சத்தீஸ்கர் மாநிலம், ரைகார் மாவட்டத்தில் உள்ள முடாகான் மற்றும் சரைடோலா கிராமத்தில், ஜூன் 26 மற்றும் 27 ஆகிய இரண்டே நாட்களில், கூடி நின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் ஐந்தாயிரம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. மக்களின் எதிர்ப்பை சமாளிக்க 2,000 எண்ணிக்கையில் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. வனத்துறை அதிகாரிகள், போலீசு மற்றும் இங்கு நிலக்கரி சுரங்கத்தை அமைத்து இயக்க இருக்கும் ”அதானி பவர்” (Adani Power) நிறுவனத்தைச் சேர்ந்த ஆட்கள் என அனைவருமாக மொத்த கிராமத்தையும் சூழ்ந்து நிற்க அவர்கள் அழைத்து வந்த கூலி தொழிலாளர்கள் தானியங்கி ரம்பத்தால் மரங்களை அறுத்துத் தள்ளினர்.
ஜூன் 26 அன்று காலை இந்த முடாகான் கிராமப் பகுதியில் காடு அழிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து குரல் எழுப்பிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வித்யாதி சிடார் மற்றும் சமூக ஆர்வலரான எழுத்தாளர் ரின்ச்சின் உட்பட அந்த கிராமங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், சூழலியலாளர்கள் என்று ஏழு பேரை போலீசு சட்டவிரோதமாகக் கைது செய்து போலீஸ் நிலைய கொட்டடியில் அடைத்து வைத்தது. பின்னர் அன்று இரவில் தான் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கரே பால்மா சிடார் – செக்டார் ll (Gare Palma Sector II) என்று அழைக்கப்படும் நிலக்கரி பிராந்தியத்தில் 65.5 கோடி மெட்ரிக் டன் அளவுக்கு நிலக்கரி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக திகிலி ராம்பூர், கொஞ்சேமுறா, சாரை டோலா, முடா கான் உள்ளிட்ட 14 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அங்குள்ள 6,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. அந்த நிலங்களில் உள்ள மொத்த மரங்களும் வெட்டப்பட உள்ளன.
அந்த 6,000 ஏக்கர் நிலத்தில் 500 ஏக்கர் மட்டுமே அரசுக்குச் சொந்தமான அடர்ந்த வனப்பகுதி நிலமாகும். மீதமுள்ளவை அந்தந்த கிராமங்களுக்குச் சொந்தமான சமூக நலக் காடுகள். அவை கிராம ஊராட்சிகளுக்குச் சொந்தமான நிலங்கள் ஆகும். மேலும் இந்த சமூக நலக் காடுகள் என்பன ஆதிவாசி கிராம மக்களின் உரிமைகள் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டிருக்கும் பகுதிகளாகும். தங்களின் வாழ்வாதாரத்துக்கான பொருட்களைச் சேகரிப்பதற்கும் கால்நடை வளர்ப்புக்கான மேய்ச்சல் நிலங்களாகப் பயன்படுத்துவதற்கும் மக்களுக்குரிய உரிமையை வன உரிமை பாதுகாப்பு சட்டம் 2006 அங்கீகரிக்கிறது. எனினும் எதையும் மதிக்காமல் அந்நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது மாநில அரசும் அதானி பவர் நிறுவனமும்.
இந்த கரே பால்மா சிடார் – செக்டார் ll எனும் நிலக்கரி பிராந்தியத்தில் ஏற்கெனவே ஆறு நிலக்கரி சுரங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன. இன்னும் நான்கு சுரங்கங்கள் தற்பொழுது கட்டுமானத்தில் இருக்கின்றன. மகாராஷ்டிரா மாநில அரசின் மின் உற்பத்தி நிறுவனத்தின் (Maharashtra State Power Generation Company Limited – MAHAGENCO) அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரித் தேவைக்காகவே சத்தீஸ்கரின் ரைகார் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படுகின்றது. சுரங்கம் அமைப்பதின் முதற்கட்டப் பணியாகவே இந்த இரு கிராமங்களிலும் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
இவ்வளவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் கண்முன்னே அராஜகமாக, வன்முறையாக நடந்தேறி இருக்கிறது. இந்த அராஜகங்களைச் சகித்துக் கொள்ள முடியாத சில பெண்கள் அப்பொழுதே ஒன்று கூடி புதிய மரக்கன்றுகளை நட்டு அந்த அராஜகத்துக்கு தங்கள் எதிர்ப்புணர்வை வெளிக்காட்டினர் என்கிறார் அப்பகுதியில் இயங்கிவரும் நீதி மற்றும் சமத்துவத்துக்கான அமைப்பை (Chhattisgarh Association for Justice and Equality – CAJE) சேர்ந்த ஸ்ரேயா கேமானி என்பவர்.
படிக்க: கனிமவளக் கொள்ளைக்காக பழங்குடிகள் அமைப்பைத் தடை செய்த சத்தீஸ்கர் அரசு!
இப்பகுதியிலுள்ள 14 கிராமங்களில் மொத்தம் 1,700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடும்பத்துக்கு ஆறு பேர் என்று கணக்கிட்டாலும் ஒரு லட்சம் பேர் அளவில் அங்கு மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் அனைவரும் முற்றாக காலி செய்தாக வேண்டும் என்பதே அரசின் நிபந்தனை. ஆனால் இன்று வரையிலும் மக்கள் அத்திட்டங்களை ஏற்கவில்லை.
பல ஆண்டுகளாக அதானி பவர் நிறுவனம் அமைக்கவிருக்கும் இந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்தை எதிர்த்து மக்கள் தங்களது உணர்வுகளை அரசுக்கு உணர்த்தும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். அத்துடன் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்திலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்குகளும் தொடுத்துள்ளனர்.
இந்த நிலக்கரிச் சுரங்க பகுதி 65.5 கோடி மெட்ரிக் கண்கள் நிலக்கரியை கொண்டிருப்பதனால் 1,000 மெகாவாட் திறன் கொண்ட சந்திரபூர், 1,980 மெகாவாட் திறன் கொண்ட கொராடி, மற்றும் 1,000 மெகாவாட் திறன் கொண்ட பர்லி ஆகிய மூன்று அனல் மின்னுற்பத்தி நிலையங்களின் எரிபொருள் தேவையை இந்த நிலக்கரிச் சுரங்கம் நிறைவு செய்ய முடியும் என்பதால் விளைவுகளைப்பற்றி அக்கறைப்படாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்த மூர்க்கத்தனத்துடன் முன்னெடுக்கின்றன அரசும் அதானி பவர் நிறுவனமும்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடிய திறந்த வெளி சுரங்கம் மற்றும் பெரும் விபத்துகளுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் நிறைந்த நிலத்தடி சுரங்கம் என்று இரண்டு வகையான சுரங்கங்களும் அமைக்கப்பட உள்ளன. இந்த சுரங்கத் திட்டம் ₹7,642 கோடி செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிரா அரசின் மின் உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுத்துத் தரும் பொறுப்பைத்தான் அதானிக்குச் சொந்தமான அதானி பவர் நிறுவனம் ஏற்றிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் மின் உற்பத்தித் துறை, இதற்கான நிலங்களை அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்ய மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது. இந்தக் காட்டினை வளர்த்து பாதுகாத்து அதனை நம்பி வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் அழியும் நிலையில் மாற்று வாழ்வாதாரத்துக்கென்று எந்த நிதியும் ஒதுக்க வில்லை.
அதாவது இழப்பீடுகளுக்காக வேண்டி ஒதுக்கப்பட்டுள்ள நிதி 15.22 கோடி மட்டுமே ஆகும். அதாவது நிலத்துக்கான விலை மட்டுமே. ஒருவேளை மக்கள் மறுவாழ்வுக்கென்று இனி கூடுதல் நிதியே ஒதுக்கீடு செய்தாலும் மக்கள் ஒருபோதும் பணத்துக்காக தங்கள் கிராமத்து வாழ்வாதாரமாக விளங்கும் பூர்வீக நிலங்களை இழக்க ஏற்கமாட்டார்கள். யாரும் நிலக்கரி சுரங்கத்திட்டத்தை ஏற்கவில்லை. 2017 ஆம் ஆண்டு ஆண்டிலிருந்தே இத்திட்டத்திற்கான தங்களின் எதிர்ப்பை ஜனநாயக பூர்வமான முறையில் பல வழிகளில் மக்கள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர்.
படிக்க: சத்தீஸ்கர்: பழங்குடியின மக்களை சித்திரவதை செய்யும் பா.ஜ.க அரசு
இந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக காடுகளை அழிக்க ஊராட்சி மன்றங்களின் முறையான அனுமதி எதையும் இவர்கள் பெற்றிருக்கவில்லை. 2024 ஜனவரி 15 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த திட்டத்திற்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஜூலை 2022-இல் கொடுத்திருந்த அனுமதியை சமூக மற்றும் சூழலியல் கேடு நிறைந்தது என்று கூறி ரத்து செய்து தீர்ப்பளித்தது. அந்த 209 பக்க தீர்ப்பு கவனத்துக்குரிய பல விஷயங்களை எடுத்துக்காட்டியது.
ஆனால் ஒன்றிய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2024 ஆகஸ்ட் மாதத்தில், அதாவது அடுத்த ஆறே மாதத்தில், மீண்டும் புதிய அனுமதியை வழங்கி இருக்கிறது என்பது சட்டத்தை மதிக்காத பாசிசப் போக்குக்கு முழுமையான சான்றாகும். எனவே இதற்கு எதிராக எழுத்தாளர் ரின்ச்சின் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் திரும்பவும் மேல்முறையீடு செய்திருக்கிறார். அந்த வழக்கு இன்னும் நிலுவையிலிருந்து வருகிற பொழுதே இப்படி நேரடியாக மாநில போலீசும் வனத்துறையும் சேர்ந்து கொண்டு அதானியின் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு மேல் கை எடுத்து வேலை செய்கின்றன.
சத்தீஸ்கர் மாநில அரசின் இந்த நடவடிக்கை காடுகளில் வாழும் ஆதிவாசி மக்களின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் பாசிச தாக்குதலாகும். எனவே அம்மக்களின் போராட்டங்களை நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் உழைக்கும் மக்களும் ஆதரித்துத் துணை நிற்க வேண்டும்.
சுந்தரம்
செய்தி ஆதாரம்: தி வயர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram