில் இப் பிரச்சினையை விளங்கிக் கொள்ள வேண்டும். பின் அதற்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையக பிராந்திய செயலாளரும் உக்குவளை பிரதேச சபை உறுப்பினருமான தோழர் டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மாத்தளையில் எல்கடுவ பிளாண்டேஷன் நிர்வாகத்தில் இயங்கும் எல்கடுவ தோட்டம் செம்புவத்த, ரோட்டலா, குளிராட்டி, நடுத்தோட்டம் ஆகிய ஐந்து பிரிவுகளை உள்ளடக்கிய தோட்டம் ஆகும்.

இதில் செம்புவத்த பிரிவில் குளம் சார்ந்த அழகிய பிரதேசம் காணப்படுவதால் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக காணப்படுகிறது. பருவ காலங்களில் மாதம் ஒன்றில் பல கோடிகளை வருமானமாக பார்க்கும் இடமாக திகழ்கிறது. இங்கு சுமார் 12 வருடங்களுக்கு மேல் ஓர் தோட்ட அதிகாரியே பதவியில் இருந்து வருகின்றார்.

தொழிலாளர் மத்தியில் முன்னணியில் இருக்கும் சிலருக்கு கடந்த காலங்களில் சலுகைகளை வழங்கி தனக்கு எதிராக யாரும் கிளம்பி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக இவர் செய்த தந்திரங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுற்றுலா பிரதேசம் என்பதால் பாதை ஓரங்களில் சிறு வியாபார கடைகளை மக்கள் நடத்தி வருகின்றனர். இதில் பல கடைகள் பிரதேச சபை அனுமதியோடு இடம்பெறுகின்றன. ஆனால் கடைகளை நடத்த முடியாது என்றும் தனது அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என்றும் அதிகாரம் புரிபவராக தோட்ட அதிகாரி காணப்படுகின்றார்.

செம்புவத்த பிரிவில் கன்னியம்மா ஊற்று கிணறு ஒன்று காணப்படுகின்றது. சுமார் 150 குடும்பங்கள் நீர்த் தேவையை பூர்த்தி செய்கின்ற வளமாக காணப்பட அதனை, நீர் தயாரிக்கும் தொழிற்சாலை ஆக மாற்ற தோட்ட அதிகாரி தந்திரமான முறையில் முயற்சி எடுத்து இருக்கின்றார்.

படிக்க :
மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் !
♦ இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !

அப்பிரதேசத்தில் இளைஞர்களில் சிலர் முச்சக்கர வண்டி ஓட்டி பிழைப்பு நடத்துகின்றனர். வாகனத் தரிப்பிடத்திற்கு அனுமதிக்க முடியாது அதனை அகற்ற வேண்டும் என மிரட்டி அழுத்தம் கொடுத்திருக்கின்றார்.

இந் நடைமுறை பிரச்சனையிலிருந்து நாம் ஒன்றை நாட்டிற்கு முன்வைக்கலாம் என முயற்சி செய்கின்றோம்.

பிரதான பாதையிலிருந்து தோட்டத்திற்கு பிரவேசிக்கும் பாதையான காங்கிரீட் மண்பாதை அரசாங்க நிறுவனமான உள்ளுராட்சிக்குள் வருகின்றதா? தோட்ட நிர்வாகத்திற்குள் வருகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

தோழர் சுரேன்

அதற்கு அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 30-ம் இலக்க பிரதேச சபை சட்டம் என்ன சொல்கின்றது எனப் பார்த்தால் ”பிரதேச சபையின் ஒரு தொகுதி நிதியை இனி தோட்டத்துக்கு கொண்டு செல்லலாம், பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட கடமை பொறுப்புகளுக்கு அமைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்.” என்று சொல்கின்றது.

நடைமுறையில் பிரதேச சபை பிரதான வீதியில் இருந்து தோட்டத்திற்கு பிரவேசிக்கும் வீதி ஒன்றை காங்கிரிட் இடுகின்றது என கொள்வோம், அதன்பின் அப்பாதை பராமரிப்பு பிரதேசசபையின் பொறுப்பாகும். பாதையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பிரதேச சபைக்கு சொந்தமானதாக கருதப்பட வேண்டும்.

அவ்வாறான பாதையோரத்தில் பிரதேச சபையின் அனுமதியோடு மக்கள் கடைகளை நடத்தலாம். அதனை தடுப்பதற்கு தோட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை என்பதே நியாயமானதாகும்.

ஆனால் இந்த நடைமுறை உதாரணம் மாபெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. பொறுப்பும் பராமரிப்பும் உள்ளுராட்சி நிறுவனத்திற்கா அல்லது தோட்ட நிர்வாகத்திற்கா என்பதே கேள்வியாகும்.

பிரதேசத்தின் நீர்வளம், இயற்கை வளங்கள் பிரதேச செயலாளருக்கும் பிரதேச சபைக்கும் பொறுப்பு என இருக்கையில் தோட்ட குடியிருப்புக்குள் காணப்படும், மக்கள் பயன்படுத்தும் ஊற்று கிணறு தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவது பொருத்தமானதாக இருக்குமா?

படிக்க :
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! புதுவை அரங்க கூட்டம்
♦ “உன் உயிருக்கு இந்தியாவில் மதிப்பில்லை” – ஒரே வாரத்தில் 17 தொழிலாளர்கள் மரணம் !

இளைஞர்கள் தமது தேவை மற்றும் வாழ்வாதாரத்திற்காக முச்சக்கர வண்டி ஓடுகின்றனர். வருமானம் வாய்ப்பு வரும் இடங்களில் அதனை கொண்டு பணம் தேடுகின்றனர்.

முச்சக்கரவண்டி தரிப்பிடம் பிரதேச சபையில் பதியப்பட வேண்டும். தோட்டங்களில் வண்டி தரிப்பிடத்தை பதிவு செய்ய தோட்ட அதிகாரியின் அனுமதி கடிதத்தை பிரதேச சபை எதிர்பார்த்தால் சரியானதாக இருக்குமா?

இது செம்புவத்தை டிவிஷனில் மட்டும் உள்ள பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த மலையகம் எங்கும் இவ்வாறான சிக்கலான நடைமுறை காணப்படுகின்றது.

ஏனைய இடங்களின் உதாரணங்களும் படிப்பினைகளையும் முக்கியம் பெறுகின்றது.

மலையக மக்கள் எனப்படுபவர்கள் 200 வருடங்களாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் கூட்டம் ஆவர். கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம், மலையக தேசிய இனத்தின் இருப்பு இன்றுவரை சவால்மிக்கதாகவே இருந்து வருகின்றது.

மேற்படி உதாரணங்கள் மூலம் தோட்டக் குடியிருப்புகளில் வாழ்பவர்கள் தோட்டங்களில் நிம்மதியாக வாழ முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பது உறுதியாகிறது. மொத்தத்தில் தோட்டங்களில் மாட்டுப்பட்டி கட்டுவதற்கு கூட தோட்ட அதிகாரியிடம் அனுமதி வாங்கும் நடைமுறையை மாற்றியமைக்க நாம் போராட வேண்டும், எனவும் குறிப்பிட்டார்.

தகவல் : புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி முகநூல் பக்கத்தில் இருந்து.

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க