மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் தி.மு.க. அரசு

வாக்குறுதி 153-இல் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யப்போவதாக தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மின்வாரியத்தில் 13 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தற்போது வரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வருகிறது.

0

ணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் செப்டம்பர் 23 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களுக்கு முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஆட்சி மாறினதே தவிர மின்வாரிய ஊழியர்களின் அவல நிலை மாறவில்லை.

இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி 153-இல் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யப்போவதாக தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மின்வாரியத்தில் 13 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தற்போது வரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வருகிறது.

எனவே, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க அரசின் மீது ஆத்திரமடைந்த மின்வாரிய ஊழியர்கள் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (COTEE – CITU) தலைமையில் செப்டம்பர் 23 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 50–க்கும் மேற்பட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.


படிக்க: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையை உலுக்கிய உரிமைக் குரல்!


மின்வாரிய ஊழியர்கள் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ள வாழ்வாதார கோரிக்கைகள்:

ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும்.

தி.மு.க அரசு வாக்குறுதி 153-ன்படி மின் வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மின்வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.


படிக்க: 9-வது நாளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க அரசு!


மேலும் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் தி. ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில் “ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யாமல் அரசு ஏமாற்றி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு எந்தவிதமான பணி பாதுகாப்பும் இல்லை. ஒப்பந்த ஊழியர்களை அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்யாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று தி.மு.க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக, கடந்த 2 மாதங்களில் தூய்மைப் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களின் பணிநிரந்தரம் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தி.மு.க அரசின் கார்ப்பரேட் நடவடிக்கைக்கு எதிராகவும் பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தி.மு.க அரசின் ஒடுக்குமுறைகளை எல்லாம் மீறி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அவையெல்லாம் ஊடக வெளிச்சம் பெறாமல் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.

2030- ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி கார்ப்பரேட் சேவை செய்து வரும் தி.மு.க அரசு கல்வி, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, பணி நிரந்தரம் செய்யாதது போன்றவற்றின் மூலம் கார்ப்பரேட் மயமாக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராகப் போராடுகின்ற மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது தன்னுடைய அடியால் படையான போலீசை வைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

எனவே தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்காக தனித்தனியான குடையின் கீழ் போராடுகின்றவர்களின் போராட்டங்கள் தி.மு.க அரசின் கார்ப்பரேட் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதன் மூலமே தி.மு.க அரசைப் பணிய வைக்க முடியும்.

செய்தி ஆதாரம்: தீக்கதிர்


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க