பெண்கள் பொது வாழ்க்கைக்கு வரவேண்டும்! | மகா அமிர்தா

சமூகத்தில் சரிபாதியாக இருக்கக்கூடியவர்கள் பெண்கள். பெண்கள் பங்களிப்பு இன்றி எந்தவொரு மாற்றமும் சமூகத்தில் நிகழ்வதில்லை. அது ரஷ்யப் புரட்சியாக இருந்தாலும் சரி, சீனப் புரட்சியாக இருந்தாலும் சரி.

ரு பெண் தன்னை அரசியல் படுத்திக் கொள்வது அத்தனை சுலபமில்லை. பெண்கள் அமைப்புக்குள் வருவதும். அரசியலுக்கு வருவதும், தலைமைப் பொறுப்புக்கு வருவதும் எளிதல்ல. அது மிகப்பெரிய போராட்டம், வலி.

அதிலும் அரசியல் சார்ந்த களப் போராட்டங்கள், எதிர்ப்புகள், போஸ்டர் ஒட்டுவது, துண்டு அறிக்கை விநியோகம், கைதாகி சிறைக்குச் செல்வதென பெண்களின் செயல்பாடுகள் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படியான போராட்டங்களையும், வலிகளையும் கடந்து கைதாகி சிறைக்கு சென்று, இன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளராகவும், மாநிலப் பொருளாளராகவும் இரண்டு பதவிகளில் கோலோச்சும் மகா அமிர்தாவிடம் அவரின் அரசியல் வாழ்க்கை குறித்து பேசியதில்…

“சித்தாந்தத்தை சித்தாந்தங்கள் மூலமாக வீழ்த்த முடியுமே தவிர வெறும் சீர்திருத்தங்களால் வீழ்த்த முடியாது என்கிற புரிதவோடு, மக்கள் அதிகாரக் கழகத்தில், முழுநேரக்களப்பணி செய்து வரும் நான், அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்து 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டேன்” எனப் புன்னகைத்தவர், “எனது குடும்பத்திற்கு பெரிய அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. சாதாரண ஒரு குடும்பத்தில் மகாலெட்சுமி என்ற பெயரோடு கடைக்குட்டி பெண்ணாய், செல்லமாக வளர்க்கப்பட்ட பெண் நான். பிற்போக்குச் சிந்தனைகள் கொண்ட சாதாரண மத்திய தர வர்க்க குடும்பம் என்னுது.

பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு அமைந்த ஆசிரியர் ஒருவர், முற்போக்குச் சிந்தனை உள்ளவராகவும், எளிமையாக அணுகக்கூடியவராகவும் இருந்தார். இதனால் எப்போதும் ஆசிரியரின் வீட்டிலேயே நான் இருக்கத் தொடங்கினேன். பாடத்தைத் தாண்டி, அரசியல், சினிமா, பொது வாழ்க்கை என எல்லாவற்றையும் மாணவர்களிடம் அவர் பேசுவார். வீட்டிலும் மாணவர்களுக்கு இலவசமாகப் பாடங்களை சொல்லித் தருவார். இதனால் எனக்கு அவர் பிரியத்திற்குரிய ஆசிரியராக மாறிப்போனார்.

ஆசிரியரின் உடன் பிறந்த சகோதரி ஒருவர் கம்யூனிஸ்ட் இயக்க செயல்பாடுகளில் இருந்ததால், அந்த இயக்கத்தை தோக்கி நானும் என்னை நகர்த்திக்கொள்வதற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அவர் எனக்கு இருந்தார். ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னவரும் அவர் தான். அவர் மூலமாகவே இயக்கத் தோழர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. தொடர்ந்து புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற புத்தகங்களை படிக்கும் வாய்ப்புகளும் அமைந்தன.

பிஎஸ்லி மேதஸ், அதைத் தொடர்ந்து எம்.ஏ ஜர்னலிஸம் முடித்து, பிரபல தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணியாற்றிய நிலையில், தோழர்களோடு இணைத்து இயக்கம் சார்ந்த வேலைகளை வீட்டுக்குத் தெரியாமலே செய்து கொண்டிருந்தேன். என்னை அரசியல்படுத்திக் கொள்வதற்கான நகர்வுகள் ஒவ்வொன்றுமே போராட்டமாகவும், பிரச்னையாகவும் வீட்டில் இருந்தது.

பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லக்கூடாது என்கிற சித்தனை உள்ள பெற்றோர்களிடத்தில், அரசியல் சிந்தனையோடு என்னை வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபமாக எனக்கு இல்லைதான். முதல் சில நாட்கள் வீட்டுக்குத் தெரியாமல் கூட்டம், மாநாடு, போராட்டம் என சென்றுவரத் தொடங்கினேன். வீட்டுக்கு தெரியவந்த போது மிகப்பெரிய பிரளயமே வெடித்தது. இயக்கம் சார்ந்து நான் படிக்கும் புத்தகங்கனை எரித்து விடுவேன் என்கிற ரீதியில் வீட்டில் எதிர்ப்புகளும் இருந்தது. அப்போது அகில இந்திய இளைஞர்கள் கூட்டமைப்பான AIYFல் இருந்தேன்.

அமைப்பு ரீதியாக பல்வேறு வேலைகளை முழு மூச்சாக இறங்கி செய்து கொண்டிருந்த நிலையில், தோழர்கள் மூலம், மக்கள் கலை இலக்கிய கழகத்தை (மகஇக) சேர்த்த தோழர் முனியசாமி எனக்கு அறிமுகமாக, சாதி சடங்கு, சம்பிரதாயம் இல்லாத தாலி மறுப்புத் திருமணம் செய்து, இருவரும் இணையர்களாக இல்வாழ்க்கையில் இணைந்தோம். திருமணத்திற்குப் பிறகே சுதந்திரமாகவும் தீவிரமாகவும் என்னை அரசியல்படுத்திக் கொண்டேன். திருமணத்திற்குப் பிறகான எனது செயல்பாடுகள், எனது இணையரோடு சேர்ந்து மக்கள் கலை இலக்கிய கழகத்தோடு இருந்தது.

இதில் நான் செயல்படும் மக்கள் அதிகாரக் கழகம் என்பது சமூக மாற்றத்திற்கானது என்றாலும், இதற்கென சில கொள்கைகளும், இலக்குகளும் உண்டு. புரட்சிதான் இதன் நோக்கம். ஏற்றத்தாழ்வான நம் சமூகத்தில் ஒடுக்குபவர்களும், ஒடுக்கப்படுபவர்களும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்கள் ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் நின்று, குறிப்பிட்ட மக்கள் பிரச்னைகள் சார்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதும், விளைவுகளை ஏற்படுத்துவதும் என அவர்களுக்கான போராட்டங்களை, மக்களோடு இணைத்தே கட்டி அமைக்கிறோம் ஒவ்வொரு அரசியல், காலத்திலும் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பதையும் பார்த்து, மாற்றத்திற்குரிய வேலைகளையும், நூற்றுக்கணக்கான செயல்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

இதில் பெண்களாகவே இருந்தாலும், ஆண்களுக்கு இணையாக அனைத்து வேலைகளையும் செய்வது, மக்களை களத்தில் இறங்கி சந்திப்பது மக்களோடு மக்களாக நிற்பது, மக்கள் கூடும் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்வது, இரவெல்லாம் சாலைகளில் இறங்கி போஸ்டர் ஒட்டுவது. துண்டு அறிக்கை விதியோகம், பிரசுரங்களை விநியோகிப்பது, சுவர் எழுத்து, இயக்கபாடல்கள், போராட்டக் களங்கள் எனத் தொடர்ந்து செயல்படுகிறோம். எந்தப் பிரச்னையை கையில் எடுக்கிறோமோ அதற்காக முழு வீச்சில் களம் காண்பதுடன், மக்களை அணி திரட்டுவது, போராட்டங்களைத் தொடர்த்து முன்னெடுப்பதென வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டே இருக்கும்.

உதாரணத்திற்கு அதிமுக ஆட்சியில் விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தில், வீட்டுக்கு ஒரு பெண் அல்லது இரண்டு பெண்கள் தங்கள் அப்பாவை, கணவரை அல்லது மகனை குடிப்பழக்கத்திற்கு இழந்தவர்களாக, விதவை கிராமம் என்ற அடைமொழியில் அழைக்கப்படுவதை, ஊடகம் வாயிலாக அறித்து, அங்கே சென்று பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களை சந்தித்ததுடன், அவர்களையும் அழைத்து வந்து “மூடு டாஸ்மாக்கை மூடு” போராட்டத்தையும், மாநாட்டை யும் நடத்தியதில், மக்கள் பிரசனையாக அது மாறியது. பாதிக்கப்பட்ட பெண்களே சாலைகளில் இறங்கி சாராயக் கடைகளை உடைக்கத் தொடங்கினர். மக்கள் அதிகாரம் என்றால் சாராயக் கடைக்கு எதிராக

போராடுபவர்கள் என்று மக்கள் மனதில் இந்நிகழ்வு பதித்ததுடன், ஒருசில சாராயக் கடைகள் அரசால் உடனடியாக இழுத்து மூடப்பட்டன. தொடர்ந்து விவசாயிகளுக்கான போராட்டத்திலும் களத்தில் இறங்கிப் போராடவும், மாநாடுகளை நடத்தவும் செய்தோம்.

சாதி ரீதியாக இங்கு பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், மத ரீதியாக சமீபத்தில் நிகழ்ந்த திருப்பரங்குன்றம் பிரச்னையில் மக்கள் அதிகாரக் கழகம் பல்வேறு ஜனநாயக சக்திகளை இணைத்து முழு வீச்சில் களத்தில் இறங்கி செயல்பட்டது. இதற்கென பல்வேறு போராட்டங்களை கட்டமைத்து, ஆர்ப்பாட்டங்களையும் நிகழ்த்தி மனு கொடுத்தோம். வழக்கும் தொடுத்திருக்கிறோம். வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது.

சமூகத்தில் சரிபாதியாக இருக்கக்கூடியவர்கள் பெண்கள். பெண்கள் பங்களிப்பு இன்றி எந்தவொரு மாற்றமும் சமூகத்தில் நிகழ்வதில்லை. அது ரஷ்யப் புரட்சியாக இருந்தாலும் சரி, சீனப் புரட்சியாக இருந்தாலும் சரி. வரலாற்றில் கடந்த காலத்தில் சமூக மாற்றத்தில் என்று எதை எடுத்துப் பார்த்தாலும் முக்கிய நிகழ்வுகளில் பெண்களின் பங்களிப்பு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள், விவசாயப் போராட்டங்கள், முல்லைப் பெரியாறு பிரச்னை, கூடங்குளம் பிரச்னை, மீனவர் போராட்டம் என பல்வேறு போராட்டங்களையும் எடுத்துப் பார்த்தால், உண்ணாவிரதம் இருப்பதில் தொடங்கி, நீண்ட போராட்டங்களில் களத்தில் நின்று பங்கேற்றது வரை, பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது.

சமூக மாற்றத்தில்தான் பெண் விடுதலை சாத்தியமாகும். அதிலும் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய உழைக்கும் பெண்கள், சமூக மாற்றத்திற்கான வேலைகளில் இயக்கம் சார்ந்து பணியாற்றுவதுடன், தங்களை அரசியல்படுத்திக்கொள்வதும், பொது வாழ்க்கைக்கு வருவதும் முக்கியத் துவமானது” என்ற கருத்துக்களை முன் வைத்து, உழைப்பாளர் தின வாழ்த்தை பதிவு செய்து விடைபெற்றார்.

– மகேஸ்வரி நாகராஜன்

நன்றி: குங்குமம் தோழி
(மே 1 – 15, 2025 இதழில் வெளிவந்த கட்டுரை)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க