அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம் – வஞ்சிக்கும் தி.மு.க. அரசு

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், ஆளும் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.

0

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 10-ஆம் தேதி முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை தேர்வுகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உருவான பல்வேறு நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் காரணமாக, 2013-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழ்நாடு அரசு கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து, 6,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைகளுக்குப் பணி நிரவல் செய்யப்பட்டனர்..

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், ஆளும் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.

போராடும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளாவன:

  • 7-வது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகைகள் மற்றும் முனைவர் பட்டத்திற்கான ஊக்கத்தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
  • அயற்பணியிடத்தில் (On Deputation) உள்ள ஆசிரியர்களை அவர்கள் தற்போது பணிபுரியும் கல்வி நிறுவனங்களிலேயே உடனடியாக உள்ளிணைப்பு செய்ய வேண்டும்.
  • பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள காலியிடங்களை அயற்பணியிட ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
  • யு.ஜி.சி. மற்றும் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி, ஒருவருக்கு வாரத்திற்கு 16/14 மணிநேரம் என்ற வேலைப் பளுவின் அடிப்படையில் கணக்கிட்டு, பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களைத் திரும்ப அழைக்க வேண்டும்.
  • ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு அரசுத் துறைகளைப் போலவே ஓய்வுபெற்ற உடனே அனைத்துப் பணப்பயன்களும் வழங்க வேண்டும்.
  • ஆட்சிமன்றக் குழு மற்றும் கல்விக் குழுக்களில் (Academic Council) ஆசிரியர் சங்கங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
  • அனைத்து நிர்வாகப் பொறுப்புகளின் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
  • மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த அனைவரும் நீக்கப்பட்டு, புதியவர்கள் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஆசிரியர்கள், மாணவர்களின் தேர்வுகளைப் புறக்கணித்துள்ளனர்.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நிர்வாக அலுவலக கட்டடத்தில் உள்ள அனைத்து கதவுகளையும் மூடியது. அதனையெல்லாம் பொருட்படுத்தாத ஆசிரியர்கள் அலுவலகக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் அமர்ந்து உறுதியுடன் போராடினர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் போராட்டக்குழு அறிவித்தது.

இந்நிலையில், நவம்பர் 15-ம் தேதி தி.மு.க. அமைச்சர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் அறிவுடைய நம்பி, பதிவாளர் சிங்காரவேலு ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். ஆசிரியர்களின் கோரிக்கைகளை  விரைந்து பரிசீலித்து நிறைவேற்ற இருப்பதாக எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தால் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு  நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க