கேரளாவை உலுக்கும் ஆஷா தொழிலாளர்களின் போராட்டம்!

”எங்கள் வலிகள் மற்றும் பிரச்சினைகளுக்கு கண்களை மூடிக்கொள்ளும் அமைச்சர்களுக்கு எதிரானதே எங்கள் போராட்டம். ஒரு நாளைக்கு வெறும் ரூ.232 சம்பளத்தில் நாங்கள் எப்படி வாழ்வது?”

இந்தியாவின் பொதுச் சுகாதாரத்துறையின் முதுகெலும்பாக உள்ளவர்கள் ஆஷா சுகாதார பணியாளர்கள். இவர்கள் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் (National Rural Health Mission – NRHM) பின்தங்கிய சமூக மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்குவதற்காக 2005-ஆம் ஆண்டு இந்திய அரசால் நியமிக்கப்பட்டார்கள். இவர்களின் வேலை கிராமப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

இந்நிலையில், கேரளாவின் ஆஷா சுகாதார பணியாளர்கள் பல்வேறு வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 10 முதல் 57 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “கேரளா ஆஷா சுகாதார பணியாளர்கள் சங்க”த்தின் (Kerala ASHA Health Workers Association – KAHWA) கீழ் இப்போராட்டம் நடந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது, பேரணி செல்வது என  பல்வேறு போராட்டங்களை ஆஷா பெண் தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர்.

62 வயதான ஆஷா பணியாளர்களுக்கு எந்தவித ஓய்வூதிய பலன்களும் வழங்காமல் கட்டாய ஒய்வுதரும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்; மேற்குவங்கத்தைப் போல கேரள அரசும் ஆஷா பணியாளர்களுக்கு ஓய்வூதிய சலுகையாக ஐந்து லட்சம் வழங்க வேண்டும்; ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும்; தினக்கூலியை 699-ஆக உயர்த்த வேண்டும்; கெளரவ ஊதியம் மற்றும் ஊக்கத் தொகைகளை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்டு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆஷா பெண் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

போராட்டத்தின் 50-வது நாளான மார்ச் 31-ஆம் தேதி அன்று கேரள தலைமைச் செயலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களின் முடியை வெட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தங்களின் தலையை மொட்டை அடித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டத்தின் அடையாளமாக வெட்டப்பட்ட முடியை தங்களின் கைகளில் உயர்த்தி பிடித்துக்கொண்டு பரபரப்பான எம்.ஜி. சாலை வழியாகப் பெண்கள் பேரணிச் சென்றனர். அதன்பிறகு இப்போராட்டம் ஆலப்புழா மற்றும் அங்கமாலியிலும் பரவியது. அங்கு சில ஆண்களும் ஆஷா பணியாளர்களுக்கு ஆதரவாக தங்களின் தலையை மொட்டை அடித்துக்கொண்டனர்.


படிக்க: ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !


போராட்டத்தில் பங்கேற்ற பணியாளர் கூறுகையில் “வெட்டப்படுவது எங்கள் உயிர்கள்தான். எங்கள் வலிகள் மற்றும் பிரச்சினைகளுக்கு கண்களை மூடிக்கொள்ளும் அமைச்சர்களுக்கு எதிரானதே எங்கள் போராட்டம். ஒரு நாளைக்கு வெறும் ரூ.232 சம்பளத்தில் நாங்கள் எப்படி வாழ்வது?” என்று கோபத்துடன் அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.

விரக்தியின் வெளிப்பாடாக தலைமுடியை வெட்டிக் கொண்டதாகக் கூறிய போராட்டத் தலைவரான எஸ். மினி, “எங்கள் கோரிக்கைகள் எதுவும் பச்சாதாபத்துடன் பரிசீலிக்கப்படவில்லை. இது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல. இது ஒரு வலுவான நோக்கத்திற்காக நடத்தப்பட்ட போராட்டம். இந்தப் போராட்டத்தை மாநிலம் முழுவதும் எடுத்துச் செல்வோம்” என்று தெரிவித்தார்.

ஆனால், கேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.ஐ(எம்) முதல்வர் பினராயி விஜயன், கேரளா ஆஷா சுகாதார ஊழியர்களின் 50 நாள் வேலைநிறுத்தம் ஒரு சில ஊழியர்களின் தூண்டுதலின் பெயரில் நடக்கிறது என்றும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தற்போதைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் ஆஷா பணியாளர்களின் தன்னெழுச்சியான போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் சீர்குலைக்கும் வகையிலும் பேசியுள்ளார். ஆனால், ஆஷா சுகாதார பணியாளர்கள் சங்கமானது தங்களது சங்கம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தது அல்ல என்றும் தங்களது போராட்டம் அனைத்து ஆஷா ஊழியர்களுக்கானது என்றும் அரசின் சீர்குலைவு வேலைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

ஆஷா தொழிலாளர்களுடன் ஏற்கெனவே நடந்த இரண்டு பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2 அன்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் ஆஷா தொழிலாளர்களிடையே மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் ஆஷா பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து பரிந்துரை வழங்குவதற்கு குழு அமைக்கப்படும் என்கிற அரசின் நயவஞ்சக முடிவை ஆஷா பணியாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.


படிக்க: கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !


இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய கேரளா ஆஷா பணியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் எஸ். மினி, “குழு அமைக்க வேண்டும் என்கிற இந்த முன்மொழிவு இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (INTUC) மாநில தலைவர் ஆர். சந்திரசேகரனிடமிருந்து வந்தது. மேலும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் அரசின் முடிவை ஏற்க எங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால் நாங்கள் அழுத்தத்திற்கு அடிபணியவில்லை. அந்தத் திட்டத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மதிப்பூதியத்தை தற்போதைய ரூ.7,000-த்திலிருந்து ரூ.21,000 ஆக படிப்படியாக உயர்த்தலாம் என்றும், உடனடியாக 3,000 உயர்த்தலாம் என்றும் நாங்கள் பரிந்துரைத்திருந்தோம். இருப்பினும் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை” என்று போராட்ட உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

அரசுடனான சமரச பேச்சுவார்த்தைகளில் பலியாகாமல் தங்களின் கோரிக்கைகளுக்காக உறுதியுடன் போராடும் கேரளா ஆஷா சுகாதார பணியாளர்களின் போராட்டத்திற்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். இந்தியா முழுவதும் பெண் தொழிலாளர்களின் போராட்டம் வளர்ச்சியடைந்துவரும் நிலையில், கேரள ஆஷா பணியாளர்கள் அதில் முக்கியமான போராட்டமாகும்.  இதற்குத் துணை நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க