கொடூரர்களும் தனவந்தர்களும் இந்துராஷ்டிரத்தின் அங்கங்கள்!

ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன.

குஜராத்தின் சூரத் மாவட்டத்தைச் சார்ந்த தொழிலதிபர் பாபுபாய் ஜிராவாலா, அம்ரேலி மாவட்டத்தின் ஜிரா கிராமத்தில் வசித்துவரும் 290 விவசாயிகளின் போலி கடன்களை அடைக்க ரூ.90 இலட்சம் கொடுத்து உதவியிருப்பதாக நவம்பர் மாத முதல் வாரத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதில், 1995 ஆம் ஆண்டில் ஜிரா கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில், அதன் நிர்வாகிகள் விவசாயிகளின் பெயரில் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இதனால் விவசாயிகள் கடந்த 30 ஆண்டுகளாக அரசின் திட்டங்கள், நிதி உதவி மற்றும் சட்டப்பூர்வமாகக் கடன் பெறும் தகுதியை இழந்து தவித்துவந்துள்ளனர். இந்நிலையை அறிந்த பாபுபாய் ஜிராவாலா தனது மூத்த சகோதரர் கன்ஷ்யாம்பாய் ஜிராவாலாவுடன் இணைந்து, ரூ.89,89,209 வங்கியில் டெபாசிட் செய்து விவசாயிகளுக்கு என்.ஓ.சி எனப்படும் ”நிலுவைத் தொகை இல்லை” என்ற சான்றிதழை தன் தாயின் நினைவு நாளில் வாங்கிக்கொடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இச்செய்தியை வெளியிட்டுள்ள ஊடகங்கள் பாபுபாய் ஜிராவாலாவின் மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும் புகழ்ந்து மட்டுமே பேசியிருக்கின்றன. அவை மறுப்பதற்கில்லை. ஆனால், வங்கி நிர்வாகிகளின் மோசடிகள் குறித்தும், அதன் விளைவாக 30 ஆண்டுகளாக விவசாயிகள் அனுபவித்த துயரங்கள் குறித்தும் பேச மறுத்திருக்கின்றன. அதாவது எதைப் பற்றிப் பேச வேண்டுமோ அதைப்பற்றிப் பேச மறுத்திருக்கின்றன.

இதன்மூலம், ஊடகங்கள் 30 ஆண்டுகளாக விவசாயிகளை நிர்க்கதியாகக் கைவிட்டிருக்கும் அரசின் மக்கள் விரோதத் தன்மையை மக்களிடம் இருந்து மறைக்கின்றன. அதற்கு மாறாக, தனவந்தரான பாபுபாய் போன்று அரசுக்கு எந்த குடைச்சலும் கொடுக்காமல் துன்ப துயரத்தில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிப் பணிகளை மேற்கொள்வதே சிறந்த சமூகப் பணி என்ற சிந்தனையை மக்களிடம் விதைக்கின்றன. ஊடகங்களின் இத்தகைய அபாயகரமான போக்கு ஆர்.எஸ்.எஸ்.-யின் பார்ப்பனிய சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கருங்காலிகள் நாட்டின் பெரும்பாலான ஊடகங்களில் ஊடுருவிய பிறகு மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது.


படிக்க: போலிகளை உருவாக்கும் குஜராத் மாடல்!


இவ்வாறு மேற்கூறிய செய்தியை விமர்சனக் கண்ணோட்டத்துடன் பகுத்துப் பார்ப்பது இக்காலகட்டத்தில் அவசியமானது. ஏனென்றால், கடந்த 35 ஆண்டுகளாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை மிகத் தீவிரமாக அமல்படுத்தி வந்துள்ளன; வருகின்றன. இதன் விளைவாக, அரசு மக்களுக்குச் செய்ய வேண்டிய கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளும் நீர்நிலைகளைப் பராமரிப்பது, பேரிடர்களிலிருந்து மக்களைக் காப்பது உள்ளிட்ட பணிகளும் கைகழுவப்பட்டு வந்துள்ளன; வருகின்றன.

குறிப்பாக, தற்போது நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் ஒன்றியத்திலும் பாசிச கொடூரர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்டி நாடு முழுவதும் தங்களுடைய ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். இக்கொடூரர்கள் அம்பானி, அதானி வகையறா கார்ப்பரேட்டுகளின் பொருளாதார ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற தங்களுடைய நோக்கத்திலிருந்து மறுகாலனியாக்கக் கொள்கைகளை மக்களின் எதிர்ப்பையும் மீறி மிகத் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். மேலும், இக்கொடூரர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் போலி வங்கிகள், அரசு அலுவலகங்கள் நடத்துவது போன்று மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய துறைகளில் மோசடிகள் இயல்பாக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமையில்தான் மக்களின் துயரங்களைக் கண்டு, தனவந்தரான பாபுபாய் போன்றவர்கள் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். மேலும், இந்தியாவில் இலட்சக்கணக்கான தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்குச் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், பீகாரில் செயல்பட்டு வரும் எஜூகேட் கேர்ள்ஸ் (Educate Girls) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமானது, 20 லட்சத்திற்கு மேற்பட்ட சிறுமிகளை கல்வி கற்க மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்திருப்பதாகவும், 24 லட்ச சிறுமிகளுக்கு மாற்று கற்றல் திட்டங்கள் மூலம் கல்வி கற்க உதவியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இச்செய்தியும் பாசிஸ்டுகள் ஆளும் மாநில அரசுகளின் மக்கள் விரோதத் தன்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஆகவே, மேற்கூறிய செய்திகளின் மூலம் நமக்குத் தெளிவாவது என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் ’புதிய இந்தியா’வில் (இந்துராஷ்டிரத்தில்) அரசால் மக்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், சேவைகள் அனைத்தும் புறக்கணிக்கப்படும்; தன்னார்வலர்களும் தனவந்தர்களும் அரசுக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படுத்தாமல் மக்களுக்கு உதவி செய்யலாம்; மக்களும் அவர்களைச் சார்ந்தே தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற முறைகளே நிலைநாட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க