சுங்கக் கட்டண உயர்வு: நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வழிபறிக் கொள்ளை

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் பல்வேறு வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சுங்கக் கட்டண கொள்ளையானது அவர்களுக்கு கிடைக்கின்ற சொற்ப ஊதியத்தையும் பறித்து அவர்களது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகின்றது.

0

மிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியன்று 38 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அடாவடித்தனமாக உயர்த்தியுள்ளது. ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் 1 அன்று அரியலூர், புதுக்கோட்டை உள்பட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது மீண்டும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மக்களிடம் வழிபறியில் ஈடுபட்டுள்ளது.

ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 892 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியிலும் 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகையிலும் செயல்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த சுங்கச்சாவடிகளை ஒப்பந்த அடிப்படையில் 14 ஆண்டுகளுக்கு தனியார், காப்பரேட் நிறுவனங்களிடம் தாரைவார்த்து, அவை கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதற்கு துணைபோய் கொண்டிருக்கிறது

அதேபோல், தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவிகிதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது, 1992-ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதத்திலும், 2008-ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதத்திலும் என ஆண்டுக்கு இருமுறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.

அக்கொள்ளையின் அங்கமாகவே, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளின் சுங்கக் கட்டணம் 5 முதல் 7 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக ரூ.5 முதல் ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருவழி கட்டணத்தில் மாற்றமின்றி, தற்போது வசூலிக்கப்படும் ரூ.105 தொடர்கிறது. ஆனால், பலமுறை பயணிப்பதற்கான கட்டணம் ரூ.155-இல் இருந்து ரூ.160-ஆக் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.70 உயர்த்தப்பட்டு ரூ.3,170-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


படிக்க: வத்தலகுண்டு: மக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி!


அதேபோல், இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.185-ஆகவும், பலமுறை பயணிப்பதற்கான கட்டணம் ரூ.275-ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.125 உயர்த்தப்பட்டு ரூ.5,545-ஆகவும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், கனரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணக் கட்டணம் ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.595-ஆகவும், பலமுறை பயணிப்பதற்கான கட்டணம் ரூ.890 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.17,820-ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

இக்கட்டண உயர்வு பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தைப் படுகுழியில் தள்ளுவதாக அமைந்துள்ளது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் பல்வேறு வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சுங்கக் கட்டண கொள்ளையானது அவர்களுக்கு கிடைக்கின்ற சொற்ப ஊதியத்தையும் பறித்து அவர்களது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகின்றது.

மேலும், பல தொழிலாளர்கள் தினமும் ஆட்டோ, ஆம்னி வேன் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு ஓட்டித்தான் தங்களின் வாழ்நாளை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரமும் இக்கொள்ளையால் கேள்விக்குறியாகிறது.

மறுபுறம், சுங்கக் கட்டண உயர்வின் எதிரொலியால் அரிசி, கோதுமை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயரும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனால் சுங்கக் கட்டண உயர்வின் சுமையும் உழைக்கும் மக்களின் தலையிலேயே சுமத்தப்படுகிறது.

மேலும், இந்த சுங்கக் கட்டண உயர்வானது எந்தவித விதிகளையும் பின்பற்றாமல் பகல் கொள்ளையாகவே நடந்தேறி வருகிறது. சான்றாக, காலாவதியான சுங்கச்சாவடிகளுக்கு 40 சதவிகிதம்தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அவற்றையெல்லாம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பின்பற்றுவதில்லை. ஏன், தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகள் எத்தனை செயல்பட்டு வருகின்றன என்பது போன்ற ஆவணங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இல்லை.


படிக்க: திருமங்கலம் டோல்கேட்டின் அடாவடித்தனம் – முற்றுகையிட்ட கிராம மக்கள்


மேலும், இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில் 60 கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்; மாநகராட்சி, நகராட்சி எல்லைகளைச் சுற்றி 10 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி இருக்கக்கூடாது போன்ற விதிகள் உள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் கழிவறை காகிதங்களாகக் கூட மதிக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் நகரத்திற்கு அருகிலேயே சுங்கச்சாவடிகள் அமைத்து மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கின்றன.

சாலைகளைப் பராமரிப்பதற்கும், சுங்கச்சாவடிகளில் கழிப்பறை, ஓய்வு அறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்காகவுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூடி மறைக்கின்றது. ஆனால், சாலைகளும் முறையாகப் போடப்படுவதில்லை, போடப்பட்ட சாலைகளும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. ஆனால், மோடி அரசின் கீழுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கூட்டுடன் சுங்கக் கட்டணத்தை அடிக்கடி உயர்த்தி மக்களையும் தொழிலாளர்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒட்டச்சுரண்டுகின்றன.

மறுபுறம், தமிழ்நாட்டின் மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் சட்டவிரோத சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவற்றையெல்லாம் தன் காதில் போட்டுக்கொள்ளாத ஒன்றிய அரசு சுங்கக் கட்டணத்தை உயர்த்தி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது.

எனவே, சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவை சுங்கச்சாவடிகளை அகற்றுவதை நோக்கிய பெருந்திரள் போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க