மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! என்ற தலைப்பின் கீழ் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்க கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வந்திருந்த மாணவர்கள் – இளைஞர்கள், பேராசிரியர்களை பு.மா.இ.மு தோழர் பரத் வரவேற்றுப் பேசினார்.

அதன் பின் தோழர் ஏ. மோகன் அவர்கள் இக்கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். அவர் தனது தலைமையுரையில்: “இந்த தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா என்பது பல தேசிய இனங்களின் பல மொழி, கலச்சாரம் கொண்ட நாடு. இங்கு இரண்டு மொழிகளில் மட்டும் அறிக்கை வெளிடுவதும்; கிராமபுற ஏழை எளிய  மக்களிடம் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கக் கூடாது என்ற நோக்கத்திலும்தான் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இதனை நாம் முறியடிக்க வேண்டும்.” என பேசினார்.

அவருக்கு பின் கருத்துரையாற்றிய மாணவி பூங்குழலி அவர்கள் “மோடி அவர்கள் பதவி ஏற்ற உடனே அவசரமாக வெளியிட்டது, இந்த அறிக்கைதான். இந்தக் கல்விக் கொள்கை மக்களுக்கானதா? 484 பக்கம் கொண்ட இந்த கல்வி அறிக்கை பிரதிநிதித்துவப் படுத்தப்படாத மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண் கல்வியை பற்றி எதுவும் பேசவில்லை.

எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நான் படித்த பள்ளி வகுப்பறையில் மொத்த மாணவர்கள் 54 பேர் அதில் இளங்கலை பட்டம் படிக்க சென்றவர்கள் 14 பேர், முதுகலை பட்டம் படிக்க சென்றவர்கள் 3 பேர்தான். மீதம் உள்ளவர்கள் எதாவது ஒரு வேலைக்கு செல்கிறார்கள். கல்வி என்பது இன்னமும் முழுவதும் போய் சேராமல் உள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் இன்னமும் உள்ளது. நிர்மலாதேவி போன்ற பேராசிரியர்கள் பெண் கல்வியை அழிக்கிறார்கள்.

படிக்க:
“உன் உயிருக்கு இந்தியாவில் மதிப்பில்லை” – ஒரே வாரத்தில் 17 தொழிலாளர்கள் மரணம் !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் ! – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்

இந்த நிலையில் மோடியின் கல்விக் கொள்கை பெண்களுக்கான உயர் கல்வியைப் பற்றியும், மாற்று திறனாளிகள் பற்றி எதுவும் பேசவில்லை. இவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும்விதமாக உள்ளது இந்த அறிக்கை. இதற்கு எதிராக தனித்தனியாக போராட முடியாது. அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்துதான் போராட வேண்டும்.” என பேசினார்.

அவருக்குப் பின் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க செயலர், திரு ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசுகையில் : “அரசு பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. காரணம் தரம் இல்லை, ஆசிரியர்கள் சரியில்லை என்ற ஒற்றை குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. நிஜம் என்னவென்றால் 1 கி.மீ அளவில் ஆரம்பப் பள்ளி, 3 கி.மீ அளவில் நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ அளவில் உயர்நிலைப் பள்ளி, 8 கி.மீ அளவில் மேல்நிலைப் பள்ளி இருக்க வேண்டும் என்பதை, காமராஜர் ஆட்சி காலத்தில் கல்வித்துறை இயக்குனராக இருந்த மேட்டூர் சுந்தர வடிவேலு என்பவர் பரிந்துரைத்தார்.

திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுல பள்ளிக்கூடம் என்றெல்லாம் இருந்தது. ஆனால், எல்லா மக்களுக்கும் சமமான கல்வி கொடுக்கும் வகையில் இருந்ததா? அரசுப் பள்ளி உருவான பிறகுதான் சாதி, பாலினம் கடந்து அது சாத்தியமானது. அரசு பள்ளி உள்ள இடங்களில் 1 கி.மீ-க்குள் தனியார் பள்ளிகளுக்கு கண்மூடித்தனமாக அனுமதி கொடுத்துவிட்டு, அரசுப் பள்ளியின் குறைகளைச் சரிசெய்யாமல் விட்டது அரசுதான்.

கிராம சபையைக் கூட்டி அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அரசு பள்ளிகளின் அவசியத்தைப் பற்றிப் பேசி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கிறோம். அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்! மேலும் எழுத்தாளர் தமிழ் செல்வன் அவர்கள் இந்த வரைவு அறிக்கை என்பது “குழந்தை கல்விக்கான மரண சாசனம்” என்று சொல்கிறார். இது அரசு பள்ளிகளுக்கான மரண சாசனமும் கூட என்று கூறுவதற்கு ஏற்பதான் இந்த கல்விக் கொள்கை இருக்கிறது .

கோத்தாரி கல்விக் குழு 1968-ல் வெளியிட்ட அறிக்கை பத்து பக்கம் கூட இல்லை மிக அருமையான கல்விக் கொள்கை. இரண்டு முக்கியமான விஷயம் கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்தது. பள்ளிகளை தனியார் நடத்த அனுமதிக்கலாம் என்பது கொள்கை அளவில் இல்லை. 1986-ல் உருவான கல்வி கொள்கையில் (ராஜீவ் காந்தி ஆட்சியில்) மேலே சொன்ன இரண்டு அம்சங்களும் ஒழிக்கப்பட்டன.

தனியார்மய – தாராளமய கொள்கை அடிப்படையில் கல்வி கொடுப்பது அரசின் வேலை இல்லை. வசதி உள்ளவனுக்கு கல்வி, மருத்துவம் என்றானது. 1992-ல் (நரசிம்மராவ் ஆட்சியில்) கல்வியை வணிகமயமாக்கலாம் என காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்று மோடி அதை மேலும் தீவிரமாக்கும் வகையில் தனியார் முதலாளிகளுக்காகவும், இந்து மதவெறியர்களுக்காகவும் மேலும் திருத்தியுள்ளார். “மோடியின் இந்த கல்விக் கொள்கையை குப்பையில் போட வேண்டும்” என கல்வியாளர் எஸ். எஸ். இராஜகோபாலன் கூறியுள்ளார். அதனை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.” என தனது உரையில் கூறினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவரைத் தொடர்ந்து புதுவை பல்கலைக்கழக பேராசிரியர். ஜெரொம் அவர்கள் அவரது உரையில் : “இந்த புதிய கல்வி கொள்கை என்பது பா.ஜ.க என்ன நினைக்கிறார்களோ அதை நிறைவேற்ற பார்க்கிறார்கள். நம் சமூகத்தில் நம்முடைய வாழ்க்கையில் கல்வி என்பது பள்ளிக் கூடம், கல்லூரி இவையெல்லாம் இல்லாமல் இருந்தால் என்னவாக இருந்திருப்போம்?

நாம் என்ன வேலை செய்திருப்போம் ? நமது அப்பா – அம்மா என்ன வேலை செய்திருப்பார்கள் ? கல்வி என்பது நமது சமூகத்தில் எவ்வளவு அவசியமானது ? கல்வி கிடைப்பதற்கு முன் நமக்கு என்ன அடையாளம் என்றால் சாதிகள்தான். ஆனால் நவீன காலத்தில் எல்லா மக்களுக்கும் ஒரு பொதுவான அடையாளம். கல்விக்கேற்ற,  தகுதிக்கு ஏற்ற வேலை என்று மாறியுள்ளது. சாதி சார்ந்த ஒடுக்குமுறையில் இருந்தும், சாதி சார்ந்த தொழில் முறையில் இருந்தும் தப்பிப்பதற்காக என்றுதான் நாம் இந்த கல்விமுறையை பார்க்க முடியும்.

இப்போது கூட நூற்றுக்கு பத்து சதவிதம் பேர் மட்டும்தான் உயர்கல்விக்குப் போகிறார்கள். மற்றவர்களுக்கும் போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எந்த திறனையும் வளர்த்துக் கொள்ளலாம் என்பது மனித இயல்பு.” என்று கூறினார்.

மேலும், மாணவர்கள் கல்வி உதவித் தொகை தொடர்பான சிக்கல்களையும், கடந்த காலங்களில் அவருடைய வகுப்பில் கூலி வேலை பார்க்கும் பிள்ளைகள் படித்து வந்ததையும், கட்டண உயர்வால் ஏழை மாணவர்களின் கல்வி பறிபோனதையும்  பகிர்ந்து கொண்டார். நாம் எந்த துறையில் வளர்ந்து வர முடியும் என்பதை தேர்வு செய்வதற்கு பக்குவப்படாமல் உள்ளார்கள் என்றால், நாம் என்னமாதிரியான கல்வித் திட்டத்தை வைத்துள்ளோம் என்பதை பார்க்க வேண்டும். மூன்றாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு என்பது மீண்டும் குலத்தொழிலுக்கு தள்ளுவதுதான் என்பதை மிக எதார்த்தமாக விளக்கிப் பேசி தொடர்ந்து நமது போராட்டம்தான் இதற்கான விடையைத் தரும் எனக் கூறினார்.

படிக்க:
அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !
♦ தமிழகத்தை நாசமாக்காதே – விழுப்புரம் கருத்தரங்கம் | செய்தி – படங்கள்

அவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் . இளங்கோ அவர்கள் : “நான் கலந்து கொண்ட கூட்டங்களியே இது தனித்துவம் வாய்ந்த கூட்டம் என்று கருதுகிறேன். உன்மையில் இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் இந்த கூட்டத்தை ரசிக்க வேண்டும், ஏனென்றால் நமக்கு மேலே உள்ளவர்கள் எதிர்ப்புகளே இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது இங்கு ஒரு மேடை போட்டு தனது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யும் கருத்தாளர்கள் மத்தியில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். நாளை எங்களை அமர்த்தி நீங்கள் பேசவேண்டும் என்றால் உங்களுக்கு தேடல் இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் தேடல், சிரிப்பு, அழுகை உள்ளது. எதற்காக என்றால் தங்கள் சொந்த வாழ்க்கைகாக. ஆனால் சொந்த வாழ்க்கையை விட்டு பொது நலனுக்காக கோபப்பட வேண்டும். ஆனால் நமது நாட்டின் சாபக் கேடு என்னவென்றால் எது நடந்தாலும் நமக்கென்ன என்ற கூட்டம் தான் 99 சதவிதம் பேர். ஆனால் ஒவ்வொரு பிரச்சினையைப் பற்றியும் பேசி விவாதிக்க வேண்டும்.

காஷ்மீர் செல்வம் கொழிக்கும் இடம். அதானி, அம்பானி அங்கு சொத்து வாங்க வேண்டும் எனத் துடிக்கிறார்கள். அதே போலத்தான் பன்னாட்டு முதலாளிகளுக்கு கல்வியைத் திறந்து விடுவதுதான் இந்த கல்விக் கொள்கை. நாம் இதற்கு ஒரு பெயர் வைக்கலாம் என இதற்கு முன் பேசிய கூட்டத்தில் சொன்னேன், அது என்ன பெயர் என்றால் ஏகலைவனின் புதிய கட்டைவிரல்.

ஒடுக்கப்பட்டவர்களின் கல்வியறிவை பறித்துக் கொள்கின்ற வேலையை செய்கிறது இந்த கல்வி கொள்கை. மூவாயிரம் ஆண்டுகள் ஏமாந்தோம். இனி ஒரு நாளும் ஏமாற மாட்டோம். இந்த புதிய கல்வி கொள்கையில் சமுதாயம் என்ற வார்த்தைக்கு என்ன விளக்கம் என்பதை கடைசிவரை சொல்லவில்லை. அது என்ன சமுதாயம் என்றால் இனி கல்வியை RSS பார்த்துக் கொள்ளும் என்பதுதான். கல்வியை தனது வசப்படுத்திக் கொள்ளும். இந்த வரைவு அறிக்கையில் இடஒதுக்கீடு என்பதே இல்லை.” இவ்வாறு ஏராளமான விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவருக்கு அடுத்தபடியாக பேராசிரியர் ப.ரவிக்குமார் பேசுகையில் : “இந்த கல்விக் கொள்கையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் இந்த புதிய கல்வி கொள்கை என்பது கார்ப்பரேட்டுகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் உகந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

தாய் மொழிவழிக் கல்வி என்பதை முழுவதுமாக மறுக்கவில்லை. ஆனால் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி பேசும் மாநிலத்திற்கு வேறொரு நீதியையும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதியையும் முன்வைக்கிறது. மழலையர் கல்வியில் மட்டும் பென்கள் கல்வியை பற்றி பேசப்படும் வரைவு அறிக்கை உயர்கல்வியில் அது பற்றி பேசப்படவில்லை. தரம் தரம் என்று பேசப்படும் பொழுது நாம் சந்தேகப்பட வேண்டும். இந்த கல்விக் கொள்கையை பேசவேண்டியவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்தான்.” என தனது கருத்தை பதிவு செய்தார்.

இறுதியாக புமாஇமு மாநில ஒருங்கிணைப்பளர் தோழர் . கணேசன் அவர்கள் “இந்த கல்வி கொள்கையை ஏன் நிராகரிக்க வேண்டும் என்றால் ஒரு வார்த்தையில் சொல்ல முடியும், தலைப்பிலேயே தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை என்று இருப்பதாலேயே நிராகரிக்கலாம். ஏனென்றால் இங்கு பல தேசிய இனங்கள் உள்ளன, அனைத்துக்கும் சேர்த்து ஒரே கல்விக் கொள்கை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். தமிழகம் – புதுவை இரண்டு மாநிலங்கள் என்றாலும் சமூக அடிப்படையில் அரசியல், பொருளாதார அடிப்படையில் இணைந்ததாக இருந்து வருகிறது.

நாம் இங்கு கல்விக் கொள்கையை பொருத்தவரை தமிழகத்துக்கும், புதுவைக்கும் ஒரு மாதிரியாக இருக்கலாம் என பேசலாம். ஆனால் நமக்கும் உத்திரபிரதேசத்துக்கும் எவ்வாறு ஒரே கல்விக் கொள்கையை பேச இயலும். மொழியால், இனத்தால், கலச்சாரத்தால் இணைந்தவர்களா..?

நாடு முழுவதும் உள்ள கல்வியளர்கள் பேசுகிறார்கள் இதை நிராகரிக்க வேண்டும் என்று. ஆனால் துக்ளக் குரு மூர்த்தி என்ன சொல்கிறார், எடப்பாடி என்ன சொல்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார்.  இந்த 484 பக்க வரைவு அறிக்கையில் முதலில் தொடங்கி கடைசி பக்கம்வரை இரண்டு கொள்கைகள் பட்டவர்த்தனமாக சொல்லப்படுகிறது. ஒன்று இந்துத்துவா கொள்கை, மற்றொன்று கார்ப்பரேட் கொள்கை.

ஏற்கெனவே நிலவும் கல்விக் கொள்கையையே நாம் விரும்பவில்லை. நாங்கள் அதை மாற்றவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் நீ சொல்லும் கல்வி கொள்கை வடிவத்தில் இல்லை. ஏன் பின்லாந்து கல்வி கொள்கை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாதா? அதை அரசு நினைத்தால் கொண்டு வரமுடியும். ஆனால் மோடி அரசு கொண்டுவருமா? வராது, ஏனென்றால் அனைவருக்குமான சமத்துவத்தை ஆர்.எஸ்.எஸ் என்றும் ஏற்காது.

இந்த கல்வி கொள்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டியதுதானே, அவ்வாறு வெளியிடமாட்டார்கள் ஏனென்றால், இதன் மீது யாரும் கருத்து சொல்லக் கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.

பின்லாந்து கல்வியை பட்டியலிட்டுக் காட்டும்போது முதல் பத்து இடங்களுக்குள் வருகிறது. காரணம் அரசாங்கம் அதிக நிதி ஒதுக்குகிறது, தாய்மொழி வழியில் கல்வியை அறிவியல் பூர்வமாக கற்றுக் கொடுக்கிறது. ஆனால் இங்கு கார்ப்பரேட் முதலாளிக்கு அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டும் என்பதுதான் இவர்கள் விருப்பம். இந்த கல்விக் கொள்கை என்பது கார்ப்பரேட் – காவி இரண்டும் இணைந்த புதியவகை ஹைபிரிட் வீரிய ஒட்டுரகம்.” என விரிவாக பேசினார்.

கூட்டத்தின் கடைசியாக தோழர் அரிஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார். அரங்க கூட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள் மாற்று கட்சி நண்பர்கள் என சுமார் 120 பேர் கலந்துகொண்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, 
புதுச்சேரி. தொடர்புக்கு : 81244 12013

1 மறுமொழி

  1. மக்களிடம் பொய்களை சொல்லி போராட்டங்கள் மூலம் பல தொழிற்சாலைகளை மூடி அவர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தாச்சு அடுத்து நல்ல கல்வி கிடைத்து எங்கே மக்கள் முன்னேறி விட போகிறார்களோ என்று அதிலும் பிரமாணம், கார்பொரேட் சதி, ஹிந்துத்வம் என்று பொய்களை சொல்லி கல்வி முன்னேற்றத்தையும் தடுத்து விட்டால் ஒரே அடியாக மக்களின் வாழ்க்கையை நாசம் செய்து விடலாமே அதற்காக தான் இந்த மாதிரியான கூட்டங்கள்.

    கம்யூனிஸ்ட்கள் என்றாலே முன்னேற்றத்தை தடுப்பவர்கள் சாதாரண மக்களுக்கு தீமைகளை கொண்டு வருபவர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க