நீலக்கொடி கடற்கரை திட்டம்: மீனவர்களிடமிருந்து பறிக்கப்படும் மெரினா!

நீலக்கொடி திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்துமே மீனவர்களை கடலுக்கு செல்லவிடாமல் தடுப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன.

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சாய்வு நாற்காலிகள்.

மீபகாலமாக, சென்னை மெரினா கடற்கரையில் மூங்கில் நிழற்குடைகள், சாய்வு நாற்காலிகள், தன்பட இடங்கள் (Selfie spots) போன்றவை அமைக்கப்பட்டு வருவதை சென்னை நகர மக்கள் அறிவர். “நீலக்கொடி மண்டலம்” (Blue Flag Zone) என்ற திட்டத்தின் கீழ் மெரினா கடற்கரையை அழகுப்படுத்துவது என்ற பெயரில் இம்மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மெரினா கடற்கரைக்கு செல்லும் மக்கள் இதுகுறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், பொழுதுபோக்கிற்காக அல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மெரினாவைச் சார்ந்துள்ள மீனவ மக்களோ இத்திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தையும் கடலையும் நாசமாக்கும் என்று போராடி வருகின்றனர். மீனவ மக்களின் இந்த எதிர்ப்பின் காரணமாகவே, தொடக்கத்தில் கலங்கரை விளக்கம் அருகே கொண்டுவரத் திட்டமிடப்பட்டிருந்த நீலக்கொடி கடற்கரை திட்டம், அண்ணா நீச்சல்குளம் அருகே மாற்றப்பட்டு 20 ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது‌.

கோவளம் நீலக்கொடி திட்டம்:
வலிநிறைந்த அனுபவம்

“நீலக்கொடி” (Blue Flag) என்பது “சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை” (FEE) எனும் டென்மார்க் நாட்டைச் சார்ந்த அரசு சாரா நிறுவனத்தால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அங்கீகாரச் சான்றிதழாகும். இது முறையான கழிவு மேலாண்மை வசதிகள், மருத்துவ உதவி மையங்கள், நீரின் தரம் உள்ளிட்ட சுற்றுச்சூழல், கல்வி மற்றும் பாதுகாப்பு சார்ந்த 33 அம்சங்களை பூர்த்தி செய்யும் கடற்கரைகள், சிறு படகுத் துறைமுகங்கள், சுற்றுலா படகுகளுக்கு அளிக்கப்படும் சுற்றுச்சூழல் குறியீடாகும்.

இந்த சர்வதேச அங்கீகாரத்தை பெற்றால் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்; நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று கூறி பல்வேறு நாடுகளும் இத்திட்டத்தை அமல்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றன. இதே காரணத்தைக் கூறிதான் இந்தியாவில் பாசிச மோடி அரசும் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசும் நீலக்கொடி திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் முதன்முதலாக 2021-இல் கோவளம் கடற்கரையில் நீலக்கொடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய பிறகு அக்கடற்கரையை வாழ்வாதாரமாக நம்பியிருந்த மக்களின் வாழ்நிலை தலைகீழாகிப் போனது.

நூற்றுக்கணக்கான கடைகள் இருந்த கோவளம் கடற்கரையில் தற்போது எந்தக் கடைகளையும் நம்மால் காண முடியவில்லை. மேட்டுக்குடியினர் மட்டுமே நுகரும் வகையில் அவர்களுக்குரிய ஆடம்பரத்துடன் ஓரிரு கடைகள் மட்டுமே ஆங்காங்கே தென்படுகின்றன.

மீனவர்கள் கடற்கரையில் தங்கள் படகுகளை நிறுத்துவதற்கோ வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை வைப்பதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இவையில்லாமல், மீன் பிடிப்பதற்கு கொடுக்கப்பட்ட பல்வேறு நெருக்கடிகளால், மீன்பிடித் தொழில் ஒன்றையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 500 குடும்பங்கள் நிர்கதியாகின.

எவரது உழைப்பால் கோவளம் கடற்கரை அதன் மிடுக்கான காட்சியில் தோற்றமளிக்கிறதோ இன்று அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, கடற்கரையே வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுமட்டுமின்றி, நீலக்கொடி திட்டத்தின் விளைவாக கோவளம் கடற்கரையின் இயற்கை அமைப்பே சிதைக்கப்பட்டு வருவதாக வேதனைப்படும் இயற்கை ஆர்வலர் சரவணன், “கோவளம் கடற்கரையில் எந்த விதிகளையும் மதிக்காமல் மணல் மேடுகளுக்கு மேலே கட்டுமானக் குப்பைகளை கொட்டுகின்றனர். கடற்கரைக்கு மிக அருகிலேயே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு என்ற அம்சமே இங்கு பின்பற்றப்படுவதில்லை. எந்தவொரு சுத்திகரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல், முகத்துவாரம் அருகில் தெற்கு எல்லையில் கற்கள் கொட்டப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் கழிவுநீரை அப்படியே கலந்துவிடுவார்கள்” என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்.

மீனவ மக்களை அகதிகளாக்கும் நீலக்கொடி திட்டம்

கோவளத்தை போலவே மெரினா கடற்கரையிலும் முதலில், கடற்கரையை சுத்தப்படுத்துகிறோம் என்று கூறி உழைக்கும் மக்கள் விரித்துள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்படும். இதனால் இந்த வியாபாரத்தையே நம்பியிருக்கும் சுமார் 2,430-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். ஏழை, எளிய உழைக்கும் மக்களை துரத்திவிட்டு, அவ்விடங்களில் மேட்டுக்குடியினருக்கான வியாபாரத்தை நடத்த தனியார் – கார்ப்பரேட் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

இந்த சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகத்தான் மெரினா கடற்கரையில் கடைவிரிப்பதற்கு அனைத்து வியாபாரிகளும் மாநகராட்சியில் பதிவு செய்து ஸ்மார்ட் அடையாள அட்டையை பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ‘அழகுப்படுத்துதல்’ என்ற பெயரில் மெரினாவில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்படும். இதனால், மெரினா கடற்கரையில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்திவரும் திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் மற்றும் அயோத்திக்குப்பம் ஆகிய சுற்றுவட்டார மீனவக் கிராமங்களிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்கதியாக்கப்படுவர். மேலும், கடற்கரைகளில் வியாபாரம் நடத்துபவர்களில் பெரும்பாலானோர் மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பெண்களே என்பதால் ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தின் வாழ்க்கையும் சுக்குநூறாகும்.

அரசு தரப்பிலிருந்து மாற்று தொழில் வசதியோ, குடியிருப்பு வசதியோ ஏற்படுத்தித் தரப்படாமல் மீனவர்கள் விரட்டியடிக்கப்படுவதால், அவர்கள் தங்கள் பிழைப்புக்காக வேறு மீனவ கிராமங்களில் குடியேறும் நிலைக்கே தள்ளப்படுகின்றனர். இவ்வாறு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சந்தைகளை இணைத்து, அனைத்து மீனவ சமுதாய மக்களையும் ஒரே இடத்தில் குவிப்பதால், அனைவரும் ஒரே பகுதியில் மீன்பிடிக்கும் நிலையும், மீனவ சமுதாயங்களுக்கிடையில் மோதல் போக்கு ஏற்படும் நிலையும் உருவாகும்.

மறுபுறம், மெரினா கடற்கரை மேட்டுக்குடியினருக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டால் தற்போது இருப்பதைப் போல உழைக்கும் மக்களால் அங்கு சென்று பொழுதுபோக்க முடியாது. விலைவாசி உயர்வு, உழைக்கும் மக்களை அச்சுறுத்தும் கட்டுப்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் என மெரினா கடற்கரை உழைக்கும் வர்க்கத்திடமிருந்து அந்நியமாக்கப்பட்டு, திறந்தவெளி வணிக வளாகத்தை (Mall) போல மாற்றியமைக்கப்படும். அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கு எந்த தனிப்பட்ட தேவைகளும் விருப்பங்களும் கூடாது, அவர்களுக்கென கலை – இலக்கிய, பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டே அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் கார்ப்பரேட்மயமாக்கப்பட்டு வருகிறது.

மெரினாவை அழிக்கும் நாசகரத் திட்டங்கள்

மெரினாவில் நீலக்கொடி திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காந்தி சிலை முதல் லூப் சாலையில் நொச்சி நகர் வரை 30 ஏக்கர் பரப்பளவில், திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய கடற்கரைகளுக்கான இரண்டாம் கட்டத் திட்டத்தை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள 40,000-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை எதிர்த்து கடந்த செப்டம்பர் 26 அன்று 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர். வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கடலில் மேற்கொள்ளப்படவிருக்கும் நாசகரத் திட்டங்களுக்கு போராடிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக, சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகக் கூறி, எண்ணூர் – மாமல்லபுரம் இடையே 92 கி.மீ. தூரத்திற்கு கடல்வழி மேம்பாலம் கட்ட தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இப்பாலம் கட்டப்பட்டால், முக்கியமான மீன்பிடிப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்வது தடைபடும்; கடல்வாழ் உயிரினங்களுக்கு அவசியமான அலை ஓட்டங்களையும் இப்பாலம் சீர்குலைக்கும் என்று மீனவ மக்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர்.

மேலும், சென்னை ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஆய்வு செய்வதற்கு ஓ.என்.ஜி.சி-க்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது மீன்பிடி மண்டலங்களைக் குறுக்குவதுடன், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைக்கும், கடலில் எண்ணெய் கசிவுகள் மற்றும் மாசுபாட்டின் அபாயத்தை அதிகரிக்கும்.

இவையன்றி, நொச்சிக்குப்பத்திலிருந்து நீலாங்கரை குப்பம் வரையில் 15 கி.மீ. நீளத்திற்கு கடல் இணைப்புப் பாலம் கட்டும் திட்டம், மெரினா, பெசண்ட் நகர் கடற்கரைகளில் கொண்டுவரப்படும் ரோப் கார் திட்டம், அடையாறு நதி முகத்துவாரத்தில் ‘அழகுபடுத்தும்’ பணிகள், மெரினா லூப் சாலை மேம்பாடுகள் உள்ளிட்ட திட்டங்களையும் மீனவர்கள் எதிர்த்தனர்.

நீலக்கொடி கடற்கரை திட்டத்தை எதிர்த்து மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

மேலும், கடற்கரை ஓரங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டங்கள் கடல் அரிப்பை தீவிரப்படுத்தி இயற்கை சீரமைப்பை கெடுக்கக் கூடியதாகும். குறிப்பாக, இத்திட்டத்திற்கு குறிவைக்கப்பட்டுள்ள கடற்கரை பகுதிகள் பெரும்பாலும் “கடலோர கட்டுப்பாட்டு மண்டலங்கள்- I” (CRZ- I: Coastal Regulation Zone- I) என்ற நில வகையின் கீழ் வருகின்றன. இப்பகுதிகள் சூழலியல் உணர்திறன் கொண்ட பகுதிகளாக உள்ள காரணத்தால் தொழில்துறை நடவடிக்கைகளும் வளர்ச்சித் திட்டப் பணிகளும் இந்த நிலப்பரப்பில் தடை செய்யப்பட்டுள்ளன.

எனினும், கடந்த 2020-ஆம் ஆண்டில், கடலோரக் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உட்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதியளித்தது. இதன் மூலம் இயற்கையை சீரழிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டப்பூர்வமாகவே அனுமதிக்கப்பட்டு எந்தத் தங்குதடையுமின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடற்கரைகளிலிருந்து கடலுக்குள் நீளும் வகையில் நிறுவப்படும் கடல்சுவர்கள் (Sea walls), கடல் வளைவுகள் (Bail Arches), தடுப்புச் சுவர்கள் (Breakwaters) போன்ற செயற்கையான கட்டமைப்புகள் மண் மற்றும் அலைகளின் இயற்கையான இயக்கத்தைத் தடுத்து, ஒருபுறம் மட்டும் மண் குவிந்து, மண் அரிப்பைத் தீவிரப்படுத்துகிறது. திருச்செந்தூர் கடலில் இக்கட்டமைப்புகள் நிறுவப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆழம் நிறைந்த மற்றும் மிக நீளமான பள்ளம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வளர்ச்சி என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள மேற்குறிப்பிட்ட திட்டங்கள் இயற்கையின் அமைப்பை சீர்குலைப்பதுடன் கடலையே நாசமாக்கும் என்பதை நாம் உணரவேண்டும். இவ்வாறான செயல்பாடுகள் இயற்கை சமநிலையில் சீரற்ற தன்மையை ஏற்படுத்தி, உலகை அச்சுறுத்திவரும் காலநிலை மாற்றத்தை இன்னும் தீவிரப்படுத்தும்.

‘நீலக்கொடி’ – மறுகாலனியாக்கத்தின் ஓர் அங்கம்!

இதுவரை இந்தியாவிலுள்ள 12 கடற்கரைகளுக்கு நீலக்கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதில் சென்னையின் கோவளம் கடற்கரையும் அடங்கும். அந்தவகையில், நாட்டிலுள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் நீலக்கொடி அங்கீகாரம் பெறும் நோக்கில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே, மெரினா கடற்கரை, கடலூரின் சில்வர் கடற்கரை, காமேஷ்வரம் கடற்கரை (நாகப்பட்டினம்), அரியமான் கடற்கரை (இராமநாதபுரம்) ஆகிய இடங்களில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இதனை இன்னும் விரிவுப்படுத்தும் திட்டத்திற்கான அறிவிப்பை ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி மற்றும் தூத்துக்குடியில் குலசேகரப்பட்டினம், அடுத்ததாக கீழ்ப்புதுப்பட்டு (விழுப்புரம்), சாமியார்பேட்டை (கடலூர்) உள்ளிட்ட கடற்கரைகளிலும் நீலக்கொடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

“தமிழ்நாடு கடல் வளங்களை நிலையாகப் பயன்படுத்துதல் மற்றும் நீலப் பொருளாதாரம்” (TN SHORE- Tamil Nadu Sustainably Harnessing Ocean Resources and Blue Economy) திட்டத்தின் கீழ் ஒரு கடற்கரைக்கு நான்கு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேற்கொள்வதற்கு தேவையான சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழை வழங்கி, “தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம்” (TN CZMA – TamilNadu Coastal Zone Management Authority) இத்திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது.

மேலும், ‘சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்களை’ கண்காணிப்பதற்கு “கடல் உயரடுக்குப் படை” (Marine Elite Force) எனும் தனிப்படையை ஒன்றிய அமைச்சகம் அமைத்துள்ளது. ஏற்கெனவே, இராமநாதபுரம் கடற்கரை பகுதியில் இந்த படை பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னையின் கடலோரப் பகுதி முழுவதும் இந்த படையினரை அமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரையிலிருந்து சில மைல் தூரம் மீன்பிடித்துவரும் பாரம்பரிய மீனவர்கள் கடலிலிருந்து விரட்டியடிக்கப்படுவதுடன், நாளை மீனவர்கள் எல்லோரையும் தங்கள் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிப்பதற்கு இந்த படை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படும்.

இந்தத் திட்டப்பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதற்கு “ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைக்கான சமூகம்” (SICOM- Society for Integrated Coastal Management) என்ற அமைப்பை ஒன்றிய அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பானது, உலக வங்கியின் திட்டங்களில் ஒன்றான “ஒருங்கிணைந்த கடலோர மண்டல மேலாண்மை” (ICZM – Integrated Coastal Zone Management) திட்டத்திற்கேற்ப இயங்கும்.

இவையனைத்தும், பாரம்பரியமான முறையில் மேற்கொள்ளப்படும் மீன்பிடித் தொழிலை ஒழித்துக்கட்டிவிட்டு அதனை கார்ப்பரேட்மயமாக்கும் சதிவேலைகள் அரங்கேறி வருவதை துலக்கமாகக் காட்டுகின்றன.

1990-களிலிருந்து மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்திவரும் கருவிகளில் ஒன்றான உலக வங்கியானது உலக நாடுகளிலுள்ள அனைத்துத் துறைகளையும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் கோரப்பிடியில் கொண்டு‌ வருவதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த நீலக்கொடி திட்டத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

குறிப்பாக, கடலில் அம்பானி – அதானி கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சாகர் மாலா போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பவே இத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லும் தி.மு.க. அரசு இந்தக் கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க. உடன் கைகோர்க்கிறது. “சர்வதேச அங்கீகாரம்” என்ற ஒற்றை அம்சத்தை ஊதிப்பெருக்கி இதற்குப் பின்னால் பொதிந்துள்ள மாபெரும் சதித்திட்டம் மூடிமறைக்கப்படுகிறது.

உழைக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி!

நீலக்கொடி திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்துமே மீனவர்களை கடலுக்கு செல்லவிடாமல் தடுப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளன. ஏனெனில், காலங்காலமாக கடலுக்கருகே வாழும் பூர்வகுடி மக்களான மீனவ மக்களே கடலின் பாதுகாவலர்கள். கடலில் எண்ணெய் கழிவுகள் ஏதேனும் கலந்துவிட்டால் துடிதுடிப்பவர்களும், கடலை நாசமாக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிராக நெஞ்சுரத்துடன் போராடுபவர்களும் மீனவ மக்களே ஆவர்.

எனவே, மீனவ மக்களை விரட்டியடித்தால் மட்டுமே கடற்கரையிலிருந்து நடுக்கடல் வரை அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க முடியும் என்ற கெடு நோக்கத்திலேயே அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

சென்னை நகரத்தில், ‘ஸ்மார்ட் சிட்டி’, ‘சிங்கார சென்னை 2.0’ போன்ற நகரமயமாக்கல் திட்டங்களின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பூர்வகுடி மக்களிடமிருந்து நகரம் பறிக்கப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து விவசாய நிலங்கள் பறிக்கப்படுகிறது. பழங்குடியின மக்களிடமிருந்து காடு, மலைகள் பறிக்கப்படுகிறது. அதேபோல், நீலக்கொடி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் பூர்வகுடி மீனவ மக்களிடமிருந்து கடல் பறிக்கப்படுகிறது.

கடல், காடு, நகரம் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கப்பட்டு மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்கள் அகதியாக்கப்படுகின்றனர். மேலும், நகரம் முதல் கடற்கரை என அனைத்தும் நவீன வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்டு அங்கு மேட்டுக்குடியினருக்கு சேவை செய்வோரோக அடித்தட்டு உழைக்கும் மக்கள் இருத்தப்படுகின்றனர்.

பாசிச பா.ஜ.க. இந்தியாவில் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பிறகு இப்போக்கு தீவிரப்படுத்தப்பட்டு இந்தியா முழுவதும் உழைக்கும் மக்கள் நாடோடியாகி வருகின்றனர். ஆனால், பா.ஜ.க-வை எதிர்ப்பதாக சொல்லிக்கொள்ளும் தி.மு.க. அரசும் இதில் முன்னங்கால் பாய்ச்சலில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீலக்கொடி திட்டமும் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் கார்ப்பரேட் நலத் திட்டங்களும் இதனை நிரூபிக்கின்றன.

‘சமூகநீதி’, ‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்று பீற்றிவரும் தி.மு.க. அரசாங்கம், “ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” என்ற பெயரில் தமிழ்நாட்டை கூறுபோட்டு கார்ப்பரேட்டுகளிடம் அடகுவைத்து தமிழ்நாடு மக்களுக்கு துரோகமிழைத்து வருகிறது. பரந்துபட்ட மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமாக மட்டுமே உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இத்தகைய கார்ப்பரேட் திட்டங்களுக்கு முடிவுகட்ட முடியும்!


ஜென்னி லீ

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க