ம.பி-யில் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!

மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.

0

பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் “கோல்ட்ரிஃப்” (Coldrif) எனும் இருமல் மருந்தை உட்கொண்ட ஏழு வயதிற்குட்பட்ட 20 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து கொடூமான முறையில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் சிந்தவாரா மாவட்டத்தில் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், செப்டம்பர் 7 முதல் பாராசியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்மருத்துவமனையில் குழந்தைகள் நல மருத்துவர் பிரவீன் சோனி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை பரிந்துரைத்துள்ளார். ஆனால், இம்மருந்தை உட்கொண்ட குழந்தைகளுக்கு சில நாட்களில் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினையும் முகத்தில் வீக்கமும் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் சிறுநீரகம் செயலிழந்து 20 குழந்தைகள் அடுத்தடுத்து கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இந்தியா முழுவதுமுள்ள மக்களிடையே அதிர்ச்சியையும் பெற்றோர்களிடத்தில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மருந்தை உட்கொண்ட மேலும் ஐந்து குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, இம்மருந்தை உற்பத்தி செய்த, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள ஸ்ரேசன் ஃபார்மாசூட்டிகல்ஸ் (Sresan Pharmaceutical) மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் அக்டோபர் 2 அன்று வெளியிட்ட அறிக்கையில், “ஸ்ரேசன் ஃபார்மாசூட்டிகல்ஸ் ஆலையில் தயாரிக்கப்பட்ட கோல்ட்-ரிஃப் இருமல் மருந்தின் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவை தரமற்றவை என்பதும் அதன் சில மாதிரிகளில் 48.6 சதவிகிதம் டை-எத்திலீன் கிளைக்கால் (Diethylene glycol) இருப்பதும் தெரியவந்துள்ளது. இது கடுமையான சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும்” என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

டை-எத்திலீன் கிளைக்கால் நச்சுத்தன்மை வாய்ந்த கரிம சேர்மமாகும். இது இருமல் மருந்துகளில் துளியளவு கலந்தாலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, 0.1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இது இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதிகமாக கலக்கப்பட்டால் அது சிறுநீரத்தை செயலிழக்கச் செய்து உயிரைக் கொல்லும். ஆனால், கோல்ட்ரிஃ மருந்துகளில் 48.6 சதவிகிதம் டை-எத்திலீன் கிளைக்கால் கலக்கப்பட்டுள்ளது. இதனாலேயே, மத்தியப்பிரதேசத்தில் 20 பிஞ்சுக் குழந்தைகள் சொல்ல முடியாத வலியால் துடிதுடித்து செத்துள்ளனர்.

இந்நிலையில், குஜராத்தில் உற்பத்தி செய்யக்கூடிய “ரிலைஃப் சிரப்” (Relife sirup) மற்றும் “ரெஸ்பி-ஃப்ரெஷ் டி.ஆர்.” (Respifresh TR) ஆகிய இரண்டு இருமல் மருந்துகளில் டை-எத்திலீன் கிளைக்கால் இருப்பது அக்டோபர் 6 அன்று கண்டறியப்பட்டு அம்மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்த மாநிலங்களில் இருமல் மருந்துகளில் உயிரைக் குடிக்கக்கூடிய டை-எத்திலீன் கிளைக்கால் கலந்திருப்பது அம்பலமாகி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ஒன்றிய – மாநில அரசுகளோ 20 குழந்தைகளை காவு வாங்கிய பிறகே இம்மருந்துகளுக்கு தடை விதிப்பது, மருந்து நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.


படிக்க: மருந்துகளை சட்டவிரோதமாக விளம்பரம் செய்த பதஞ்சலி !


சான்றாக, ஸ்ரேசன் மருந்துகளுக்கும் அந்நிறுவனத்தின் உற்பத்திக்கும் ஆளும் தி.மு.க. அரசு தற்போது தடை விதித்துள்ளது. அதேபோல், மத்தியப்பிரதேச அரசும் இருமல் ஸ்ரேசன் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது; கோல்ட்ரிஃப் மருந்து உள்ளிட்ட 15 இருமல் மருந்துகளுக்கு தடை விதித்துள்ளது.

ஆனால், உரிமம் பெற்ற மருந்து ஆலையில் ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற விதியை மீறி, அந்த ஆலையில் 14 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஆய்வு மேற்கொள்ளாதது தற்போது அம்பலமாகியுள்ளது. இதனால் இம்மருந்துகள் எந்தவித சோதனைக்கும் உட்படுத்தப்படாமல் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், இந்நிறுவனம் 350-க்கும் மேற்பட்ட விதிமீறல்களில் ஈடுபட்டு வந்திருப்பதும் இருமல் மருந்தில் மிக மலிவான மூலப்பொருட்களை பயன்படுத்தியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்தே, தமிழ்நாடு – மத்தியப்பிரதேச அரசுகள் மேற்கொள்ளும் மேற்கண்ட நடவடிக்கைகள் யாவும் மக்களை ஏமாற்றுவதற்கும் அவர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்குமான நாடகங்கள் என்பது அம்பலமாகிறது.

முக்கியமாக, 2022ஆம் ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டைச் சேர்ந்த 70 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் அரங்கேறியது. அச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இந்தியாவில் மருந்துகளைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் அப்போது எழுந்தது. ஆனால், அதன் பிறகும் ஒன்றிய – மாநில அரசுகள் விதிமுறைகளைத் துளியும் பின்பற்றாமல் அப்பாவி குழந்தைகளைக் கொன்று வருகிறது. அதிலும், ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு குழந்தைகள், மக்களின் உயிரைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் தனக்கே உரிய பாசிச திமிருடன் நடந்து வருகிறது.

குறிப்பாக, ஒன்றிய – மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மருந்து உற்பத்தி நிறுவனங்களில் முறையாக ஆய்வு நடத்தாமல், தனியார் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மருந்து உற்பத்திக்கு அனுமதியளித்து வருகின்றனர். இதனால் இந்நிறுவனங்கள் தங்களுடைய லாபத்திற்காக தரமற்ற – உயிருக்கு ஆபத்தான மருந்துகளை உற்பத்தி செய்து வருகின்றன.

எனவே, மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.

இப்படுகொலையை நிகழ்த்திய ஒன்றிய – மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருந்து நிறுவனங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு தரமற்ற, உயிருக்கு ஆபத்தான மருந்துகளை தடை செய்ய வேண்டும். தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்கின்ற தனியார் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமையை இரத்து செய்ய வேண்டும்.

ஆனால், மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுப்பது போல நாடகமாடும் அரசுகளிடம் இக்குறைந்தபட்ச நடவடிக்கைகளை கூட எதிர்பார்க்க முடியாது. நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பது மட்டுமே அரசை நிர்பந்தித்து நம் பிஞ்சு குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்கு வழிவகுக்கும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க