ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!

சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

சுக்மா மாவட்டத்தில் துணை இராணுவப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்கள்

நாட்டில் நக்சலிசம் 2026-ஆம் ஆண்டு மார்ச் 21-ஆம் தேதிக்குள் ஒழிக்கப்படும் என்பதை நான் அவையில் பொறுப்புடன் கூறுகிறேன்” கடந்த மார்ச் 21-ஆம் தேதி மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய வார்த்தைகள் இவை.

நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்களையும் கனிமவளக் கொள்கைக்கு எதிராக போராடும் மாவோயிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்களையும் ஈவிரக்கமின்றி, கொடூரமாக நரவேட்டையாடி வருகிறது பாசிச மோடி அரசு. சத்தீஸ்கரின் பஸ்தர், ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம், மகாராஷ்டிராவின் கட்சிரோலி உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் மோடி அரசின் இத்தாக்குதலுக்கு இரையாகி வருகின்றனர்.

குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 டிசம்பரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தப் பிறகு, “ஆபரேஷன் ககர்” (Operation Kagar) என்ற பாசிச திட்டத்தின் மூலம் படுகொலை செய்யப்படும் பழங்குடி மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. “தெற்காசிய பயங்கரவாத போர்டல்” (South Asia Terrorism Portal) என்ற இணையதளத்தின் தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் 235 மாவோயிஸ்ட் தோழர்களும், 2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 140 தோழர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 2023-ஆம் ஆண்டில் 23 தோழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி அரசு நூற்றுக்கணக்கான மவோயிஸ்டுகளை கொன்று குவித்துள்ளது. உண்மையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்புள்ளி விவரங்களை விட அதிகமாகவே இருக்கும்.

அதேசமயம், மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் அப்பாவி பழங்குடியின மக்களையும் கேள்விகிடமற்ற வகையில் பாசிச மோடி அரசு கொன்று குவித்து வருகிறது. “சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து 140-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் மாவோயிஸ்டுகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்” என்று “ப்ரண்ட்லைன்” (Frontline) இதழுக்கு அளித்த பேட்டியில் காந்திய ஆர்வலரான ஹிமான்ஷு குமார் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் உள்நாட்டுப் போர்

சத்தீஸ்கர் மாநிலம் கனிம வளங்கள் நிறைந்த மாநிலமாகும். இந்தியாவின் இரும்புத் தாதுவில் 38 சதவிகிதம், அலுமினியத் தாதுவில் 20 சதவிகிதம், நிலக்கரியில் 17 சதவிகிதம் சத்தீஸ்கரில் உள்ளது. மேலும், சமீபத்தில் லித்தியம் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களும் சத்தீஸ்கரில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இந்த கனிமங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு அங்கு வாழும் பழங்குடி மக்களும், கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடும் மாவோயிஸ்டுகளும் தடைக்கல்லாக உள்ளனர். எனவே, இவர்கள் மீது ஒடுக்குமுறை செலுத்தி கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே ஆபரேஷன் ககர் என்ற சதித்திட்டத்தை ஜனவரி 2024-இல் இருந்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் சத்தீஸ்கரில் செயல்படுத்தி வருகிறது.

ககர் திட்டத்தின்படி, சத்தீஸ்கரில் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட துணை இராணுவப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இப்படைகள் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், செயற்கைக்கோள்கள் மூலம் பழங்குடி மக்களின் சிறு நடவடிக்கைகளைக் கூட கண்காணித்து அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றன. பழங்குடி மக்களை ஈவிரக்கமின்றி அழித்து வருகின்றன. பசுமையான காடுகள் பாசிச கும்பலின் நரவேட்டையால் சிவந்து போயிருக்கின்றன. துப்பாக்கி மற்றும் குண்டு வெடிச் சத்தங்கள் நாள்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இத்திட்டத்தினால், சொந்த நாட்டு பழங்குடி மக்களை கொல்லும் கூலிப்படைகளாக துணை இராணுவப் படைகள் மாற்றப்பட்டுள்ளன. வெறிபிடித்த நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை அள்ளிவீசுவதைப் போல, மாவோயிஸ்ட் தோழரையோ அல்லது ஏதேனும் ஒரு பழங்குடி நபரையோ மாவோயிஸ்ட் என்று கூறி துணை இராணுவப் படை கொன்றால், அப்படைக்கு 2 முதல் 25 லட்சம் ரூபாய் பணத்தை பா.ஜ.க. அரசு அள்ளிவீசி வருகிறது. இதன்விளைவாக, அப்பாவி பழங்குடி பெண்களை துணை இராணுவப் படைகள் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொன்றுவிட்டு மாவோயிஸ்ட் என்று கணக்கு காட்டும் கொடூரங்களும் பஸ்தரில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பழங்குடி மக்களை மலைகளில் விரட்டியடிப்பதற்கு, பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்முறையை ஒரு ஆயுதமாக துணை இராணுவப் படைகள் பயன்படுத்துகின்றன.

மேலும், ககர் திட்டத்தின்கீழ் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளன. பஸ்தரில் மட்டும் 182 இடங்களில் தற்காலிக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவ முகாம்கள் நேத்ரா 3, பாரத் ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களுடன் மக்களைத் தொடர்ந்து கண்காணிக்கின்றன. மக்களின் சிறு நடவடிக்கைகளைக் கூட கண்காணித்து புகைப்படங்கள் எடுக்கின்றன. மக்களிடையேயான உரையாடல்கள், தொலைபேசி அழைப்புகள் கூட பதிவு செய்யப்படுகின்றன. அதாவது பா.ஜ.க. அரசானது எதிரி நாட்டுப் படைகளை கண்காணிப்பதைப் போல பழங்குடி மக்களை கண்காணிக்கிறது.

அதேபோல, பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேல் பயன்படுத்தும் வெடிபொருட்களை சுமந்து செல்லும் ஹெரான் என்ற ஆளில்லா வான்வழி வாகனங்களை இப்பகுதிகளில் மோடி அரசு பயன்படுத்துகிறது. ஏப்ரல் 7, 2023 அன்று பிஜாப்பூர் மாவட்டத்தின் மோர்கெமெட்டா மலைகளில் அமைந்துள்ள நான்கு கிராமங்களில் ட்ரோன்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இவ்வாறு, போரில் அந்நிய நாட்டு படைகள் மீது குண்டுகளை வீசுவதைப் போல, சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

மேலும், இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இராணுவ முகாம்களை ஒருங்கிணைந்த மேம்பாட்டு மையங்களாக (Integrated Development Centres) மாற்றும் முயற்சியிலும் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த மையங்களில் பழங்குடி மக்களுக்கான குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படையான கட்டமைப்பு வசதிகளை உள்ளடக்கிய இராணுவ முகாம்கள் ஏற்படுத்தப்படும் என்று மோடி அரசு விளம்பரம் செய்கிறது. மாவோயிஸ்ட் அபாயத்தினால் பழங்குடி மக்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியவில்லை, அதனாலேயே ஒருங்கிணைந்த மேம்பாட்டு மையங்களை உருவாக்குவதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால், பழங்குடி மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் அடைத்து வைத்து அவர்கள் மீது நிரந்தர ஒடுக்குமுறையை செலுத்தவே மோடி அரசு இந்த மையங்களை உருவாக்கி வருகிறது.

இத்தகைய இராணுவமயமாக்க நடவடிக்கைகள் மூலம், சுரங்க நடவடிக்கைகளுக்காக பழங்குடி மக்களிடமிருந்து அவர்களின் பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு, அம்மக்கள் தாங்கள் வாழும் பகுதிகளிலேயே அகதிகளாக மாற்றப்படுவார்கள்.

மேலும், மோடி அரசின் பழங்குடியின மக்கள் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பா.ஜ.க. சார்பு ஊடகங்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளின் ஊடகங்கள் மற்றும் நடுநிலை ஊடகங்கள் என்று கூறிக்கொள்பவை கூட செய்திகளை வெளியிடுவதில்லை. இதன்மூலம், இந்த ஊடகங்கள் கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு துணைபோகின்றன. மாறாக, சமூக அக்கறையுள்ள சில ஊடகங்கள் மட்டுமே இச்செய்திகளை உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன.

அம்பானி – அதானிகளின்
கனிம வளக் கொள்ளைக்கான போர்

சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மக்கள் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஹஸ்தியோ அரந்த் காடுகளில் அதானி நிறுவனத்தால் இயக்கப்பட்டு வரும் பர்சா கிழக்கு மற்றும் காந்த பாசன் நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சத்தீஸ்கர் வனத்துறை பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அளித்த அறிக்கையின்படியே, 2024-ஆம் ஆண்டில் ஹஸ்தியோ அரந்த் காடுகளில் உள்ள 81,866 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால், உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகம் என்று சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக போராடும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சுரங்க விரிவாக்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் மீது கொடிய ஒடுக்குமுறைகளை செலுத்தியே விரிவாக்க பணிகளை சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும், சத்தீஸ்கரில் தன்னுடைய ஆக்டோபஸ் கரங்கள் விரிவடையும் வகையில் அதானி குழுமமானது பல துறைகளில் முதலீடு செய்து வருகிறது. சான்றாக, கடந்த ஜனவரி 12-ஆம் தேதி சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாயை அவரது இல்லத்தில் சந்தித்த அதானி, ராய்ப்பூர், கோர்பா, ராய்கரில் உள்ள தன்னுடைய அனல் மின்சார உற்பத்தி ஆலைகளை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.60,000 கோடி முதலீடு செய்வதாகவும், சிமெண்ட் ஆலைகளின் மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்காக ரூ.5,000 கோடி முதலீடு செய்வதாகவும் அறிவித்திருக்கிறார்.

அதேபோல, சத்தீஸ்கரில் சமீபமாக லித்தியம், சுண்ணாம்புக் கல், இரும்புத் தாது, பாக்சைட், தங்கம், நிக்கல்-குரோமியம், கிராஃபைட் உள்ளிட்ட தனிமங்கள் புதைந்திருக்கும் இடங்களைக் கண்டறிந்து ஏலம் விடுவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், நாட்டிலேயே முதல் லித்தியம் சுரங்கம் அமைப்பதற்கான அனுமதியை சத்தீஸ்கர் அரசு வழங்கியிருக்கிறது. சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் உள்ள கட்கோரா லித்தியம் தொகுதியில் சுரங்கம் அமைக்க கொல்கத்தாவை தளமாகக் கொண்ட மைக்கி சவுத் மைனிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. இப்பகுதியில் 250 ஹெக்டேர் பரப்பளவில் லித்தியம் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கனிம வளச் சுரண்டலுக்கு எதிராகப் போராடும் பழங்குடி மக்கள், அமைப்புகள் மீது பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்தியே சத்தீஸ்கர் அரசானது கனிம வளச் சுரண்டலை நிகழ்த்தி வருகிறது. ஹந்தியோ அரந்த் காடுகளை அழித்து நிலக்கரி சுரங்களை அமைப்பதற்கு எதிராக “ஹஸ்தியோ அரந்த் பச்சாவ் அந்தோலன்” என்ற அமைப்பின் தலைமையில் போராடிவரும் சல்ஹி, ஹரிஹர்பூர், காட்பரா, ஃபதேபூர் ஆகிய கிராம மக்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறைகளை செலுத்தி வருகிறது. பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் “மூலவாசி பச்சான் அபியான்” என்ற அமைப்பை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி சட்டவிரோத அமைப்பு என்று தடை செய்துள்ளது.

ஆகவே, இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.க. அரசானது சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது உறுதியாகிறது.

மோடி அரசே,
பழங்குடிகள் மீதான போரை நிறுத்து
என முழங்குவோம்!

சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீது அரசின் தாக்குதல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதால், மார்ச் 28 அன்று மாவோயிஸ்ட் கட்சி, “அரசு மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதாகவும், புதிய இராணுவ முகாம்களை நிறுவுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும்” கடிதம் வெளியிட்டிருந்தது. ஆனால், மாநில அரசானது மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்காமல், அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசின் மறுவாழ்வுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு சரணடைய வேண்டும் என்று தனக்கே உரிய பாசிசத் திமிருடன் பதிலளித்துள்ளது. இதன்மூலம், பழங்குடியின மக்கள் மீது உள்நாட்டுப் போரை தொடுத்து கனிம வளங்களை சூறையாட வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது தெளிவாகிறது.

ஆனால், சத்தீஸ்கர் மலைகளிலிருந்து பழங்குடி மக்கள் விரட்டியடிக்கப்பட்டு கனிம வளங்கள் சூறையாடப்படுவது அம்மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. தற்போது சத்தீஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் நடக்கும் இக்கனிமவளக் கொள்ளை நாளை நாடுமுழுவதும் விரிவடையும்.

ஏற்கெனவே, கனிம வளக் கொள்ளைக்காக மணிப்பூரில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் தூண்டப்பட்ட இனக்கலவரம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட தமிழ்நாட்டின் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு மக்கள் எதிர்ப்பினால் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதன் பின்னணியிலும் லித்தியம் உள்ளிட்ட அரிய வகைத் தனிமங்களை கொள்ளையடிப்பதற்கான சதித்திட்டம் உள்ளது.

ஆகவே, சத்தீஸ்கரின் கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக ஆபரேஷன் ககர் என்ற பாசிச இராணுவ சர்வாதிகாரத் திட்டமானது மாவோயிச பீதியூட்டி அமல்படுத்தப்படுகிறது என்றால், நாட்டின் பிற மாநிலங்களில் அந்தந்த மாநில சூழலுக்கேற்ப இக்கனிம வள சூறையாடலுக்கான திட்டம் அரங்கேற்றப்படும்.

எனவே, கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடி மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் பாசிச பயங்கரவாதத் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டியது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் கடமையாகும்.

அதேசமயம், பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறிக்கொள்கின்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பழங்குடி மக்கள் மீதான தாக்குதலைப் பற்றி நாடாளுமன்றத்திலோ பத்திரிகையாளர்கள் சந்திப்பிலோ கூட பேச மறுக்கின்றனர். இதன் மூலம் பழங்குடி மக்கள் மீதான பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு மறைமுகமாக துணைபோகின்றன. தங்களுடைய கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையிலிருந்தே இவ்வாறு செயல்பட்டு வருகின்றன.

ஆகவே, பாசிச மோடி அரசின் பழங்குடி மக்கள் மீதான இந்த உள்நாட்டுப் போருக்கு எதிராக புரட்சிகர, ஜனநாயக சக்திகள் நாடு முழுவதும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டங்கள் மூலம் பழங்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மாவோயிஸ்டுகளுடன் அமைதி பேச்சுவார்த்தைக்குச் செல்ல பாசிச மோடி அரசை நிர்பந்திக்க வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – மே 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க